நாசரேத் ஜெப ஐக்கியத்தின் வளர்ச்சியும்
ஆசிரியரின் (அனுபவ சாட்சியோடு) ஈடுபாடும்
(ஆசிரியர்: சகோ. பிலிப் ஜெயசிங், நாசரேத்)
முன்னுரை...
"கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்" சங்: 23:1
தேவாதி தேவன் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே சகல மகிமையும் கனமும் உண்டாவதாக. நான் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கிராமத்திலே 08.07.1945 ஆம் நாள் அன்று ஒரு கிறிஸ்தவ குடும்பத்திலே பிறந்தேன். கிறிஸ்தவ பெற்றோர்களால் வளர்க்கப்பட்டதால், முற்றிலுமாய் சன்மார்க்கனாகவே வாழ்ந்து வந்தேன். எனது கனத்த பேச்சு சத்தத்தினாலும், வெளித்தோற்றத்தின்படியும் நான் சற்று பெருமை, அதிகாரமுடையவனாகவே இருப்பதாக யாவராலும் கணிக்கப்படுகின்றேன். அதனால் என்னுடைய உண்மையான உள்ளத்தினையும், எனக்குள்ளே உறைந்து போயிருக்கும் நொறுங்கின இருதயத்தையும், அன்பையும், தாழ்மையினையும் எங்ஙனம் பிறர் அறிய வெளிப்படுத்தக் கூடும் என்பதே இச்சிறிய வெளியீட்டின் எனது பிரதானமான நோக்கமாகும். அதோடு என்னைத் தவறுதலாகவே புரிந்து தவறான சிந்தனைகளை தங்கள் தங்கள் மனதிலே பேணிக் கொண்டு தேவனுடைய பார்வையிலே எவர்களும் குற்றம் புரிந்தவர்களாக அவருடைய வருகையிலே காணப்பட்டுவிடக் கூடாதே என்பதினாலேயும் என்னை சாட்சியாய் வெளிப்படுத்தி அறிவிக்க விருப்பமுற்றேன். என் தாயின் கருவிலேயே என்னை நன்கு அறிந்தவரான என் மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்து தாமே என் சகல வாழ்நாள் பரியந்தமும் என்னோடிருந்து, என்னைப் பாதுகாத்து என்னை வழிநடத்தி வருகின்ற விசேஷித்த என் வாழ்வின் அனுபவங்களை தேவனுக்கு மகிமையாக, சாட்சியாக அறிவிக்கின்ற போது அதனை வாசிக்கின்ற அனைவருமே இதிலும் மேலான காரியங்களை தாங்களும் தங்கள் அனுபவங்களாக கொண்டிடக் கூடும் என்ற எண்ணத்தினாலேயும் இதனை பிரசுரிக்க விரும்புகின்றேன். இவைகளினால் நான் பூரணத்தினை அடைந்துள்ளவன் என்றும் ஒருபோதும் எண்ணுகின்றவன் அல்ல. மேலும் நாசரேத் ஜெப ஐக்கியம் 1958 ஆம் ஆண்டில் தோன்றி 50 ஆண்டுகளாக நாசரேத்தின் வரலாற்றிலே இதுவரையிலும் காணக்கூடாத பெரிய எழுப்புதலை ஏற்படுத்தியும் உள்ளது. இதனை சற்று விபரமாய் இந்த வெளியீட்டினாலே அறிவிப்பதும் நலமானதாய் தோன்றியது. தேவன் தாமே இதிலும் மேலான அனுபவங்களோடு இக்கடைசி நாட்களில் ஏராளமானவர்களை எழும்பச் செய்வாராக. இதனை வாசிக்கின்ற யாவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்
. இவண்
சகோ. பிலிப் ஜெயசிங்
நாசரேத் ஜெப ஐக்கியம், நாசரேத், தூத்துக்குடி மாவட்டம்.
===================================
"இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது, உன்னையும் உன் வீட்டாரையும் அல்லவா"
நாசரேத் ஜெப ஐக்கியத்தின் ஆரம்ப வித்துக்கள்
நாசரேத் ஜெப ஐக்கியம் என்பது சுமார் 1958 ஆம் ஆண்டு முதலாய் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று கருதப்பட்டாலும் 1955 ஆம் ஆண்டிலேயே சென்னை Laymen Evangelical Followship-யின் ஸ்தாபகரான சகோ . N. தானியேல் (Bro. N. Daniel) அவர்களின் ஊழியங்களின் பலனாக ஆண்டவரால் சந்திக்கப்பட்ட ஒரு சிலர் பேர்களாலேயே இது நாசரேத்தில் வித்திடப்பட்டது. பாளையங்கோட்டை மற்றும் சாத்தான்குளம் பகுதியில் சகோ. N. தானியேல் அவர்களின் எழுப்புதல் கூட்டங்கள் 1955, 56 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றன. பாளையங்கோட்டை கூட்டத்தில் ஆண்டவரால் சந்திக்கப்பட்ட வாலிப சகோதரர்களுள் நாசரேத் சகோ. மைக்கேல் செல்லத்துரை ( Bro. Michael Chelladurai) அவர்கள் ஒருவராவர். சாத்தான்குளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சகோ. N. தானியேல் அவர்களால் தேவனிடம் வழிநடத்தப்பட்ட சகோதரி. நாசரேத் திருமதி. ஜெமி ஜேக்கப் (Mrs. Jemy Jacob) அம்மாள் அவர்கள் அவர்கள் எனது தாயார் ஆவார். எனது அம்மாவும் நானும் (எனக்கு அப்பொழுது வயது 10) சாத்தான்குளம் கன்வென்ஷனில் பங்கு பெற்றோம். அக்கூட்டத்தில் எனது தாயார் திருமதி. ஜெமி ஜேக்கப் அவர்கள் ஆண்டவரை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை ஆண்டவரிடம் அழுது மன்னிப்பு கேட்டு ஜெபித்ததை நான் நேரில் கண்டேன். சுமார் 3 நாட்களாக அழுது கொண்டே ஜெபித்தார்கள். எனக்கு அவர்களின் அழுகையின் காரணம் அறியக்கூடாத குழந்தை பருவம். அக்கூட்டத்தின் நாட்களிலே ஒரு நாள் நான் மிகுந்த காய்ச்சலில் கஷ்டப்பட்டேன். ஆனால் அக்காய்ச்சல் என் அம்மாவின் மனந்திரும்புதலுக்கு தடையாக இருந்ததில்லை. என் அம்மா, என்னை சகோ. N. தானியேல் அவர்களிடம் சுகத்திற்காக ஜெபிக்க அழைத்து மேடைக்குச் சென்றார்கள். சகோ. N. தானியேல் அவர்கள் என் தலையில் கை வைத்து ஜெபித்தார்கள். அன்று தானே எனக்கிருந்த காய்ச்சல் நீங்கி விட்டது. இதுவே ஆண்டவர் தாமே தம் அநாதி தீர்மானமாய் என்னைத் தமக்கென்று தெரிந்தெடுத்துள்ளதாக அறிய முடிகின்றது. என் அம்மாவும் மனந்திரும்பினவர்களாக புதிய மனுஷியாக புது புது தீர்மானங்களோடு நாசரேத் திரும்பினார்கள். அவ்வமயம் ஆண்டவர் தாமே என் தாயாரிடம் கூறியது “இதல்லாமல் சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா” (1 சாமு. 9:20) என்று தானே என்பதாகும். இதனையே எங்கள் தாயார் எங்களிடம் எங்கள் குடும்பத்திற்கான இந்த வாக்குத்தத்தத்தை தன் வாழ்நாட்களிலெல்லாம் கடைசி சுவாசம் வரை எங்களோடு அடிக்கடி கூறுகின்றவர்களாகவே காணப்பட்டார்கள்
. சகோ. N. தானியேல் அவர்களால் சந்திக்கப்பட்ட பல நாசரேத் வாலிபர்கள் ஒருவரையொருவர் கூடி பேசிக்கொள்வது சந்திப்பது வழக்கமாயிருந்தது. அவர்களுள் முக்கியமானவர்கள் நாசரேத் திரு. சாமுவேல் அவர்களின் மகன் சகோ. சார்லி சாமுவேல் அவர்கள் (Er. Charlie Samuel) பொறியியல் கல்லூரி மாணவர். இவர் பின் நாட்களில் சகோ. N. தானியேல் அவர்கள் மனைவியின் சகோதரியை திருமணம் செய்து கொண்டார்கள். நாசரேத் லாசரு உபாத்தியார் அவர்கள் மகன் சகோ. நியுமன் அவர்கள் (Er. Newman) இவரும் பொறியியல் கல்லூரி மாணவர் மற்றும் நாசரேத், திரு. தங்கையா அவர்களின் மகன். திரு. மைக்கேல் செல்லத்துரை அவர்கள். இவர் அவ்வமையம் பாளையங்கோட்டை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்று கொண்டு வந்த மாணவர் ஆவார். எனது தாயாரும் அநேகரிடம் சென்று ஒப்புரவாகிக் கொண்டும், ஏழை எளியவர்களை நேசித்து உதவி செய்வதையும் தாய்மார்களிடையே ஆண்டவரைப் பற்றிப் பேசி ஜெபிப்பதையே வழக்கமாக கொண்டிருந்தார்கள். ஒரு சகோதரிக்கு அன்று குஷ்டரோகம் ஆரம்பக் கட்டத்தில் இருந்தது. அவர்களோடு மற்றவர்கள் கூடி சேர்ந்து இருக்க பயந்த நாட்களில் எனது தாயார் தொடர்ந்து பல நாட்களாக அவர்கள் வீடு சென்று ஜெபித்து, உதவிகளையும் பல செய்து அவர்களை ஆண்டவருக்காக ஆதாயப்படுத்தினார்கள். பேய்க்குளம் குஷ்டரோக மருத்துவமனையை ஆரம்பித்த டாக்டர். வேதபோதகம் (Dr. Vedabodhagam) அவர்களோடு எனது தாயாரும் பல ஞாயிற்றுக்கிழமைகளில் குஷ்டரோகிகள் மத்தியில் பல ஊழியங்கள் செய்து வந்தார்கள். நானும் சில ஞாயிறுகளில் அவர்களோடு பங்கு பெற்றிருக்கின்றேன். பின் நாட்களில் அவர்களுடைய Lepors Rehabilitation Centre ல் 40 நாட்கள் Care taker ஆக ஊழியம் செய்யவும் தேவன் எனக்கு கிருபை செய்தார். திரு. மைக்கேல் செல்லத்துரை அவர்கள் எனது அம்மாவை அக்கா என்று அழைப்பார்கள். இருவரும் கூடி அடிக்கடி ஆவிக்குரிய காரியங்களை பேசிக்கொள்வார்கள். பின் நாட்களில் சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்கள் எனது தாயாரை பெண்கள் பகுதியில் ஊழியங்களைச் செய்ய பல வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். இதனால் எனது தாயார் மூலம் பல பெண்கள், விருதுநகர் மாவட்டத்திலும், நாசரேத்திலும் இன்னும் வெளியிடங்களிலும் ஆண்டவரை ஏற்றுக் கொண்டார்கள். மேலும் எனது தாயார் தனது மூன்று பிள்ளைகளையும் (ஜெயசிங், குணசிங், சுசிலா) ஆண்டவருடைய இரட்சிப்புக்குள் வழிநடத்தி ஒரு முன்மாதிரியான வாழ்வை வாழ்ந்து காட்டி முடித்து விட்டு 13.12.1980 ஆம் நாளில் காலமாகிவிட்டார்கள். அன்று என் தாயார் அவர்களை நான் சரியாக புரியாது, அறியாதவனாகவே காணப்பட்டுவிட்டேனே என்று இன்று அவர்களின் அன்பையும், தியாகத்தையும் நினைத்து கண்ணீர் சிந்துகின்றேன். எத்தனை அருமையான என் தாயாரை ஆண்டவர் எனக்கு தந்திருக்கின்றார் ஆமென்.
