இழந்து போனதை தேடவும், இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் இப்பூமிக்கு வந்தார்
. தேவனோடு ஆதிமக்கள் கொண்டிருந்த ஐக்கியத்தை அவர்கள் அன்று பாவஞ்செய்ததினால் இழந்து விட்டார்கள். அதே ஐக்கியத்தை தேவன்தாமே, மக்களோடு மறுபடியும் ஏற்படுத்திக்கொள்ளவே இயேசு கிறிஸ்து பூமிக்கு அனுப்பப்பட்டார். அவர் மனுமக்களுக்காக பஸ்கா பலியாக சாவதற்காகவும் 3ம் நாளிலே உயிரோடு எழும்புவதற்காகவுமே அவர் பூமியில் பாலகனாக பிறந்தார். இயேசு கிறிஸ்து இப்பூமியிலே வாழ்ந்த காலத்தின் சகல நாட்களிலும் இதனையே பேசுகின்றவராகவே காணப்பட்டார். இதனை இயேசு கிறிஸ்து தாமே தம் வாயினாலேயே நான்கு முறையாக தம் சீஷர்களுக்கு அறிவித்துள்ளார். (மத்.16:21, 17:22, 20:19, 26:32) அதே சமயம் அநேகர் கூட்டமாய் அவரைச் சுற்றி கூடி நிற்கையிலும் அடையாளமாகவும், உவமானமாகவும் தாம் மரிக்கப்போவதாகவும் பின் 3ஆம் நாளிலே உயிரோடு எழும்ப இருக்கிறார் என்றும் அவர்தாமே கூறியும் உள்ளார். (யோவான் 2:19, மத்.12:39)
உலகிலே அநேக மதங்கள், சரித்திரங்கள் தோன்றியுள்ளன. ஆனால் அந்த மதத்தை அல்லது அந்த சரித்திரத்தை படைத்த தலைவன் அல்லது அதன் ஸ்தாபகன் மரிக்கும் போது அந்த சரித்திரம் முடிவடைந்து விடுகிறது. ஒரு ஐக்கியம் உருவாகுகிறது. அதிலே பெரிய பெரிய எழுப்புதலையும், அற்புதங்களையும் ஏராளமாய் கண்டிருக்கலாம். ஆனால் அதனை உருவாக்கிய ஸ்தாபகன் மரிக்கும் போது அவரோடு அந்த சரித்திரம், ஐக்கியம் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது. ஆனால் கிறிஸ்தவ மதமானது கிறிஸ்துவின் மரணத்தினால் முடிவடையவில்லையே. அது ஒரு தொடக்கம் மாத்திரமே கிறிஸ்தவம் இயேசு கிறிஸ்துவின் மரணத்திலே ஆரம்பமாகிறது. அது இன்னும் முடிவு பெறவில்லை அதனை எவராலும் ஒருபோதும் முடித்து வைக்கவும் கூடாது, முடியாது.
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணமும் உயிர்த்தெழுதலும் உலக தோற்றத்திற்கு முன்பாகவே தீர்மானிக்கப்பட்டதாகும். (வெளி 13:8) ஆதியாகமத்திலே இயேசு கிறிஸ்துவின் பஸ்கா பலியை ஒரு நிழலாட்டமாக ஆபிரகாம் ஈசாக்கினை பலிசெலுத்த மோரியா மலைக்கு சென்ற காட்சியில் காணமுடிகிறது. மேலும் இச்சம்பவம் தீர்க்கத்தரிசனமாக உரைக்கப்பட்ட வாக்குத்தத்தத்தையும் ஆதியாகமம் 3:15யில் வாசிக்கின்றோம். யாத்திராகமத்திலே, வெண்கல சர்ப்பம் உயர்த்தப் பட்டதின் வாயிலாக வனாந்தரத்திலே இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நிழலாட்டமாய் காணமுடிகின்றதே. பின்பு லேவியராகமத்திலே, பஸ்கா பலியினை செலுத்திய பிரதான ஆசாரியனின் வாயிலாகவும் இயேசுகிறிஸ்துவும் நித்திய ஆசாரியனாக, தம்மையே பஸ்கா பலியாக சிலுவையில் ஒப்புக்கொடுத்ததை காணமுடிகின்றதே