நாசரேத் ஜெப ஐக்கியத்தின் தோற்றம் :
1955, 56 வருட காலங்களில் சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்கள் தனது ஆவிக்குரிய ஐக்கியத்திற்காக அடிக்கடி பாளையங்கோட்டை சென்று வருவது வழக்கமாயிருந்தது. பின்பு டாக்டர் ஜெயராஜ் (Dr. Jeyaraj) என்ற மருத்துவர் ஒருவர் நாசரேத் புனித லூக்கா மருத்துவமனையில் ஒரு டாக்டராக பணியாற்ற வந்துள்ள போது சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்கள் பாளையங்கோட்டை செல்வதை விட்டு விட்டு டாக்டர் ஜெயராஜ் அவர்களோடு அன்னாரின் வீட்டில் கூடி ஜெபிப்பது வழக்கமாயிற்று. டாக்டர் ஜெயராஜ் அவர்களும் Laymen Evangelical Fellowship யின் முக்கிய பங்காளர் ஆவார். நாளடைவில் சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்கள் LEFயின் ஐக்கியத்தையும் குறைத்துக் கொண்டு, நாசரேத் பகுதியிலுள்ள தேரிகாட்டுப் பகுதியில் தனித்து ஜெபிக்கச் செல்வதை வழக்கமாக கொண்டார். ஒவ்வொரு நாட்களிலும் மாலை வேளைகளில் தன் வீட்டிலிருந்து நடந்து தனித்து தேரிகாட்டிற்கு ஜெபிக்கச் செல்கையில் ஒருநாள் நாசரேத் திரு. பிச்சைமணி அவர்கள் மகன் Prof. P. ஞானதுரை (P. Gnanadurai) அவர்களை (அன்று அவர் ஒரு கல்லூரி மாணவா்) சந்தித்து அவர்களிடம் ஆண்டவரைப் பற்றி பேசி ஐக்கியம் கொண்டுள்ளார்கள். இவ்விருவரும் சேர்ந்து தினமும் நாசரேத் தேரிக்காட்டிற்குச் சென்று மாலை வேளைகளில் ஒரு நாள் கூட தவறாதபடிக்கு ஐக்கியம் கொண்டு ஆவிக்குரிய விஷயங்களில் இருவரும் பேசி பரிமாறி ஜெபித்து வந்தார்கள். இவர்கள் இருவரின் கூட்டமைப்பே நாசரேத் ஜெப ஐக்கியத்தின் ஆரம்பமாகும்.
ஆரம்பத்தில் சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்கள் மோசேயைப் போன்று முன் குறிக்கப்பட்டு அழைக்கப்பட்ட ஊழியக்காரனாக காணப்பட்டாலும் நாசரேத் ஜெப ஐக்கியத்தின் செயல் வீரராக, விறுவிறுப்பாய், தீவிரமாய், மிக மிக கண்டிப்பாய் ஆக்கப்பூர்வமாய் செயல்பட்டு வந்தவர் சகோ. ஞானதுரை அவர்களே. மோசேயின் பணிகளை யோசுவா கடைபிடித்து, இஸ்ரவேலரை நிரந்தரமாய் கானானுக்குள் நிலைப்படுத்தின படிக்கே, சகோ. ஞானதுரை அவர்கள் தன் பெயரை சகோ. ஜாசுவா ஞானதுரை (Prof. Joshua Gnanadurai) என்று மாற்றிக் கொண்டு நாசரேத் ஜெப ஐக்கியத்திற்காக பாடுபட்டு வந்தார்கள்
ஆசிரியரின் அழைப்பு
அவ்வமயம் ஆசிரியரான நான் நாசரேத் மர்காஷியஸ் உயர்நிலைப் பள்ளியில் ஒரு மாணவனாக இருந்தேன். எனது தாத்தா திரு. கோயில் பிள்ளை அவர்கள் (பிஷப் கோயில் பிள்ளை என்று யாவராலும் அழைக்கப்பட்டு வந்தவர்கள்) ஒரு ஊழியக்காரராகவும் ஆலய பென்ஷன்தாரராகவும் இருந்தார்கள். அவர்கள் தனது 100 வது வயதிலே 14 ஆம் நாள் ஜனவரி மாதம் 1971 யில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள். "வாரா வினை வந்தாலும், சோராதே மனமே” என்ற பாடலை பாடினவர்களாகவே தன் அந்திய காலத்தை சந்தோஷமாய் நிறைவு செய்கின்றவர்களாக காணப்பட்டார்கள். அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கும் போது பேரப்பிள்ளைகள் யாவரையும் ஆசீர்வதித்து விட்டு தானே சென்றார்கள். நானும் அவர்களிடம் கூறி வழி அனுப்பும்போது, தாத்தா நீங்கள் பரலோகம் சென்றதும் இயேசு அப்பாவிடம் எனக்காக பேசுங்கள் என்றும் கூறினேன்.
1961 ஆம் ஆண்டிலே நான் ஆண்டவரால் சந்திக்கப்பட்டேன். சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்களின் ஐக்கியம் எனக்கு கிடைக்கப்பெற்றது. கலா. 5 ஆம் அதிகாரத்திலே கூறப்பட்டுள்ள மாம்சத்தின் கிரியைகள் பற்றி என்னோடு பேசினார்கள். நான் பல நாட்களாக என் பாவங்களை அறிக்கை செய்து வந்தேன். நான் பேசின பல பொய்களுக்காகவும், செய்துள்ள அநேக களவுகளுக்காகவும் என் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டேன். என் அம்மா அதிக சந்தோஷமடைந்து ஜெபித்து ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்கள். தினமும் மாலை வேளையில் நாசரேத் தேரிக் காட்டில் ஜெபித்து வந்த ஐக்கிய சகோதரர்களோடு ஜெபிக்கச் செல்ல பழக்குவிக்கப்பட்டேன். தொடர்ந்து அநேகரிடம் ஒப்புரவானேன். ஆலயத்திலே பாடகர் குழுவிலே இருந்தபடியினால் அன்று ஆலயத்திலே இருந்த நற்கருணைக்கான அப்பங்களை எடுத்து சாப்பிட்டதற்காக ஆலய போதகரிடம் மன்னிப்பு கேட்டேன். ஒரு சில நாட்களில் இரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததற்காக அதே தொகைக்கான இரயில் டிக்கெட் எடுத்து பயணம் செய்யாமல் டிக்கெட்டினை கிழித்து போட்டேன். இன்னும் அநேக பாவங்களை இரவு பகலாக அறிக்கை செய்தேன். ஆண்டவரிடம் நான் ஜெபிக்கின்ற போது ஆண்டவரே இன்னும் நான் அறிக்கை செய்யாத பாவங்கள் இருக்குமாயின் அவைகளை ஞாபகப்படுத்தும் என்று அழுது வேண்டினேன். விசுவாசத்தோடு ஆண்டவர் தாமே என்னை முற்றிலுமாய் பாவங்களற மன்னித்துவிட்டார் என்ற ஒரு நிச்சயமும், பெரிய சந்தோஷமும் 25 அக்டோபர் 1961ஆம் நாள் என் இருதயத்தை நிரப்பிற்று. மேலும் நான் இரட்சிக்கப்பட்டுள்ளேன் என்பதற்கு அடையாளமாக ஆண்டவர் தாமே எனக்கு அளித்த தேவவாக்கு கொலோ. 3:3,4. ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும் போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள் என்பதாகும். இது என் உள்ளத்தின் ஆழத்திலே பதிந்து விட்டது. மிகவும் அதிகமான சந்தோஷ நிறைவினால், நான் அங்கும் இங்குமாக ஓடி எல்லா ஐக்கிய சகோதரர்களோடும் நான் பெற்ற இரட்சிப்பின் நிச்சயத்தை பகிர்ந்துக் கொண்டேன்
1957 ஆம் ஆண்டு முதலாய் எனது தாத்தா அவர்கள் என்னை நாசரேத் தூய யோவான் ஆலய பாடகர் குழுவிலே சேர்த்து விட்டிருந்தார்கள். பாடகர் என்ற பெருமையில் ஆலய பக்தியில் வெறியனாக வளர்ந்து வந்தேன். பண்டிகை நாட்களில் சிறப்பு பாடகனாக (Solo) பாடியுள்ளேன். வெள்ளை அங்கி தரித்து வந்துள்ளவனாக காணப்பட்டதினால் என்னை நானே பரிசுத்தவனாகவும் ஆலயத்தரையிலே அமர்ந்திருக்கும் சபையார் யாவரையும் பரிசுத்தவான்கள் அல்லாதவர்கள் என்றும் எண்ணமுடையவனாகவே காணப்பட்டேன். அதுவரையிலும் நான் நாசரேத் ஆலய பக்தியில் மாத்திரமே சன்மார்க்கனாய் வாழ்ந்து வந்தேன். ( I was so religious but not spiritual) நான் ஒரு விக்கிரக ஆராதனைக்காரன் என்றும், ஆலய பாடல் எனக்கு ஒரு விக்கிரகமாக உள்ளது என்றும் தேவன் என்னை பாவ உணர்வடையச் செய்தார். அதற்கு ஆலோசனையாக ஜெப ஐக்கியத்தின் தலைவர் சகோ. மைக்கேல் அவர்கள் அந்த பாடகர் குழுவை விட்டு உடனே விலகிவிடும்படி எனக்கு ஆலோசனை கூறினார்கள். இந்த ஆலோசனையை என்னால் முழுமையாய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் நான் பாடகனாக இருப்பதை பெரிதும் விரும்பி வந்தேன். பாடகர் குழுவை விட்டுவிட்டு ஆலயத்திலே தரையில் அமர்வதை பெரிதும் வெறுக்கிறவனாக இருந்தேன். அதனால் பாடகர் குழுவை விட்டுவிட்டு விலகினவனாக நடித்துக்கொண்டு ஜெபக்குழு தலைவருக்குத் தெரியாமல் பாடகர் குழுவில் ஐக்கியமும் கொண்டு வந்தேன். இது என் மன சமாதானத்தை இழக்கச் செய்தது. நான் ஆலய பாடல்களை அதிகமாய் நேசிப்பவன். அதனால் அநேக நாட்களில் ஆலயத்திற்கு செல்லக்கூடாமல் ஆலய சுவர்களுக்கு வெளியே நின்று கொண்டு ஆலய பாடல்களை கேட்கின்றவனாக காணப்பட்டேன். ஆண்டவரிடம் விரும்பி ஜெபித்தேன். என்னால் பாடகர் குழுவைவிட்டு விலகிட முடியாது என்று. பின்பு சில நாட்கள் பாடகர் குழுவிற்குச் செல்லவில்லை. நண்பர்கள் சிலர் ஏன் வரவில்லை என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தார்கள். நானும் உண்மையான காரணத்தை கூறமுடியாமல் தவித்தேன். அந்நாட்களில் நாசரேத் ஆலய பாடகர் குழுவிற்கு தனி சிறப்பு இருந்தது. நாசரேத்தைச் சார்ந்த பலர் வெளி மாநிலங்களில் அல்லது வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள் தங்கள் விஷேசங்களுக்கு நாசரேத் பாடகர் குழுவை அழைப்பது வழக்கமாயிருந்தது. அதன்படிக்கு வெளியிடத்தில் நடைபெற இருந்த ஓர் அடக்க ஆராதனைக்கு நாசரேத் ஆலய பாடகர் குழு அழைக்கப்பட்டிருந்தது. இது வெளியிடமாயிருந்ததினால் ஜெப ஐக்கிய குழுத்தலைவர் இதனை அறிய முடியாது என்று எண்ணினவனாய் அன்றைய ஆராதனைக்கு ஓர் வாகனத்தில் பாடகர் குழுவினரோடு நானும் சென்றேன். அன்று நானோ தேவ சமாதானத்தை இழந்தவனாக யோனாவைப்போன்று வாகனத்தின் பின் பகுதியில் இருந்தேன். இறங்க வேண்டிய இடம் வந்தபோது கடைசியாக இறங்கினேன். ஆலயத்தின் சிலுவை கோல் ஒன்றினை பாடகர் முன்பாக பிடித்து செல்வது வழக்கம். இச்சிலுவை பர்மா தோதகத்தி மரத்தினால் (Rose - Wood) செய்யப்பட்டது. இச்சிலுவைக்கோல் நாங்கள் சென்ற வானத்தின் பக்கவாட்டில் கட்டப்பட்டிருந்தது. நான் வாகனத்திலிருந்து இறங்கிய போது என்னையறியாமல் அதனை மிதித்துவிட்டேன். அது இரண்டாக உடைந்துவிட்டது. ஆண்டவர் என்னோடு பேசினார். நீ என்னைப் பின்பற்றவில்லை, நீ பின்பற்றி வருவது இந்த உடைந்த சிலுவையே என்றார். நானும் உண்மையாய் அறிக்கை செய்து உம்மையையே பின்பற்றுவேன் என்று என் கீழ்படியாமையை பாவ அறிக்கை செய்து பாடகர் குழுவைவிட்டு விலகினேன். ஆனாலும் என் ஆண்டவர் என் வாஞ்சையை அறிந்து பல வருடங்கள் கழித்து 1977 ஆம் ஆண்டு முதல் திருமண்டல பேராயர் அவர்களால் ஆலயத்திலே இராப்போஜனத்தின்போது திராட்சை ரசம் கொடுக்கும் அதிகாரம் பெற்றவனாய் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாய் ஆலயத்திலே பணிபுரியலானேன். அதனால் நான் ஆலய பாடகர் குழுவில் சேர வாய்ப்பு கிடைத்தது. சிறுவனாக அல்ல (Boys Choir), பெரியவனாக (Men Choir) பாடல்களின் கருத்தை உணர்ந்து பாடுகிறவனாக மாற்றமடைந்தேன். அதுவரையிலும் நான் பாடல்களின் இராகம், மெட்டு, தாளம், இசைவு. இவைகளை மட்டுமே முக்கியப்படுத்தி வந்துள்ளேன். அதோடு ஆலயத்தில் வாசிக்கப்படும் வேதாகம பகுதிகளையும் வாசிக்கும் சிலாக்கியமும் பெற்றேன். சில வருடங்களில் ஒரு பெலவீனமான போதகர் ஒருவருக்கு (Rev. G. Israel) உதவி செய்யும் வாய்ப்பும் எனக்கு அளிக்கப்பட்டது. நான் அவரை ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் கிராம சபை ஆலயங்களுக்கு எனது மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிக்கொண்டு சென்று திருநற்கருணை பகுதியிலே அவருக்கு பல வருடங்களாக உதவி செய்தேன். இடையிலே அவர் தன் குருத்துவ பணியை சுகவீனம் காரணமாக விட்டுவிட எண்ணியபோது (VRS) அன்னாரை விட்டுவிடச் செய்யாமல் அன்னாரை அவருடைய வீட்டிலிருந்தே அழைத்துச் சென்று தன் பணியை விட்டுவிடாமல் செய்தேன். பண்டிகை நாட்களில் ஒரு இரவுக்குள் 2 அல்லது 3 குக்கிராம ஆலயங்களில் ஆராதனையை நடத்தினோம். அந்நாட்களில் அநேகமாக அதிக ஆலய ஆராதனைகளில் என்னையே பிரசங்கிக்கச் செய்தார். இதனால் ஆண்டவர் தாமே என்னை பிரசங்கம் செய்ய கற்பிக்கலானார்.
நாசரேத் ஜெப கூடாரத்தின் தோற்றம் :
1962 ஆம் ஆண்டில் நாசரேத்தைச் சார்ந்த சகோ. ஜாண் கோயில் பிச்சை என்ற சகோதரனையும் (Bro. John Koilpitchai) ஆண்டவர் சந்தித்து அவர்களையும் ஆண்டவர் தாமே ஐக்கியத்தோடு இணைத்தார். அவர்களும் கலா. 5 ஆம் அதிகாரத்திலே கூறப்பட்டுள்ள பாவங்களை பல நாட்களாக அறிக்கை செய்து 1962 நவம்பர் மாதத்தில் இரட்சிப்பின் நிச்சயத்தை பெற்று ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டார். இவர்களுடைய அழைப்பும் மனந்திரும்புதலும் சற்று வித்தியாசமாகவே காணப்பட்டது. விஷேச ஜெப ஆவி அன்னாரை பற்றியுள்ளதை யாவரும் உணர முடிந்தது. இவர்களும் சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்களுமே வேதத்திலுள்ள ஜாசுவா காலேபாக சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்களுக்கு பக்கத்துணையாயிருந்து ஐக்கியத்தை வளர்த்தார்கள். சகோ. ஜாண் கோயில் பிச்சை அவர்கள் அதிகமாய் மணிக்கணக்காக தனி ஜெபம் செய்யும் பழக்கத்தை கொண்டிருந்தார்கள். இப்போதுள்ள ஐக்கிய கூடார இடம் அன்னாரின் பூர்வீகமான குடும்ப சொத்தாக இருந்தது. ஆகையினால் சகோதரன் இந்த இடத்தினை அதிகமாய் தனி ஜெபம் செய்யும் இடமாக மாற்றிக் கொண்டார். சகோ. மைக்கேல் மற்றும் சகோ. ஞானதுரை அவர்கள் சகோ. கோயில் பிச்சை அவர்களை காண வரும் போதெல்லாம் அவர் அவருடைய இடத்திலே ஜெபித்து வந்துள்ளதையே கண்டு ஆச்சரியப்பட்டுள்ளார்கள். அந்த இடம் 5 சென்ட் விஸ்திரணம் உள்ள இடம் மாத்திரமே. ஒரு சில மாதங்களில் இந்த இடத்தை சகோ. ஜாண் கோயில் பிச்சை அவர்களிடமிருந்து சகோ. மைக்கேல் அவர்கள் சொற்ப தொகைக்கு கிரையமாக வாங்கி அதனை நிரந்தரமாக ஜெப ஸ்தலமாக மாற்றினார்கள். ஆரம்பத்திலே சகோ. ஜாண் கோயில் பிச்சை அவர்கள் மாத்திரமே இதிலே முழு நேரமாக ஜெபித்து வந்தார்கள். அதற்காக அவருக்கு ஒரு சிறு தொகை மட்டுமே மாத ஊதியமாக அளிக்கப்பட்டது. இத்தொகை அன்னாரின் குடும்பத்திற்கு போதாததாகவே காணப்பட்டது. அன்று முதல் அவர் விசுவாச வாழ்வையே கொண்டு வளரலானார். ஒரு சிலர் சிறு சிறு உதவிகளை அன்னாருக்கு அளித்து வந்தார்கள். நானும் யாருக்கும் தெரியாமல் அநேக தடவைகளில் அன்னார்க்கு உதவிகள் பல செய்து வந்தேன்.
ஒரு சில மாதங்களில் 1963 ஆம் ஆண்டில் தானே சகோ. ஜாண் கோயில் பிச்சை அவர்கள் வேண்டிக்கொண்டபடிக்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் வெள்ளிக்கிழமை தோறும் மாலையில் இந்த இடத்திலே விடுதலைக்கூட்டம் நடத்தவும் அதனை சகோ. ஜாண் கோயில் பிச்சை அவர்களே பொறுப்பேற்கவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதனால் சகோ. ஜாண் கோயில் பிச்சை அவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் மாலை 3 மணி வரை உபவாசித்து ஜெபிக்க தேரிக் காட்டிற்கு செல்வதை வழக்கம் கொண்டார். இதன் பயனால் நாசரேத்திலே வெள்ளிக்கிழமை விடுதலை கூட்டத்திலே எழுப்புதல் பரவத் தொடங்கியது. அநேக பெரியவர்கள் இந்த விடுதலைக் கூட்டத்திற்கு வரத் தொடங்கினார்கள். நாசரேத் ஜெப ஐக்கியம் மூன்று பேராக ஆரம்பிக்கப்பட்டது பெரிய அளவிலே வளர்ச்சியடைந்தது. இந்த இடம் போதாததாக காணப்பட்டதினால் இதனை அடுத்துள்ள 5 சென்ட் இடமும் ஐக்கியத்திற்காக விலைக்கு வாங்கப்பட்டது. இதிலே ஓலைக்கூடாரமே போடப்பட்டதால் இதற்கு கூடாரம் (Tent) என்றும், டென்ட் கூட்டத்தார் என்றும் யாவரும் அழைக்கத் தொடங்கினார்கள். தொடர்ந்து சகோ. ஜாண் கோயில்பிச்சை அவர்களின் ஆலோசனைப்படிக்கு சனிக்கிழமை தோறும் இரவு ஆண்களுக்கான உபவாச ஜெபமும் இதிலே ஆரம்பிக்கப்பட்டது. அநேகர் இதிலே கலந்துக் கொண்டார்கள். சகோதரர்கள் பாவ உணர்வடையும்போது தங்களைத் தாங்கள் மிகவும் தாழ்த்தி கீழே தரையிலே உருண்டு அழுது ஜெபிக்கின்றவர்களாகவே காணப்பட்டார்கள். சகோ. ஜாண் கோயில் பிச்சை அவர்கள் ஒரு தீர்க்கத்தரிசி போன்று ஐக்கியத்திலே அவ்வப்போது சகோதரர்கள் யாவர்மீதும் தலையில் கைவைத்து அநேக காரியங்களை வெளிப்படுத்தி ஜெபிக்கின்றவர்களாகவும் காணப்பட்டார், அநேகர் தங்கள் வியாதிகள் நீங்க சுகம் பெற்றார்கள். அநேகரிடமுள்ள பிசாசுகள் நீங்க சுகம் பெற்றார்கள். அநேக வியாதியஸ்தர்கள் அதிக அளவில் விடுதலைக் கூட்டங்களுக்கு வரத் தொடங்கினார்கள். ஒரு சில குஷ்டரோகிகளும் சுகமடைந்துள்ளார்கள். இதில் முக்கியமானவராக, தூத்துக்குடி அரசு டாக்டர் திரு. ஞானையா அவர்கள் குமாரர் திரு. துரைராஜ் அவர்கள் ஒரு நாள் இரவோடு இரவாக ஐக்கிய கூடாரத்திற்கு ஜெபிப்பதற்காக வந்தார். அவரும் ஒரு மருத்துவரே. அவர் அணிந்திருந்த சேட்டை கழற்றி காண்பித்த போது அன்னாரின் உடம்பெல்லாம் குஷ்டரோகமாயிருந்து. சகோ. ஜாண் கோயில் பிச்சை அவர்கள் அவரை ஜெபகூடாரத்திலே மண்தரையிலே குழி தோண்டி அதிலே படுக்கச் செய்தார். சகோதரன் அன்னாரை தன் பாவங்களை மட்டுமே அறிக்கை செய்யச் செய்தார். அவரும் உண்மையாய் தான் செய்துள்ள அனைத்து பாவங்களையும் ஒவ்வொன்றாய் ஆண்டவரிடம் சத்தமாகவே அறிக்கை செய்தார். செத்துப் போன உடலுக்கு அவர் விலை உயர்ந்த ஊசி போட வேண்டும் என்று பொய்யாக கூறி சாதாரண தண்ணீரை ஊசி மூலம் செலுத்தி அதிக பறித்ததைப் போன்ற அநேக பாவங்களை அறிக்கை செய்தார். சில நாட்களுக்குள் பூரண சுகமடைந்து சென்றார். இப்போது இவர் ஒரு பாஸ்டராக கோயம்புத்தூரில் ஊழியம் செய்து வருகின்றார். இன்னும் ஒரு சிலர் குடும்பமாக ஜெப ஐக்கிய கூடாரத்திலே மாதக்கணக்காகவும் தங்கி ஜெபித்து வியாதி நீங்கப்பெற்றும், இரட்சிப்பின் நிச்சயத்தைப் பெற்றும் சென்றுள்ளார்கள்.
சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்கள் பாளையங்கோட்டை கல்லூரிக்கு மாணவனாக தினமும் ரயிலில் நாசரேத்திலிருந்து சென்று வருகையில் அன்னாரால் ஆண்டவரிடம் நடத்தப்பட்ட சகோதரர்கள் நூற்றுக்கணக்கானோர்களானார்கள். ரயில் நிலையங்களில் ஜெபிப்பதும், ரயிலில் ஜெபிப்பதும், ரயில் கழிவு அறையில் ஜெபிப்பதும் வழக்கமாகிவிட்டது. ரயில் கழிவு அறையில் கைக்குட்டையை விரித்து முழங்கால்படியிட்டு ஜெபித்த மாணவர்களுள் நானும் ஒருவன் ஆவேன். ஆனால் எல்லா நாட்களிலும் மாலையில் நாசரேத் தேரிக்காட்டில் ஜெபிப்பதில் சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்கள் ஒருபோதும் தவறியதேயில்லை. மாலை 6 மணிக்கு சரியாய் கூடி ஐக்கியமாக ஜெபிக்க வேண்டும் என்பது நியமமாயிருந்தது. மேலும் நிர்பந்தமாய் முடிந்த வரை ஒரு மணி நேரம் தனி ஜெபம் செய்யாதபடி 6 ஆம் மணி ஜெபத்திற்கு வரக்கூடாது என்பதும் கண்டிப்பான நியமுமாயிருந்தது. ஆகையினால் நாசரேத்திலுள்ள வாலிபர்கள் 6 ஆம் மணி ஜெபத்திற்காக மாலை 4 மணி, 5 மணி அளவிலே தேரிப் பகுதிக்கு வந்து தனி ஜெபம் செய்து விட்டு ஐக்கியத்தில் பங்கு பெற்று ஜெபித்து வந்தனர். சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்கள் கல்லூரியிலிருந்து மாலை ரயிலில் வந்ததும் ஒரு வேளை இருள் மங்கிய வேளையாயிருந்தாலும் தன் வீட்டிற்கு கூடச் செல்லாமல் மாலை காபி எதுவும் எடுத்துக் கொள்ளாமல் ஓடோடி வந்து தேரிக்காட்டு ஜெப ஐக்கியத்தில் பங்கு பெற்று வந்தார்கள். நாசரேத்தில் எழுப்புதல் பரவியது. எங்கும் தேரி ஐக்கியம் என்று பேச கேட்கப்பட்டுக் கொண்டே வந்தது. நாசரேத் ஜனங்களிடையே ஒருவித தெய்வீக பயமும் நடுக்கமும் பிடிக்கத்தொடங்கியது. நாசரேத் ஜெப ஐக்கிய சகோதரர்கள் ஐக்கியமாக, ஒவ்வொரு தெருவாக செல்வதை காணமுடிந்தது. அநேக வாலிபர்கள், மாணவர்கள் ஆண்டவரை ஏற்றுக் கொண்டார்கள். பாவ அறிக்கை செய்வதும், களவு செய்யப்பட்ட பொருட்களை திரும்பச் செலுத்துவதும், யாவரோடும் நல்மனம் பொருந்தி ஒப்புரவாகுவதுமே எங்கும் வெளிப்படையாய் காணப்பட்டது, பேசப்பட்டது. ஆண்டவரின் நாமம் எங்கும் மகிமைப்பட்டது. ஒரு சிலர் பாவங்களை விட்டு விட விரும்பாதவர்கள் ஐக்கிய சகோதரர்களை தூரத்திலே கண்டவுடனே ஓடிவிடுவதும் வெளிப்படையாய் காணப்பட்டது.
சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்கள் ஒவ்வொரு வாலிபர்களுடனும் மணிக்கணக்காக பேசி அவர்களை ஆவிக்குரிய உண்மையான மனந்திரும்புதலுக்குள் வழி நடத்துவார்கள். இரவு காலங்களை ஓய்வின்றி ஜெபத்தில் செலவு செய்து வந்தார்கள். சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்களுக்கு தன்னுடைய சிறுவீட்டிலே தனித்து அறை வசதியில்லாததினால் தன் படிப்பின் காரணத்தை காட்டி காலியாக உள்ள சில ஐசுவரியவான்களின் வீட்டு மாடியில் தங்குவதை வழக்கமாக கொண்டு அங்கு தன் படிப்பிற்கான நேரத்தினை படிப்பில் அதிகமாய் செலவு செய்திடாமல் வாலிபர்களை அங்கு அழைத்துச் சென்று பேசி அவர்களோடு ஜெபிப்பதே வழக்கமாயிருந்தது. அன்னாரின் அறையினை சென்று பார்த்தால் எங்கும் கண்ணீரின் கறைகளே காணப்படும். பல வாலிபர்கள் அறையின் பல மூலைகளிலிருந்து அழுது ஜெபித்துக் கொண்டேயிருப்பதை காண முடிந்தது. எவ்வித சளைப்பும், களைப்பும் இல்லாமல் சகோதரர்களிடம் பேசுவதில் அதிகமான இன்பம் கொண்டிருந்தார்கள்.
சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்களின் பெற்றோர் அதிகமாய் படித்தவர்கள் அல்ல, எனினும் தன் மகன் நாசரேத்தில் பெரியவர்களோடு பழகி வருகின்றான். பெரியவர்கள் வீட்டு மாடியில் தன் படிப்பிற்காக தங்கியுள்ளான் என்று மட்டுமே அறிவார்கள். ஜெப ஐக்கியத்திற்கு வரும் எந்த புதிய வாலிபர்களையும் சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்களிடம் அறிமுகப்படுத்தி விடுவதே மற்ற ஐக்கிய சகோதரர்களின் பணிகளாகும். சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்களும் ஒரு சகோதரனையாவது சாதாரணமான முறையில் பேசி அனுப்பி விட்டிடாமல் தொடர்ந்து அன்னாரைக் காணும் போதெல்லாம் தான் ஆலோசனையாக கொடுத்த காரியங்களை முடித்து விட்டாயா? என்ன செய்தாய்? என்ன நடந்தது என்று கேட்டு தொடர் பணியாய் என்றும் கேட்கின்றவராகவே காணப்படுவார். கையேடு கொண்டு வரச் செய்து அதிலும் பல ஆலோசனைகளை எழுதி கொடுத்திடுவார். சாதாரணமாக ஒரு வாலிபனை சந்தித்து விட்டு மறு நாளில், அல்லது மறுமுறையாக அவனை சந்திக்கும் போது உனக்காக கடந்த இரவில் அல்லது கடந்த நாளில் இத்தனை மணிநேரம் ஜெபித்தேன் என்று கூறுவது அவர்களின் வழக்கமாயிருந்தது.
சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்கள் ஐக்கிய கூடுகையை ஒட்டுமொத்தமாய் நடத்துவார்கள். தினமும் கூடும் மாலை நேர தேரிக்காட்டு ஜெபக்கூடுகைகளிலும் வாராந்தர உபவாச கூடுகைகளிலும் தேவசெய்தி கொடுத்து வந்தார்கள். தேவ பிரசன்னம் யாவர் மேலும் அமர்ந்துள்ளதாக உணர முடிந்தது. அன்னார் கொடுத்த எல்லா செய்திகளுமே தீர்க்கத்தரிசன செய்திகளாகவே அமைந்திருந்தது. சகோ. ஜாசுவா ஞானதுரை, சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்கள் பல மணி நேரம் தங்களுக்குள் பேசிக் கொள்வது வழக்கமாயிருந்தது. சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்கள் கூட தன்னிடம் வந்து ஆலோசனை கேட்க வரும் அநேகரை சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்களிடம் திருப்பி அனுப்பி இவன் ஏதோ கேட்கின்றான், நீயே பதில் சொல்லிவிடு என்று அனுப்புவதையும் அதிகமாக கண்டுள்ளோம். ஆனால் பின்வாங்கி அல்லது ஒழுங்காக ஐக்கிய ஜெபத்திற்கு வராதவர்களைக் குறித்து விசாரிக்கும் போது சகோ.மைக்கேல் செல்லத்துரை அவர்கள் கூறுவது உனக்காக அதிகமாய் வேதனையடைந்தேன். மணிக்கணக்காக ஜெபித்தேன். நீ வருவாய் என்று தெரியும் என்பது போன்ற வார்த்தைகளையே அதிகமாய் பேசுவார்கள். சகோதரர்கள் யாவருமே சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்களை கண்டால் தேவபயத்தோடு அவர்களை கனம் பண்ணுவதிலேயே காணப்படுவார்கள்.
நாசரேத் ஜெப ஐக்கியத்தின் விரிவாக்கம்
:பாளையங்கோட்டை கல்லூரி, உயர்நிலைப் பள்ளிகளிலுள்ள அநேகர் சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்களால் ஆண்டவருக்குள் திருப்பப்பட்டுள்ளார்கள். சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்கள் பாளையங்கோட்டை St. John's College யிலேயே சில காலம் Demonstrator ஆக பணிபுரிய நேரிட்டது. அவ்வமயம் பாளையங்கோட்டையில் கல்லூரி சிற்றாலயத்தில் அநேக கூட்டங்களையும் நடத்தினார்கள்.
பின்பு சகோதரன் M.Sc. (Chemistry) மேல் படிப்பிற்காக மதுரை கல்லூரிக்குச் சென்றார்கள். (American College) அங்கும் பல இதர மாவட்ட வாலிபர்கள் ஆண்டவருக்குள் வழி நடத்தப்பட்டார்கள். (நீலகிரி, இராமநாதபுரம், சிவகங்கை , மதுரை) பசுமலை உயர்நிலைப்பள்ளியில் ஓய்வுநாள் பாடசாலை வகுப்புக்களில் கலந்து கொண்டதின் நிமித்தம் இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசியைச் சார்ந்த ஏராளமான மாணவர்கள் ஆண்டவருக்குள் வழி நடத்தப்பட்டார்கள். இவர்களுள் முக்கியமானவர் சகோ. மைக்கேல் அவர்கள். இவர் அருப்பக்கோட்டை அடுத்துள்ள கலியாணசுந்தரபுரத்தை சார்ந்தவர். இவர் மனந்திரும்பும் நாட்களில் பசுமலை பள்ளி ஹாஸ்டலில் உபவாசித்து ஜெபிக்க ஆசைப்பட்டு தன் சாப்பாட்டு தட்டினை ஹாஸ்டல் கூரையிலே எறிந்தும் விட்டிட்டார். ஒருமுறை நாசரேத்தில் நடந்த வருடாந்தர தியானக்கூடுகையில் பங்கு பெற தன்னிடம் பஸ் டிக்கட்டுக்கு போதிய காசு இல்லாதபோது பசுமலையிலிருந்து நாசரேத்துக்கு 200 கிலோமீ நடந்தே வந்துவிட்டார். ஒரு சமயம் இவர் நாசரேத் ஜெப கூடாரத்தில் தங்கியிருந்து ஆத்துமாக்களுக்காக பாரத்தோடு ஜெபித்துக் கொண்டிருந்த வேளையில் கடையில் போய் ஒரு கிலோ கருப்புக்கட்டி வாங்கி வர அனுப்பப்பட்ட போது அவர் கடைக்காரனிடம் வந்து ஒரு கிலோ ஆத்துமா தாருங்கள் என்றும் கேட்டுள்ளார். கடைக்காரனோ கேட்டு திகைத்து போய்விட்டார். இன்னும் மதுரையில் தேவனால் சந்திக்கப்பட்டவர்களுள் மிக முக்கியமானவர்கள் சகோ. ஜாண் அற்புதராஜ், (கோயம்புத்துர்), சகோ. ஜேக்கப் சாந்தகுமார் மற்றும் சகோ. கிறிஸ்டியான் அவர்களே. சகோ. கிறிஸ்டியான் அவர்கள் நாசரேத்தை அடுத்துள்ள ஷூரிவைகுண்டத்தைச் சார்ந்த புளியங்குடியைச் சார்ந்தவர்கள். இவர்களின் பெற்றோர் போதகர்களே. இவர் மத்திய அரசின் உயர் நிலை பள்ளியின் (Central Govt. School, KENDRIYA VIDYALAYA) தலைமை பிரின்ஸ்பாலாவார். இவருடைய மகன் பேராசிரியர் காலேப் அவர்களும் மதுரைக் கல்லுரியில் பணிபரிந்து வருகின்றார்கள். நாளடைவில் இந்த கல்லூரி எழுப்புதல் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரிக்கும் (Bishop Heber College) சென்னை கிறிஸ்தவ கல்லூரிக்கும் (Madras Christian College) பரவியது. அக்கல்லூரிகளிலுள்ள சிற்றாலயங்களில் வருடத்திற்கு இருமுறையாக ஆவிக்குரிய கூடுகைகள் மற்றும் தியானக் கூடுகைகள் நடத்தப்பட்டன. திருச்சியில் பேராசிரியர் விஜயன் மற்றும் அவரின் தம்பி பேராசிரியர் மோகன் அவர்களும் மாணாக்கர்களாக இருக்கும் போது ஆண்டவரால் சந்திக்கப்பட்டு நாசரேத் ஐக்கியத்தோடு இணைந்தார்கள். இவர்கள் மூலம் இன்னும் ஏராளமானவர்கள் ஆசிரியர்கள் உட்பட அநேகர் ஆண்டவருக்குள் வழி நடத்தப்பட்டார்கள். அநேக கூடுகைகளை நாசரேத்திலிருந்தும் சகோதரர்கள் குழுக்களாக திருச்சி சென்று தியானக்கூடுகைகளை சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்கள் தலைமையில் நடத்தி வந்தார்கள். இந்நிலமையில் நாசரேத்தில் புதியதாக நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. (Margoschis College) அதிலே சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்கள் Chemistry பிரிவில் தலைமை விரிவுரையாளராக நியமனம் பெற்றார்கள். (HOD) கல்லூரி மாணவர்களிடையே எழுப்புதல் மிகவும் அதிகமாய் பரவியது. இதற்கிடையில் சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்கள் புதுக்கோட்டைக்கு B.Ed., கல்வி படிக்க செல்ல வேண்டியதிருந்தது. (Short Term Course) அவ்வமயம் சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்களே ஐக்கியத்தின் சகல பொறுப்புகளையும் கவனித்து வந்தார்கள்.
வருடா வருடம் ஆவிக்குரிய தியானக்கூடுகைகளும் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டன. மாநிலம் முழுவதுமாய் ஆயிரக்கணக்கான சகோதரர்கள் நாசரேத் ஜெப ஐக்கியத்தோடு இணைக்கப்பட்டவர்களானதால் வருடாந்தர தியானக் கூடுகைகள் பல வெளி இடங்களிலும் நடத்தப்பட்டன. சென்னை , தூத்துக்குடி, திருச்சி, குற்றாலம், திருமங்கலம், மதுரை, பசுமலை, சாட்சியாபுரம்) கன்னியாகுமரி மாவட்ட சகோதரர்களும் அநேகர் இரட்சிக்கப்பட்டார்கள். அதன் பின்பு பல வெளியிடங்களிலே, ஆலயங்களிலே 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை கன்வென்ஷன் கூட்டங்களும் நடத்தப்பட்டன.