. இயேசுகிறிஸ்து தம் சீஷர்களோடு 3 1/2 வருட காலம் வாழ்ந்து, தாம் அறிவித்துள்ளபடிக்கே சிலுவைக்குத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார். சிலுவையிலே மூன்று கோர ஆணிகள் ஆண்டவரை சிலுவை மரத்திலே பற்றியிருக்கச் செய்யவில்லை, மாறாக அவர் மக்கள் மீது கொண்டுள்ள அன்பே அவரைச் சிலுவையில் பற்றிக் கொள்ளச் செய்தது என்பதே உண்மையாகும். ஆனால் இயேசு கிறிஸ்துவோ சிலுவையில் மரித்து அடக்கம்பண்ணபட்டபின், அவரைப் பின்பற்றின 11 சீஷர்களும் ஏமாற்றமடைந்தவர்களாக, யூதர்களுக்கு பயந்தவர்களாக அடைபட்ட அறைகளிலே காணப்பட்டார்கள். ஒருசில பெண்கள், கல்லறைக்குச் சென்று, அவர் உயிர்த்தெழுந்துள்ளதை பல ஆதாரபூர்வமாக கண்டும், கேட்டும், கல்லறையிலே இருந்த தூதனின் செய்தி வாயிலாகவும் கேட்டும் இயேசு கிறிஸ்து தாமே மரியாளை பெயர் சொல்லி அழைத்து சில செய்திகளை கூறியதைக் கேட்டும் எவருமே இயேசுகிறிஸ்து உயிரோடிருக்கிறார், அவர் ஏற்கனவே உயிர்த் தெழுந்துவிட்டார் என்பதை அறியாதவர்களாகவே காணப்பட்டார்கள். இயேசுவை நேரில் சந்தித்து கண்டு பேசிய, பெண்கள் கூறிய உண்மைகளையும் நம்பக் கூடாதவர்களாகவே இருந்தார்கள். இத்தனை உண்மைகளையும் சத்தியங்களையும் கண்டும், கேட்டும், அறிந்தபின்பும் இரண்டு பேர்கள் துக்கத்தோடு எம்மாவு கிராமத்திற்கு நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். இயேசு தாமே அவர்களோடு கூட நடந்து அவர்களுடைய துக்கத்திற்கான காரணத்தை கேட்ட போது, அவர்கள் கூறியது இயேசு கிறிஸ்துவை வரப்போகிற மேசியா என்று எதிர்பார்த்திருந்தோம். அவர் வந்து ரோமர்களின் கையிலிருந்து தங்களை விடுவிப்பார் என்றும் எண்ணியிருந்தோம். ஆனால் ஏமாற்றமே அடைந்தோம். அவரை சிலுவையில் அறைந்து கொன்று விட்டார்கள். அவரை கல்லறையிலும் அடக்கமும் செய்துவிட்டார்கள். ஆனால் ஒரு சிலர் அவர் உயிர்த்தெழுந்துவிட்டார் என்றும் கூறிவருகின்றார்கள். அவரைக் கண்டதாகவும், அவரே அவர்களிடம் பேசினதாகவும் கூறுகின்றார்கள். இவையெல்லாமே புரியவில்லையே நம்பக்கூட முடியவில்லையே என்றார்கள். ஆகவே தான் அவர்கள் இயேசு கிறிஸ்து இப்போது உயிரோடு இல்லை என்பதாகவே தீர்மானித்து துக்கத்தோடு நடந்த சம்பவங்களை இயேசு கிறிஸ்துவிடமே கூறியுள்ளார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ இவற்றையெல்லாம் அமைதியாக கேட்டு விட்டு தம்மைப்பற்றி (இயேசு கிறிஸ்துவைப் பற்றி) கூறப்பட்டுள்ள மோசே காலத்து ஆகமம் புஸ்தகங்களிலிருந்தும், வேதத்திலுள்ள தீர்க்கத்தரிசன புஸ்தகங்களிலுமிருந்து ஒவ்வொன்றாய் விளக்கி பேசிய போது அவர்களின் இருதயம் கொழுந்து விட்டு எரிந்தது. ஆனால் அவர் பேசியதை விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களாகவே காணப்பட்டார்கள். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அவர்களுடைய அவிசுவாசத்தையும் மந்த இருதயத்தையும் கண்டு அவர்களை கடிந்து கொள்ளவில்லை. ஆக்கினைக்குள்ளாகவும் தீர்ப்பளிக்கவில்லை. அவர் கூறிய ஒரு சிறு வார்த்தை Oh Fool, புத்தியில்லாதவர்களே என்று மட்டுமே கூறினார்.