நாசரேத் ஜெப ஐக்கியம் நாசரேத் மட்டுமல்லாமல் வெளியிடங்களிலும் ஸ்தாபிக்கப்பட்டது. மதுரைப்பகுதியில் இப்போதுள்ள மாட்டுத்தாவணி சந்தை. அன்று சந்தை எதுவும் செயல்படவில்லை. பஸ் நிலையமும் அங்கு அறிமுகப்படுத்தப்பட வில்லை . அது ஒரு காட்டுப்பகுதி, அங்கு தானே நாசரேத் ஜெப ஐக்கியத்தினரின் மதுரை பிரிவினர் சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்கள் தலைமையில் அங்கு தினமும் மாலையில் கூடி ஜெபிப்பது வழக்கமாயிருந்தது. அவ்வமயம் அன்னார் M.Sc., மேல்படிப்பு படித்துக் கொண்டிருந்தார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் கொலக்காம்பை பகுதியிலுள்ள காட்டில் நாசரேத் ஜெப ஐக்கியத்தினரின் நீலகிரி பிரிவினர் சகோ. ஜாண் அற்புதராஜ் (Bro. Dr. John Arputharaj) அவர்கள் தலைமையில் கூடி ஜெபித்துள்ளார்கள். இவர் மதுரை கல்லுரியில் மாணவராக இருந்த போது ஆண்டவரை ஏற்றுக் கொண்டார்கள். இவர் இங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்கள். அங்குள்ள பள்ளி வளாகத்தில் சனிக்கிழமைதோறும் உபவாச கூடுகைகளும் நடத்தப்பட்டன. இவர்களாலேயே ஊட்டி பகுதியிலுள்ள ஏராளமானவர்கள் ஆண்டவரிடம் வழி நடத்தப்பட்டு மனந்திரும்பினவர்களாக நாசரேத் ஜெப ஐக்கியத்தோடு இணைக்கப்பட்டார்கள். அவர்களுள் பலர் நாசரேத் வந்து ஐக்கிய கூடாரத்திலேயே தங்கியும் இன்னும் சிலர் நாசரேத் மற்றும் நாசரேத் அருகிலுள்ள கல்லூரிகளில் தங்களது மேற்படிப்பினையும் மேற்கொண்டார்கள். இவர்களுள் மிக முக்கியமானவர்கள் நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த சகோ. மனாசே அவர்கள். இவர் குன்னுர் இந்திய ராணுவ பயிற்சி கல்லுரிில் ஒரு அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது மேட்டுபாளையத்தில் குடியிருந்து வருகின்றார், மற்றும் தொண்டி ஜாசுவா அவர்கள் தற்சமயம் இவர் புதுச்சேரி மாவட்டத்திலுள்ள இந்தியன் வங்கியில் சீனியர் மானேஜராக பணிபுரிந்து வருகின்றார். இன்னும் பலர் உண்டு.
மேலும் சென்னைப் பகுதியிலுள்ளவர்கள் கிறிஸ்தவ கல்லூரி தோட்டங்களில் சகோ. ஜாண் விக்ளிப் (Dr. John Wycliffe) அவர்கள் தலைமையில் அநேகர் கூடி ஜெபித்து வந்தார்கள். அவ்வமயம் இவர் இக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்கள். அநேகர் நாசரேத் ஜெப ஐக்கியத்தோடு இணைக்கப்பட்டார்கள். இவர்களுள் பலர் அரசு உயர் பதவிகளில் பணிபுரிந்து வருகின்றார்கள். விஷேசமாக நாசரேத்தைச் சார்ந்தவரும், இலங்கையில் குடியிருந்து வந்தவருமான சகோ. ஜெயதாஸ் அவர்கள் சென்னை கிறிஸ்தவ கல்லுரியில் மாணவனாக இருந்தபோது ஆண்டவரை ஏற்றுக் கொண்டார்கள். தற்சமயம் இவர் அமெரிக்காவில் குடியிருந்து வருகின்றார். நாசரேத்தைச் சார்ந்த சகோ. ஜெபர்ஷன் (Dr. Jefferson) அவர்கள் ஐக்கியத்தின் சகோதரனாக சென்னை கிறிஸ்தவ கல்லுரி உயர்நிலை பள்ளியின் பிரன்ஸ்பாலாகவும் பின்பு ஓய்வு பெற்றபின் அப்பள்ளியின் தாளாளராகவும் பணிபுரிந்து வந்தார். இவர்களுடைய பணி காலத்தில் அநேக ஆசிரியர்களும் ஆண்டவரிடம் திருப்பப் பட்டார்கள். இவர்களே நாசரேத் ஜெப ஐக்கியத்தின் தலைவரான சகோ மைக்கேல் அவர்களின் கடைசி மகன் சகோ ஜோசப் அவர்களுக்கு இப்பள்ளியிலேயே ஆசிரியராக பணியிலே அமரச் செய்திட்டார். தற்சமயம் இவர்கள் இரு பேருமே சென்னையில் குடியிருந்து வருகின்றார்கள்
1962 ஆம் வருஷம் நான் பீயுசி (P.U.C.) படிக்க பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் சேர்ந்தேன். ஷப்ட்டர் ஹாஸ்டலில் (SCHAFTER HOSTEL) இருந்தேன். ஏற்கெனவே முழுமையாய் மனந்திரும்பும் பருவத்தில் இருந்ததால் நண்பர்கள் விக்றர் ராஜன், நல்லராஜ் அவருடைய அண்ணன் ஊமத்துரை என்ற இம்மானுவேல், தற்போது இம்மூவரும் போதகர்கள் இவர்களோடு சேர்ந்து சிற்றாலயத்தில் தினமும் கூடி ஜெபித்தும் வந்தோம். இவர்கள் கல்லூரி நண்பர்களாயிருந்து ஓய்வுநாள் பள்ளி ஊழியங்களில் என்னை பயிற்றுவித்தார்கள்.
எனது தகப்பனார் கேரளா எஸ்டேட்டிலே 1935 ஆம் வருட முதலாய் வேலை பார்த்து வந்ததினால் அவர்களை சந்திக்க, குடும்பமாய், எனது தாயோரோடு வருடத்திற்கு இருமுறை கேரளா சென்று வருவது வழக்கமாயிருந்தது. அப்பொழுது என் தகப்பனார் கேரளா தென்மலை அடுத்துள்ள அம்பநாடு, வென்சர் சேனைகிரி, நாகமலை, போன்ற டிவிஷன்களில் ப்பில்டு அதிகாரியாக பணியாற்றி வந்தார். நான் மனந்திரும்பினபின்பு 1962 ஆம் வருஷத்திலே, நாசரேத் ஜெப ஐக்கியம் இப்பகுதிக்கும் வந்து பிளாரன்ஸ் எஸ்டேட்டிலே (டிவிஷனிலே) கன்வென்ஷன் கூட்டங்களை நடத்தினார்கள். அவ்வமயம் ஐக்கிய சகோதரர்கள் அனைவருமே என் தகப்பனாரின் பங்களாவிலேயே தங்கியிருந்தோம். பிளாரன்ஸ் எஸ்டேட்டில் ஆலயத்திலே என் தகப்பனார் அநேக சமயங்களில் ஆராதனை நடத்துவதும் வழக்கமாயிருந்தது. ஆலயத்திற்கு தேவையான ஜெப்புஸ்தகங்கள் பாமாலை கீர்த்தனை புத்தகங்களையும் ஆலயத்திற்கு வழங்கியுமுள்ளார்கள். பின் நாட்களில் இந்த ஆலயம், திருநெல்வேலி திருமண்டலம் தென்காசி அடுத்துள்ள சாந்தபுரம் சேகரத்தோடு இந்த எஸ்டேட் ஆலயமும் சபையோடு இணைக்கப்பட்டது. பின் இங்கேயிருந்து என் தகப்பனார் கேரளா கோட்டயம் மாவட்டம், முண்டகாயம் பகுதிக்கு மாறுதல் செய்யப்பட்டு உயர் பதவியில் நியமிக்கப்பட்டார்கள். இங்கும் நாங்கள் குடும்பமாய் வருடந்தோறும் என் தாயாரோடு வருவதுண்டு. என் தாயார், ஆஸ்த்மா நோயினால் அடிக்கடி கஷ்டப்படுவார்கள். பல வைத்தியங்கள் செய்து பார்த்தும் எஸ்டேட் பகுதிக்கு வந்தால் மாத்திரமே ஆஸ்த்மாவினால் கஷ்டப்படுகிறவர்களாயிருந்தார்கள். ஒருமுறை என் தகப்பனார், பலருடைய ஆலோசனையை கேட்டு ஒரு நாட்டு வைத்தியரை அழைத்திருந்தார்கள். இரவு வேளையில் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனக்கு அந்த வைத்தியத்தின் மேல் சந்தேகம் ஏற்பட்டது. என் தகப்பனாரிடம் எதனையும் தைரியமாய் விபரங்களை கேட்க முடியாது. சற்று முரட்டாட்டமாகவே காணப்படுவார்கள். எனினும் நான் மனந்திரும்பியிருந்த படியினால் என் அம்மாவை தைரியப்படுத்தினேன். எனக்குத் தெரிந்த அறிவின் படிக்கு வைத்தியர் வருமுன் வீட்டைச் சுற்றி பலமுறை ஜெபித்து நடந்துள்ளேன். வைத்தியர் வந்ததும் புரிந்து கொண்டோம். அவர் ஒரு பூசாரி என்று. கருங்கால் கோழி, முட்டை, பூ போன்றவற்றை மாந்திரிகமாக கொண்டு வந்தார். நான் அம்மாவை தைரியப்படுத்தி என் இடுப்பிலே வேதாகமத்தை ஒளித்து வைத்துக் கொண்டு பூசாரி முன்னால் அமர்ந்திருந்த என் அம்மாவின் காலை நான் மிதித்து வைத்து, ஜெபித்துக் கொண்டேயிருந்தேன். நான் ஆவியில் நிரப்பப்பட்டவனாயுமிருந்தேன். பூசாரியின் பல மணி நேர போராட்டத்திற்கு பின் அவன் கூறியது, ஐயா இங்கே ஒரு பெரிய சக்தியிருக்கிறது. அது யாவற்றையும் தடுக்கின்றது. தன்னால் எதுவும் செய்யக்கூடாது என்று கூறிவிட்டு போய்விட்டார். ஆண்டவர் என் அம்மாவைக் காத்துக் கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐக்கியத்தின் எழிர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்திலே 5 நாட்கள் கன்வென்ஷன் கூடுகைக்காக சகோதரி எமியம்மாள் சன்னியாசினி என்ற ஒரு அம்மையார் நாசரேத் ஜெப ஐக்கியத்தினரை அழைத்திருந்தார்கள். ஐக்கியத்தினராக சுமார் 15 பேர்கள் சென்றிருந்தோம். நானும் சென்றிருந்தேன். எல்லா கூடுகைகளிலும் ஏராளமானவர்கள் ஆண்டவரால் சந்திக்கப்பட்டு மனந்திரும்பினார்கள். அன்று சகோதரி எமியம்மாள் சன்னியாசினி அம்மாவுக்கு எடுபடியாக எல்லா வேலைகளையும் செய்து வந்த ஒரு பையன் சகோ. சாம் செல்வராஜ் என்பவனாவார். அவர் ஒரு ஏழை பையனானதால் அவனை இந்த அம்மையாரே எடுத்து வளர்த்து வந்தார்கள். அவனும் இந்த கூடுகையிலே ஆண்டவரால் சந்திக்கப்பட்டான். பின் நாட்களில் இவர் நாசரேத் ஜெப ஐக்கியத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு நாசரேத் ஜெப ஐக்கிய கூடாரத்திலே பல நாட்கள் தங்கி மாலை தேரி ஐக்கிய கூடுகைகளிலும் பங்கு பெற்று ஆழமாய் மனந்திரும்பினவராகவும் ஆவியினால் அபிஷேகிக்கப் பட்டவராகவும் திரும்பிச் சென்றார். பின்பு அவர் அந்த அம்மையார் அவர்களால் பராமரிக்கப்பட்டு வேதாகம பயிற்சி கல்லூரியிலும் பயின்று இன்று இந்தியா உலகமெங்கிலும் பிரஸ்தாபமான அழைப்பின் எதிரொலி தேவ சபை Echo of His Call என்ற ஒரு ஸ்தாபனத்தினை தோன்றப் பண்ணினவரும் அதன் தலைவருமாயிருந்து (Pr. P. Sam Selvaraj) சென்னையை தலைமை இடமாக கொண்டு இந்தியா முழுவதிற்கு ஏராளமான மிஷினெரிகளை அனுப்பியும் அன்னார்களைத் தாங்கியும் ஊழியங்களைச் செய்து வருகின்றார்கள். மேலும் நெகேமியா வேதாகம கல்லூரி ஒன்றையும் வெகு சிறப்பாய் நடத்தியும் வருகின்றார்கள். அழைப்பின் எதிரொலி என்ற மாதாந்தர பத்திரிக்கையினை ஒரே சமயத்தில் 16 இந்திய மொழிகளிலும் அச்சடித்து பிரசுரித்தும் வருகின்றார்கள்.
தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் கன்வென்ஷன் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த அநேகர் நாசரேத் ஜெப ஐக்கியத்தினரோடு இணைந்தார்கள். இவர்களுள் முக்கியமானவர் சகோ. ஜெபமணி அவர்கள். இவர்களுடைய பெற்றோரின் வீட்டிலே பல வருடங்களாக ஜெப ஐக்கியத்தினரின் மாதாந்தர கூடுகைகள் நடைபெற்று வந்தன. சகோ. ஜெபமணி அவர்கள் தற்போது சென்னையில் அரசு உத்தியோகஸ்தராக பணிபரிந்து, ஓய்வு பெற்று சென்னையில் குடியிருந்து வருகின்றார். அதனால் தற்சமயம் கன்னயாகுமரி நித்திரைவிளையில் ஐக்கியத்தின் மாதாந்தர கூடுகை சகோ. இரத்தினம் அவர்கள் வீட்டில் நடைபெற்று வருகின்றது, நாசரேத் சகோ. அதிசயம் அவர்கள் இக்கூடுகையை நடத்தி வருகின்றார்கள்.
ஆசிரியரின் ஆரம்ப கால கேரளா வாழ்வு :
1963 ஆம் ஆண்டிலே என் தகப்பனாரின் நிர்பந்தத்தினால் கேரளாவிலுள்ள ஒரு தேயிலை மற்றும் ரப்பர் எஸ்டேட்டிலே (Office Staff) ஆக பணியில் அமர்த்தப்பட்டேன். சுமார் 30 அதிகாரிகள் உள்ள எஸ்டேட்டில் நான் மாத்திரமே தமிழ் பேசும் அதிகாரி. ஆண்டவர் தம்முடைய திருசித்தத்தின் படிக்கே என்னை அங்கே கொண்டு போயுள்ளார் என்பதை என் பின் நாட்களில் தான் அறிந்துணர முடிந்தது. உலக தோற்றத்திற்கு முன்பாகவே தேவனால் முன் குறிக்கப்பட்டு, நான் என் தாயின் கருவில் உருவாகும் போதே ஆண்டவரின் புஸ்தகத்திலே என்னைக் குறித்து எழுதப்பட்டப்படிக்கே ஆண்டவரே என் வாழ்வின் பல விதமான பகுதிகளை திறந்தும் பின் ஒவ்வொன்றாக அடைத்தும் அவற்றின் வாயிலாக அநேக அனுபவங்களை நான் அடைந்திடவே என்னைக் கொண்டு செல்ல அனுமதித்துள்ளார் என்பதை பின்பாகவே அறிந்துள்ளேன். ஆகவே 1967 ஆம் ஆண்டு வரை கேரளா எஸ்டேட்டிலே பணிபுரியலானேன். தனிமையில் ஆண்டவருக்காய் எப்படி வாழக்கூடும் போன்ற அநேக அனுபவங்களை கற்கலானேன். பின் நாட்களில் எனக்கு மலையாளம் தேவைப்படும் என்பதினை அறிந்தே என் தேவன் தம் அநாதி தீர்மானத்தின் படிக்கே என்னை கேரளாவுக்கு கொண்டு போயுள்ளார்.
என் தகப்பனார் கேரளாவிலே ஒரு ஆங்கிலேயருடைய எஸ்டேட்டிலே தலைமை பீல்டு அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்கள். Malayalam Plantations Ltd., (Incorporated in England), (Branch) Mundakayam Branch Estate, Kottayam District, Kerala ஆகையினால் என்னுடைய 18 வது வயதிலே என்னை நிர்பந்தமாய் அந்த ஆங்கிலேயருடைய கம்பெனியின் மற்றொரு எஸ்டேட்டில் வேலையில் சேர்த்து விட்டார்கள். Malayalam Plantations Ltd., (Incorporated in England), (Branch) Cheruvally Estate, Kottayam District, Kerala. நான் வேலை செய்த எஸ்டேட்டுக்கும் என் தகப்பனார் வேலை செய்த எஸ்டேட்டுக்கும் சுமார் 30 கிலோ தொலை தூரம் இருக்கும். நான் வாரந்தோறும் சைக்கிளில் அவர்களை சந்தித்து என் வீட்டிற்கு தேவையான சகல பொருட்களையும் பெற்று வருவேன். நான் மனந்திரும்பி இருந்தபடியினால், ஆண்டுதோறும் நாசரேத் ஜெப ஐக்கியத்தில் நடைபெறும் வருடாந்தர தியானக்கூடுகைக்கும் நான் தவறாமல் வந்து பங்கு பெறுகிறவனாயிருந்தேன். தினந்தோறும் மாலைப்பகுதியில் எஸ்டேட்டில் காட்டுப்பகுதியில் சிறிது தூரம் நடந்து ஜெபித்துவிட்டு வருவது வழக்கம், ஒருநாள் ஒரு பாறையில் அமர்ந்து ஜெபித்தேன். பாறையின் கீழ்பகுதியில் இரத்தக்கறைகள் காணப்பட்டது, அதனை என் காலால், சுரண்டி விழச் செய்தேன். அன்று இரவு வீட்டில் வந்து படுத்திருக்கையில், நடு இரவிலே என் வீட்டைச் சுற்றி, மணி சத்தம் கேட்கப்பட்டு ஆட்கள் ஓடிக் கொண்டிருப்பதை கேட்டேன். சற்று பயம் ஏற்பட்டது. உடன் தானே, வேதாகமத்தை எடுத்து என் பக்கம் வைத்துக் கொண்டு ஜெபித்தேன். ஆண்டவருடைய பாதுகாப்பை வேண்டினேன். சற்று அரைத் தூக்கத்தோடு காணப்பட்டு சில தரிசனங்களை உண்மையாய் நடப்பதைப் போன்று கண்டேன். மலை அரசி என்ற ஒரு தேவதை என்னிடம் வந்து என் ஆலயத்தை ஏன் மிதித்தாய், பக்தர்கள் பலிசெலுத்தின இரத்தத்தை ஏன் சுரண்டினாய் எனக் கேட்டது. அப்பொழுது தான் நான் உணர்ந்தேன். அன்று மாலையில் ஜெபித்த பாறை அந்த தேவதையின் ஆலயம் என்றும், காணப்பட்ட இரத்தக் கறை பலிசெலுத்தப்பட்டது என்று. அன்றுதானே என்னை கொன்று விடப்போவதாக கூறி பலரை கூட்டிவரச் சென்றது. நான் மறுபடியும் எழுந்து சுற்றிப் பார்த்து விட்டு ஜெபித்து படுத்துக் கொண்டேன். மறுபடியும் ஒரு தரிசனம் உண்மை சம்பவம் போல் தெரிந்தது. அந்த தேவதை அநேகருடன் வந்தது. என்வீட்டைச் சுற்றி ஓடி என்னைத் தேடியது. என்னைக் காணக்கூடாமல் ஒரு புகைமண்டலம் என்னை மூடிக்கொண்டது. அந்த தேவதை என்னைக் காணக் கூடாமல் அருகிலுள்ள மரத்தில் ஏறி, தூரமாய் என்னைத் தேடியது. அப்பொழுது அவைகளுக்கு பெருஞ்சத்தம் கேட்க, ஒருவன் கூறினான், இவன் எங்கோ போய் தன்னுடையவர்களை ஏராளமாய் அழைத்து வந்து கொண்டிருக்கிறான். இனி அவர்கள் இருக்கக்கூடாது என்று கூறியபடிக்கு யாவும் கலைந்து சென்று விட்டது. நானும் நன்றாக தூங்கி காலை 6 மணிக்கு உற்சாகமாய் விழித்தேன். எனக்குள்ளே ஒரு தேவதைரியம் உண்டாயிருந்தது
கேரளா எஸ்டேட்டில் தனிமையில் வேலை செய்து வந்த வருடங்களிலும் (1963 - 1967) என்னை யோசேப்பை போன்றும், தானியேலைப் போன்றும் எந்த பாவங்களிலும் விழாதபடி என் கற்பை காத்துக் கொள்ள தேவனே கிருபை செய்துள்ளாரே. எஸ்டேட்டில் தனி பங்களா ஒன்றில் நானும் என் வேலைக்காரனுமாக தங்கி வந்த நாட்களிலெல்லாம் என் மாலை நேரத்தினை ஜெபத்தில் செலவிட தவறவில்லை . அவ்வமயம் ஒரு நாள் திருமணமான ஒரு சகோதரி என் பங்களாவுக்கு வந்து தன்னுடைய லைன் வீடுகளுக்கான குழாயிலே தண்ணீர் வரவில்லை தயவாய் தனக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டு என் வீட்டிற்கு ஒரு குடத்துடன் வந்தார்கள். அதோடு அவர்கள் கையிலே ஒரு ஆரஞ்சு பழத்தையும் கொண்டு வந்து கொடுத்தார்கள். நான் பழத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து அனுப்பினேன். ஆண்டவர் என்னைத் தடுத்து அந்த பழத்தை சாப்பிடாதே என்ற எண்ணத்தைக் கொடுத்தார். நான் கீழ்ப்படிந்தவனாய் அதனை காட்டிற்குள்ளே வீசி எறிந்தேன். மறுநாளிலும் அதே சகோதரி குடத்துடன் என் வீட்டிற்குள்ளே வந்து தன்னோடு வேசித்தனம் செய்ய என்னை நிர்பந்தித்தாள். அவ்வமயம் என் வேலைக்காரனும் என் வீட்டில் இல்லை. கடைக்குச் சென்றிருந்தான். ஆண்டவர் கொடுத்த தைரியத்தின் படிக்கு அன்னாருக்கு இச்செயல் எவ்வகைகளிலெல்லாம் பாவங்கள் என்று எடுத்துக்கூறி இயேசுவின் சுவிசேஷத்தை அறிவித்தேன். அதற்கு பின்பாக அவர்கள் தண்ணீர் பக்கமே வரவில்லை
மேலும் எஸ்டேட்டில் அதிகாரிகள் யாவரும் மாலை வேளையை எஸ்டேட் கிளப்பில் செலவு செய்து வருகின்ற போது நான் மாத்திரம் அங்கே காணப்படாதது அவர்கள் யாவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அங்கே பார் (BAR) வசதி உண்டு. என் குணத்தை (Character) சந்தேகித்தார்கள். சுமார் 3 வருட காலம் கழித்து ஒரு மூத்த அதிகாரி ஒருவர் என்னிடம் வந்து என் மாலை நேரப் போக்கினை நேரில் காண என் வீட்டிற்கு வர விரும்புவதாக என்னைக் கேட்டுக் கொண்டார்கள். நான் அன்னாரை என் வீட்டிற்கு அழைத்து சென்று, நான் மாலைதோறும் ஜெபிக்கின்ற ஜெப அறைக்கு அழைத்துச் சென்றேன். அங்கே பாய் விரிக்கப்பட்டு வேதாகமம் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளதைக் கண்டார். அங்கே தானே ஜெபிக்க அழைத்தபோது, என் கால்களைப் பிடித்து பணிந்து மன்னிப்பு கோரினார். பின்பு அந்த வருட நாசரேத் ஜெப ஐக்கிய தியான கூடுகைக்கும் அவரும் என்னோடு நாசரேத் வந்தார். அவ்வருட தியான கூடுகையில் கொடுக்கப்பட்ட தேவசெய்திகளை அந்த மலையாள சகோதரனுக்காக, மலையாள மொழியில் மொழிபெயர்த்து அளிக்க தேவன் எனக்கு கிருபை செய்தார்.