அருமையானவர்களே நாம் இப்பொழுது இயேசுகிறிஸ்துவின் மரணத்தைப்பற்றி அறிந்துள்ளோம். அவர் உயிர்த்தெழுந்துள்ளார் என்றும் பல சம்பவங்கள் மூலம் அறிந்தும் உள்ளோம். ஈஸ்டரையும் பண்டிகையாக கொண்டாடியும் உள்ளோம். ஆனாலும் நாம் இன்னும் மந்த இருதயமுள்ளவர்களாகவும், துக்கமுள்ளவர்களாகவும் இருப்பது ஏன்.? தேவன் நம்மைப் பார்த்து புத்தியில்லாதவர்களே Oh Fool என்று மட்டுமே அழைக்கின்றார். ஏனெனில் அவர் உயிர்த்தெழுந்தார் என்பது மட்டுமல்ல அவர் இன்றும் உயிராடிருக்கிறார். He lives today என்பதினை நாம் உண்மையாயும் உத்தமமுமாயும் அறிந்து உணர்ந்திடவில்லையே. இதனை எப்பொழுது அறிந்திட முடியும்? எப்பொழுது நமது இருதயம் அவருக்காக கொழுந்துவிட்டு எரியும்? அவர் எனக்குள் இன்று உயிரோடிருக்கின்றார் என்று எப்போழுது கூறமுடியும்? ஆண்டவரின் வார்த்தைகளை தினமும் வாசித்து அறிந்து அவரோடு நாள்தோறும் நடந்து வரும் வாழ்வை அனுபவமாக கொண்டிருந்தாலே மட்டுமே அவர் நமக்குள் இன்றும் உயிரோடு வாழ்கின்றவராயிருப்பார். நம் வாழ்நாள் பரியந்தம் ஆணடவரோடு எம்மாவூருக்கு சென்ற சீஷர்களைப் போன்று அனுதினமும் உறவாடி நடந்து செல்கின்றவர்களாகவே காணப்படுவோமாக. அவர்களுக்குள்ளே மாத்திரமே அவர் ஜீவிக்கின்றவராயிருக்கின்றார். He lives in us.
இந்த அனுபவம் இல்லாதவர்களாகவே பெரிய வெள்ளிக்கிழமை, ஈஸ்டர் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவற்றோடு கிறிஸ்துவின் உயிர்த் தெழுதலின் பண்டிகையும் நிறைவு பெற்றுவிடுகின்றது. எனது நாசரேத் தூய யோவான் பேராலயத்தின் எல்லா பெரிய வெள்ளிக்கிழமையன்றும் ஆராதனையில் இறுதி பவனி பாடலாக பாடப்படும் இறுதி பாடல் இவ்வாரானதே "மரித்தாரே கிறிஸ்தேசு உனக்காக பாவி" என்று, எனக்காக பாவி என்று எவர்களெல்லாரும் கருத்தோடு படிக்கின்றார்களோ அவர்களுக்குள்ளேயே கிறிஸ்து உயிரோடிருக் கின்றவராயிருக்கின்றார் என்பதே உண்மையாகும்
அருமையானவர்களே அன்று சீஷர்களிடம் காணப்பட்ட அவிசுவாசம், சந்தேகம், நம்பப்படாதது யாவுமே, பாவங்களாக கருதப்படுவதில்லை. ஏன்?, எப்படி? என்று கேள்வி கேட்பதும் தவறு அல்ல. இவையெல்லாமே விசுவாசத்திற்கு முந்தின படிக்கல் மட்டுமே ஆகும். பலவிதமான வேதனைகள், சோதனைகள், பயங்கள் தோல்விகள் மத்தியில் நாம் தேவனை சந்தேகிக்கின்றோம். ஏன்? எப்படி? என்று தேவனை கேள்வியும் கேட்கின்றேம். உண்மையான நண்பன் கைவிட்டு விடுகின்றான் பெற்றோரும் கைவிட்டு விடுகின்றார்கள். அவ்வமயம் இது போன்ற கேள்விகளை கேட்டும் விடுகின்றோம். அப்போது ஆண்டவரையே மறுதலிக்கும் அளவிற்கு கேள்விகளையும் கேட்கின்றோம். ஆண்டவர் வேதாகமத்திலே