இந்த எஸ்டேட்டிலே ஆலயம் எதுவும் கிடையாது. ஆனால் 5 மைல் தொலைவில் இலங்கை பெந்தெகொஸ்த் என்ற ஒரு சிறு சபை ஒன்று இருந்தது. அதிலே இரண்டு சகோதரிகள் மட்டுமே இருந்தனர். இவர்களுக்கு ஒரு சிறு ஓலை ஜெப வீடு மாத்திரமே அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் தங்களுக்கு நேரம் கிடைக்கும் வேளைகளில் எஸ்டேட் பகுதிக்கு வந்து வீடு சந்திப்பு செய்வது வழக்கம். இவர்களுக்கு தமிழ் தெரியாது. ஆகையினால் என் வீட்டுக்கு மட்டும் அவர்கள் வருவதில்லை. என் வீட்டை பார்த்துக் கொண்டே போவது வழக்கம். ஒரு நாள் ஒரு வீட்டை அவர்கள் கடந்து செல்கையில் என் வீட்டிலிருந்து கிறிஸ்தவ பாடல் ஒலித்ததை கேட்டு அவர்கள் என் வீட்டில் எனக்கு சமையல் உதவி செய்து வந்த தம்பியிடம் கேட்டு நாங்கள் தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் என அறிந்து கொண்டார்கள். பின்பு ஒரு நாள் நான் வீட்டில் இல்லாத வேளையில் அவர்கள் என் வீட்டிற்கு வந்து என் வேலைக்காரனோடு பேசிவிட்டு ஜெபித்து சென்றுள்ளார்கள். நான் ஞாயிற்று கிழமைகளில் என் தகப்பனாரைக் காணவும் எனக்குத் தேவையான வீட்டுப்பொருட்களை வாங்கவும் செல்வது வழக்கமாயிருந்தது. மறு வாரத்திலும் அவர்கள் என் வீட்டிற்கு வந்து என் வீட்டை நன்றாக பெருக்கி சுத்தம் செய்துள்ளார்கள். நான் மாலையில் வந்து பார்த்த போது ஆச்சரியப்பட்டேன். யாவற்றையும் கேட்டுத் தெரிந்துக் கொண்டேன். தேவனுடைய ஊழியக்காரர்கள் என் வீட்டிற்கு வருவதையும் அன்னார்களை உபசரிப்பதும் எனக்கு அதிக விருப்பமானதாகும். அந்த CPM Sisters அடுத்தடுத்த வாரங்களில் என் வீட்டிற்கு வந்து அவர்களே எனக்கான சமையலை செய்து அவனுக்கும் சில சமையல் முறைமைகளையும் கற்றுக் கொடுத்துள்ளார்கள். ஆனாலும் ஒரு சமயத்திலும் அவர்கள் சமைத்ததை சாப்பிட்டதே கிடையாது. அவர்கள் வந்து ஜெபித்து தம்பியை உற்சாகப்படுத்தியுள்ளதை அவன் வாழ்வின் மாற்றத்திலே காண முடிந்தது. பின்பு என்னைப்பற்றியும் கேட்டு அறிந்து என்னை சந்திக்க வாரநாட்களில் என் வீட்டிற்கு வரத் தொடங்கினார்கள். என்னுடைய ஆவிக்குரிய வாழ்வையும் வளர்ச்சியையும் கண்டு என்னை அதிகமாய் நேசித்தார்கள். நானும் அவர்கள் ஐக்கியத்தை அதிகமாய் நேசித்தேன். பல மாதங்களுக்கு பின்பு அவர்களின் அதிகமான வற்புறுத்தலின் காரணமாக அவர்களின் ஜெப வீட்டிற்கு CPM Faith Home ஆராதனைக்குச் சென்றேன். அது ஒரு சிறு சபை, ஓலை குடிசை, சபை மக்கள் 5 பேர்கள் மாத்திரமே. அதுவும் அவர்கள் ஏழைக் கூலித்தொழிலாளர்களே. அந்த சபைக்கு வருமானம், காணிக்கை என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. முற்றிலுமாய் 100% விசுவாச வாழ்க்கை மாத்திரமே CPM தலைமை இடத்திலுமிருந்தும் எந்த நிதி உதவியும் கிடையாது. இந்த சபையில் ஊழியக்காரர்களாக இந்த இரு சகோதரிகள் மாத்திரமே நியமிக்கப்பட்டிருந்தார்கள். அந்த நாட்களில் கேரளா மாநிலம் முழுவதிலும் அரிசி பஞ்சம், அரசு ரேஷன் மூலம் எப்போதாவது சிறிது அரிசி வழங்கப்படும். ஆகையினால் கேரளா மக்கள் 3 வேளையிலும் காய்ந்த மரவள்ளி கிழங்கினை மாத்திரமே சாப்பிட்டு வந்தார்கள். இந்த CPM சபையில் காய்ந்த மரவள்ளி கிழங்கே காணிக்கையாக வந்ததை காணமுடிந்தது. அதுவும் சபைக்கு போதுமானதாக இல்லை. அநேகமாக உபவாச நாட்களையே அதிகமாக கடைபிடித்தவர்களாக காணப்பட்டார்கள். நான் அங்கு சென்று வந்த நாட்களில் அவர்கள் பசியும் பட்டினியுமாய் இருந்து ஜெபித்து வந்ததை நேரில் கண்டேன். இது என் மனதை பெரியதாய் உடையச் செய்தது. நான் அவர்களை அதிகமாய் நேசித்து வந்தபடியினால் நான் ஒரு முடிவு எடுத்தேன். எல்லா வார இறுதியிலும் என் தகப்பனாரிடம் சென்று அவர்களிடமிருந்து எவ்வளவு அரிசி பெற முடியுமோ அவ்வளவு அரிசி பெற்று வந்து அத்தனையினையும் இந்தவிசுவாச வீட்டிற்கு என்னுடைய அரிசியையும் சேர்த்து வழங்கி வந்தேன். அதனைப் பெற்றுக்கொள்ள அந்த சகோதரிகள் வெகுவாய் மறுத்திருந்தாலும் என்னுடைய நிர்பந்தத்தால் அவர்கள் அதனைப் பெற்று பல மாதங்களாக போஷிக்கப்பட்டார்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. தொடர்ந்து நானும் அந்த நாட்களில் அரிசியை மறந்து மரவள்ளி கிழங்கையே சாப்பிட கற்றுக் கொண்டேன். இன்றும் நான் கேரளாவுக்குச் சென்றால் மரவள்ளி கிழங்கினையும் மீனோடு சேர்த்து ஹோட்டல்களில் கேட்டு சாப்பிட்டு வருகிற பழக்கமாகியுள்ளேன். 1966 ஆம் ஆண்டிலே கேரளா கொட்டராக்கரையில் நடந்த கன்வென்ஷன் கூட்டத்திலே CPM தலைமை பாஸ்டர் லூக்கோஸ் அவர்களால் பிரதீஸ்டையும் செய்யப்பட்டேன்.
எஸ்டேட்டில் வீட்டு மளிகை காய்கறி பொருட்கள் வாங்க கடை வசதிகள் இல்லாததினால் மாதம் ஒரு முறை உத்தியோகஸ்தர்கள் யாவருமாய் ஒரு வாகனத்தில் பக்கத்து பட்டணத்திற்கு சென்று பொருட்கள் வாங்கி வருவதும் வழக்கம். அங்ஙனம் ஒரு முறை நானும் அவர்களோடு சென்றேன். அன்று சிறிது காலதாமதம் ஏற்பட மழையின் காரணமாக யாவருமாய் ஒரு சினிமா தியேட்டருக்குள் செல்ல நேரிட்டது. நான் தியேட்டரை அறிந்திட்டதில்லை. சினிமா காட்சி தொடங்கியது. ஆண்டவர் என் மனசாட்சியோடே பேசி நான் குற்றம் புரிந்தவனாக வாதிக்கப்பட்டேன். மறுநாள் நான் என் வேலைக்காக அலுவலகம் செல்லும் வழியில் ஒரு பாறையில் வழுகி கீழே விழுந்தேன். பலத்த காயம் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் காலில் தையல் போடப்பட்டு வீட்டில் இருந்தேன். அன்று மதியம் தபால்காரர் எனக்கு ஒரு கடிதம் கொண்டு வந்தார். அது என் அம்மாவிடமிருந்து நாசரேத்திலிருந்து வந்தது. ஒரு சில நாட்களுக்கு முன் எழுதப்பட்டிருந்தது. அதில் மகனே உன்னைக்குறித்து ஒரு சொப்பனம் கண்டேன். அதில் நீ பாவம் செய்துள்ளவனாய் காணப்பட்டாய். மகனே பாவமான வழியில் சென்றுவிடாதே என்று எழுதப்பட்டிருந்தது. உடன்தானே அதிகமாய் அழுதேன். அம்மாவிடம் யாவற்றையும் விவரமாய் எழுதி மன்னிப்பு கேட்டேன். ஆண்டவர் தாமே இன்னும் அதிகமாக அற்புதமான பல வழிகளில் என்னை நடத்தி ஆவிக்குரிய அநேக மேன்மையான காரியங்களையும் தேவனுக்கு மகிமையாக செய்ய பண்ணியுள்ளாரே. அங்கே அறிந்து கொண்ட சிறு சிறு மலையாளமே பின் நாட்களில் மலையாள மொழியிலே தேவ செய்திகளைக் கொடுக்கவும் உலக பிரகாரமான வாழ்விலே மிக உயர்வான தரத்தினையும் பெற்றிடச் செய்திட்டது. இதுவும் தேவனுடைய அநாதி தீர்மானமே.
ஆசிரியரின் கல்லூரி வாழ்வு :
பின்பு நான் என் தகப்பனாரின் அனுமதி பெற்று எஸ்டேட் பணியை ராஜினாமம் செய்துவிட்டு நாசரேத் திரும்பினேன். கல்லூரி படிப்பிற்காகவே 1967 ஆம் ஆண்டில் தானே 1970 வரை நாங்கள் குடும்பமாய் நாசரேத்தை விட்டு தூத்துக்குடியில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினோம். தூத்துக்குடி VOC கல்லூரியில் ஆங்கில இலக்கிய பிரிவில் சேர்ந்து படிக்கலானேன். தூத்துக்குடியில் இப்போதுள்ள அமெரிக்கன் ஆஸ்பத்திரி நிலம் அன்று ஒரு கட்டிடமும் இல்லாமல் வெள்ளை மண் தேரியாக இருந்தது. ஆகையால் என் மாலை வேளை ஜெபத்திற்காக இந்த வெள்ளை மண் தேரிக்கு தினமும் சென்று வந்தேன். அங்கே விளையாடிக் கொண்டிருந்த அநேக இந்து மாணவர்கள் என்னுடன் பழக ஆரம்பித்தார்கள். பின் என்னோடு ஜெபித்தார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தங்கள் குடும்பங்களின் கடுமையான பல எதிர்ப்புகளுக்குள் உண்மையாய் ஏற்றுக்கொண்டார்கள். 1970ஆம் ஆண்டில் 15 இந்து மாணவர்கள் சண்முகபுரம் தூய பேதுரு ஆலயத்தில் கனம். ஜேம்ஸ் ஐயர் (Rev. James) அவர்களால் திருமுழுக்குப் பெற்றார்கள். அந்நாட்களில் தூத்துக்குடியில் வாழ்ந்து வந்த நண்பர்கள் சகோ. ஜேம்ஸ் இரத்தினராஜ், சகோ. வாஷிங்டன், சகோ. தேவதாஸ் போன்றோரின் ஐக்கியம் கிடைத்தது. இவர்களெல்லாருமே தற்போது பெரிய மெஷினரி ஸ்தாபனங்களின் பொறுப்பாளர்களாகவும், வேதாகம கல்லூரிகளின் ஸ்தாபகர்களாகவும் உள்ளனர். இவர்களோடு கூடி ஜெபிக்கும் ஐக்கியம் கிடைத்தது. இவர்கள் ஆத்தும பாரத்தோடு ஜெபிக்கும் ஜெபம், தாரை தாரையாக கண்ணீர் வடித்து மன்றாடும் ஜெபங்களை நேரில் கண்டு அதிர்ச்சியடையப்பட்டுள்ளேன். இவைகளெல்லாமே என்னை பயிற்சிக்குள்ளாக்கிற்றே
என் தங்கை சுசிலா தூத்துக்குடி தூய மேரீஸ் பெண்கள் கல்லூரியில் பயின்று வந்தார்கள். அவர்களுள் ஒரு பிராமண ஸ்திரீ ஆண்டவரை நேசித்தும் ஆனால் தன் தெய்வங்களை விட்டு விடக் கூடாமலும் போராட்டத்திற்குள்ளாக்கப்பட்டிருந்தார்கள். ஆண்டவர் அநேக தரிசனங்களையும், காட்சிகளையும் அவளுக்கு காண்பித்தும் அவளால் பூரணான விசுவாசத்திற்குள் வரக் கூடாதவளாக காணப்பட்டாள். அச்சமயம் நானும் தூத்துக்குடியிலிருந்து நாசரேத் ஜெப ஐக்கியத்திற்கு அடிக்கடி போய் வந்து கொண்டிருந்தேன். ஒரு நாள் நாசரேத் தேரி ஜெப வேளையில் எல்லா சகோதரர்களும் ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். சகோ. ஜாண் கோயில் பிச்சை அவர்கள் ஆவியில் நிறைந்து வழக்கம் போல் ஒவ்வொருவர் தலையிலும் கைவைத்து அபிஷேகித்து ஜெபித்து கடந்து வந்தார்கள். அதன்படிக்கு என் தலையில் கைவைத்து ஆவியில் நிறைந்து "நீ பிலிப்புவாக இருக்கிறாய்” என்று சத்தமாய் பல தடவை கூறி என்னைப் பிடித்து அசைத்து ஜெபித்தார்கள். நானும் ஆவியில் நிரப்பப்பட்டேன். ஆவியில் நிறைந்தவனாய் துள்ளி குதித்து ஓடுகையில் மாலை இரவு வேளையானதினால் அறியாதவனாய் ஒரு சிறு பனை விடலி மரத்தின் மேல் விழுந்தும் விட்டேன். அப்போது பனை விடலிலுள்ள ஒரு மட்டை என் கன்னத்தில் குத்தி ஒடிந்துள்ளது. அதிலிருந்து இரத்தமும் வடிந்து கொண்டும் இருந்துள்ளது. நான் இதனை அறியாதவனாய் வேர்வை வடிகிறதாய் எண்ணி அதனை துடைத்து விட்டுக்கொண்டே ஜெபித்திருந்துள்ளேன். அங்கு தேரிப் பகுதியில் மின்விளக்கு எதுவும் கிடையாது. பின்பு ஐக்கிய ஜெபம் முடிந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஒரு தெரு மின் விளக்கு அண்டையில் வந்தபோது மற்ற சகோதரர்கள் என் சேட்டில் அதிகமான இரத்தம் படிந்துள்ளதைக் கண்டு என்னைத் தடுத்து நிறுத்தி இரத்தம் வடியும் இடத்தை ஆராய்கையில் என் கன்னத்தில் ஒரு பனை மட்டை குத்தி ஒடிந்து அதில் இருந்ததை கண்டு அதனை எடுத்து விட்டார்கள். அன்று இரவுக்குள்ளே அது பூரண சுகமடைந்து அதில் ஒரு தளும்பு மட்டுமே காணப்பட்டது. இதனை என் குடும்பத்தாருக்கு அறிவிக்காமல் தூத்துக்குடிக்கு திரும்பி வந்தேன். வழக்கம் போல என் தங்கையின் நண்பர்கள் அந்த பிராமண பெண்மணியை அழைத்துக் கொண்டு அவர்கள் கண்ட தரிசனத்திற்கான விளக்கம் பெற என் வீடு பக்கம் வந்தார்கள். அவள் கண்ட தரிசனம் “உன் சந்தேகத்தை இந்த கதவு எண் கொண்ட வீட்டிற்கு போய் அங்கே பிலிப் என்ற சகோதரனிடம் கேட்டுக்கொள்” என்பதாகும். இவளை அழைத்து வந்த சகோதரிக்கு எங்கள் வீட்டு கதவு எண் எது என்றும் அங்கே பிலிப் என்பவரும் தெரியாததினாலே என்னிடமே வந்து வீட்டு இலக்கம் எது என்றும் மேலும் பிலிப் என்பவர் எங்கே என்றும் என்னிடம் விசாரித்தார்கள். இது என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கினது. நான் பிலிப் என்று அபிஷேகிக்கப்பட்டதை யாவருக்கும் வெளிப்படுத்தினேன். அந்த ஸ்தீரி ஆச்சரியப்பட்டு சகல சந்தேகங்களும் நீங்கினவளாக தேவசமாதானத்தோடு சென்றார்கள். அன்றுமுதல் நான் பிலிப் ஜெயசிங் என்று யாவராலும் அழைக்கப்பட்டேன்.