இப்பேர்பட்டவர்களை, ஒருபோதும் சபிக்கவில்லையே ஆக்கினைத்தீர்ப்பையும் அவர்களுக்கு எதிராக அளிக்கவில்லையே. இவ்விதமான அவிசுவாச வார்த்தைகளை பேசும் போதும் சந்தேகிக்கும் போதெல்லாம் ஆண்டவர் அவர்களோடு யாவற்றையும் விளக்கி விவரமாய் பதில் கூறுகின்றவராகவே காணப்படுகின்றார். ஒருவேளை அற்ப விசுவாசியே ஏன் சந்தேகப்பட்டாய் என்று மட்டுமே கூறியுள்ளார். நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றும் கூறி அன்னார்களை உற்சாகப்படுத்தியே உள்ளாரே. அதோடு பிசாசு நீங்கவும், வியாதி நீங்க சுகமடையவும் வேண்டி வந்தவர்கள் அனைவரையும் சுகமடையச் செய்து தானே அனுப்பினார் அன்னார்களின் அவிசுவாசம் கண்டு ஒருவரையும் சுகமடையாமல் அனுப்பி வைக்கவில்லையே. ஆனால் சிறு சிறு விசுவாசத்தை அவர்களில் காணும் போது அம்மக்களை ஆண்டவர் பெரிதும் பாராட்டவேதானே செய்தார். விசுவாசத்தின்படியே ஆகக்கடவது என்றும் இவ்வளவு பெரிதான விசுவாசத்தை எவர்களிடமும் கண்டதில்லையே என்றும் கூறி பாராட்டியுள்ளாரே. சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான் என்று யாக்கோபு 1:6 யில் கூறியிருந்தாலும். அவிசுவாசம் கொள்பவனுக்கும் சந்தேகப்படுகிறவனுக்கும் ஆண்டவர் எதிர்பேசாமல் தன் கையையும், காலையும் காண்பித்து, தொட்டுபார் மாம்சமும் எலும்பும் உள்ளதே என்றுதானே விளக்கம் கூறினார் ஆண்டவர் அவரவர்களுடைய இருதயத்தையும், உள்ளான நோக்கத்தையும் மட்டுமே காண்கின்றவராயிருக்கின்றார். கிறிஸ்தவத்திலே விசுவாசமும் நம்பிக்கை மாத்திரமே நமக்கு நித்திய ஜீவனையும் மோட்ச ராஜ்யத்தையும் அளிக்கிறது என்று அறிந்திடுவோமாக. ஆண்டவர் பேரில் விசுவாசமும் நம்பிக்கையும் உள்ளவர்களே இவ்வுலகிலே பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாவர். சந்தேகமும் அவிசுவாசமும் விசுவாசத்திற்கு எதிரிடையானது அல்லவே அல்ல என்ற உண்மையை அறிந்திடுவோமாக. யூதா 1:20 வாசிப்பது என்ன? நீங்களோ பிரியமானவர்களே உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக் கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணுங்கள் என்பது தானே. (வசனம் 21) இவர்களே கிறிஸ்துவினுடைய சகல இரக்கங்களையும், அதாவது சகல நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும், ஐசுவரியங்களையும் பெறுகிறவர்களாவார்கள். அவர்களைப்போல நாமும் இந்த ஈஸ்டர் நாளிலே விசுவாசமுள்ளவர்களாய் சகல ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் பெற்றவர்களாய் காணப்படுவோமாக. ஆமென்.
சகோ. பிலிப் ஜெயசிங்,
நாசரேத் ஜெப ஐக்கியம்,
நாசரேத், தூத்துக்குடி மாவட்டம்
(9487547633)