என் தங்கை சுசிலாவும் பல கல்லூரி மாணவிகளோடு ஐக்கியங்கொண்டு ஜெபித்து வந்தார்கள். அவர்களுள் முக்கியமானவர் சென்னை A.G. தலைமை பாஸ்டர் மோகன் அவர்களின் மனைவி கெத்சியாள் அம்மாள் ஆவர் (Mrs. Getziyal Mohan). மேலும் எனது தாயார் ஜெமி ஜேக்கப் அவர்களும் தூத்துக்குடி கடற்கரையில் மாலை வேளையில் சில தாய்மார்களோடு அடிக்கடி கூடி ஜெபித்து வந்தார்கள். அவர்களுள் முக்கியமானவர் சகோதரி. கெத்சியாள் அவர்களின் தாயார் ஆவார். பெரிய எழுப்புதல் எங்கும் பரவிக் கொண்டிருந்தது. அவ்வமயம் தான் 28.11.1969ஆம் நாள் என் தங்கைக்கும் சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்களுக்கும் தூத்துக்குடியில் தேவ சித்தத்தின்படிக்கு திருமணம் நடைபெற்றது. என் தங்கையின் கல்லூரி படிப்பு இடைவெளியில் நிறுத்தப்பட்டது. நாசரேத் ஜெப ஐக்கியத்தை சார்ந்து மூணாறு எஸ்டேட்டில் வாசம் செய்து வந்த பிரபலமான வியாபார செல்வந்தர்களான சகோ. மோகன், சகோ. ஜெயபால் அவர்களின் தந்தை திரு. M.P. டேவிட் அவர்கள் என் தங்கையின் திருமணத்திற்கு தேவையான அனைத்து காய்கறிகளையும் மூணாறிலிருந்து இரவோடு இரவாக இலவசமாக கொண்டு வந்து சேர்த்தார்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
ஐக்கியத்தின் ஆரம்பகால ஊழியங்கள் :
ஞாயிற்றுக்கிழமை ஊழியங்களாக மாதத்தின் எல்லா ஞாயிற்று கிழமைகளிலும், கோயம்புத்தூர், மதுரை, சாட்சியாபுரம், சங்கரலிங்கபுரம், தம்மநாயக்கன்பட்டி, கட்டனார்பட்டி, அருப்புக்கோட்டை, கலியாணசுந்தரபுரம், சங்கரன்கோயில், நீலகிரியிலுள்ள நான்சன் எஸ்டேட், கூடலூர், கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளை, ஆலங்குளம், மீனாட்சிபட்டி, பாளையங்கோட்டை, இராமநாதபுரம், தொண்டி, சிவகங்கை, மானாமதுரை, வாகைகுளம் ஆகிய இடங்களில் நாசரேத் ஜெப ஐக்கியத்தினர் ஆவிக்குரிய கூட்டங்களை நடத்தி வந்தார்கள். சகோதரர்கள் கர்த்தருக்குள் பெலப்பட்டு சாட்சியாக வளர்ந்து வந்தார்கள். நாசரேத்திலும் நாசரேத் ஜெப ஐக்கியம் மிகப்பெரிய அளவில் ஆண்டவருக்காக சாட்சியுள்ள வாலிபர்களாக எங்கும் எழும்பி பிரகாசித்தார்கள். நாசரேத்திலுள்ள தெருக்கூடுகைகளான ஜெபக்கூட்டங்களில் மட்டுமல்லாது அடுத்துள்ள அனைத்து கிராம ஆலயங்களிலும் ஐக்கிய சகோதரர்கள் தேவ செய்தி கொடுக்க அழைக்கப்பட்டார்கள். நாசரேத் ஜெப ஐக்கியத்தினர் அனைவருமே அன்று முதல் இன்று வரை ஒருவருக்கொருவர் கண்டு கேட்டு வாழ்த்தும் போது மாரநாதா என்று மட்டுமே கூறி வாழ்த்தி சந்திப்பதும் மாரநாதா என்று வாழ்த்து கூறி பிரிவதும் வழக்கமாகிவிட்டது. மாரநாதா என்பது அது நாசரேத் ஜெப ஐக்கியத்தினரின் வழக்கச் சொற்களாய் மாறிவிட்டது.
இத்தனையாய் நாசரேத் ஜெப ஐக்கியம் பெருகி வளர்ந்து வருகின்ற போது பழமையான வேதசாஸ்திர கல்லூரி ஒன்று CSI திருநெல்வேலி திருமண்டலம் சார்பில் நாசரேத் அடுத்துள்ள தேரிக்காட்டின் மேல்புறமாயுள்ள திருமறையூர் என்ற பகுதியில் இயங்கி வந்தது. இந்த ஸ்தாபனத்தில் தமிழகமெங்கிலுமிருந்து வந்து குரு பட்டத்திற்கான கல்வி பயில வந்தவர்களும் நாசரேத் ஆலயத்திலும் அடுத்துள்ள கிராம ஆலயங்களிலும் பயன்படுத்தப்பட்டார்கள். இவர்கள் நாசரேத் வீட்டு ஜெப கூடுகைகளிலும் தெரு கூடுகைகளிலும் பயன்படுத்தப்பட்டார்கள். இப்பொழுது தான் நாசரேத்தில் ஆவிக்குரிய விஷயத்தில் ஒரு குழப்பம் நேரிட ஆரம்பித்தது. குரு பட்டம் பெற கற்க வந்த ஊழியர்கள் மனந்திரும்புதலை பிரசங்கிப்பதில்லை. நாசரேத் ஜெப ஐக்கியத்தினர் அளித்து வந்த தேவ செய்தி மற்றும் அன்னார்கள் அளித்து வந்த அனுபவ சாட்சியின் வார்த்தைகளுக்கும், குருபட்ட பயிற்சி ஊழியர்களின் செய்திகளுக்கும் இடையே பெரிய கருத்து வேறுபாடு வர ஆரம்பித்தது. நாளடைவில் நாசரேத் பொது சபை மக்கள் குருப்பட்டம் பெற வந்த ஊழியர்களையே பெரிதும் விரும்ப ஆரம்பித்தார்கள். பாவம், பாவி, மனந்திரும்பு, ஒப்புரவாகு என்று சாட்சியாக கூறி வரும் ஜெப ஐக்கியத்தினரின் செய்திகள் மக்களிடையே விரும்பாத செய்தியாக காணப்படத் தொடங்கியது. இது மிகப் பெரிய சவாலாக நாசரேத் ஜெப ஐக்கியத்தினருக்கு காணப்பட்டது. உடன் தானே அன்று முதலாய் பல மாதங்களாக நாசரேத் ஜெப ஐக்கியத்தினர் மிக மிக வைராக்கியமாய் கண்ணீரோடும் உபவாசத்தோடும் வேத சாஸ்திர கல்லூரிக்கு எதிராக ஜெபிக்கத் தொடங்கினார்கள். ஆண்டவர் ஜெப ஐக்கியத்தினரின் கண்ணீர் ஜெபத்திற்கு பதில் அளித்தார். நாசரேத் தேரிக்காட்டுப் பகுதியிலுள்ள திருமறையூரில் காலம் காலமாய் நடைபெற்று வந்த வேதசாஸ்திர கல்லூரி மதுரை அரசரடிக்கு மாற்றியமைக்கப்பட்டது. இது நாசரேத் ஜெப ஐக்கியத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி. அதோடு நாசரேத்தில் இயங்கி வந்த சினிமா தியேட்டரும் ரெஜினா / ரூபி தியேட்டர் ஐக்கிய ஜெபத்தின் பலனாக நிரந்தரமாக மூடப்பட்டது. ஏனெனில் ஒவ்வொரு நாள் இரவிலும் தியேட்டர் படம் முடிந்து ஜனங்கள் வெளியே வரும் வேளையில் ஐக்கிய சகோதரர்கள் சிலர் சகோ. தானியேல் ஜெ. ஜெசுதாஸ் (நீலகிரி சகோதரன்) அவர்கள் தலைமையில் தியேட்டர் வாசலிலே பலரை சந்தித்து தேவசெய்தி பகிர்ந்து வந்தனர். முதலைமொழியைச் சார்ந்த ஒரு குடும்பம் (சகோ. ஆபிரகாம் அவர்களின் குடும்பம்) மாட்டு கூடார வண்டியில் சினிமாவுக்கு சென்று வருவது வழக்கமாக இருந்தது. இவர்களை சகோ. ஜெசுதாஸ் சந்தித்து பேசி ஆண்டவரின் இரட்சிப்பின் சுவிசேஷத்தைக்கூறி இவர்களுக்காக சகோதரன் அதிக பாரத்தோடு ஜெபித்து வந்தார். அதன் பயனாக சில நாட்களில் அந்தகுடும்பத்தார் முழுவதுமாய் மனந்திரும்பி சினிமாவுக்கு போவதை விட்டு விட்டு அதே வண்டியில் ஐக்கிய வாராந்தர கூடுகைக்கு ஒழுங்காக வரத் தொடங்கினார்கள். மேலும் ஒரு குஷ்டரோகி ஒருவர் தன் தள்ளு வண்டியிலே உந்திக்கொண்டு வீடு வீடாய் வந்து பிச்சைக் கேட்டிடுவார். அவரிடமும் இந்த ஐக்கிய சகோதரன் சகோ. தானியேல் ஜெசுதாஸ் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் கூறியதோடு அன்னாரையும் ஐக்கிய வாராந்தர கூடுகைக்கு அவரின் உந்து வண்டியிலேயே தெரு ரோடு வழியாய் அவரைத் தள்ளிக் கொண்டு வந்து சேர்த்திடுவார். திரும்பக் கொண்டு போயும் விட்டிடுவார்.
தேவனுடைய திரு சித்தத்தின்படிக்கு நாசரேத் ஜெப ஐக்கியத்தினரின் சார்பில் ஒரு மாதாந்தர பத்திரிக்கை தொடங்க ஏதுவாயிற்று. ஆரம்பத்தில் பல மாதங்களாக ஐக்கிய ஜெப மடலாக வெளிவந்தது. பின்பு பத்திரிக்கையை பதிவு செய்ய டெல்லி அலுவலகத்தை அணுகி சத்திய வெளிச்சம் என்ற பெயரில் பதிவு செய்ய அனுமதி கேட்டபோது அந்த பதிவு அன்று வேறு இடத்தில் நிலுவையில் இருந்து வந்ததால் சத்திய வெளிச்சம் என்பதற்கு பதிலாக மெய்விளக்கு என்று பதிவு செய்து நாசரேத் ஜெப ஐக்கியம் சார்பில் மெய் விளக்கு என்ற மாதாந்தர பத்திரிக்கை அன்று முதல் வெளியிடப்பட்டது. இதனை சகோ.Dr.ஜேக்கப் சாந்தகுமார் அவர்கள் அன்று முதல் இன்று வரை நேர்த்தியாய் நடத்தி வருகின்றார்கள். அன்று சகோ. ஜேக்கப் சாந்தகுமார் அவர்கள் பி.எஸ்.சி., பி.எட் படித்து (கணிதபாடம்) முடித்திருந்தார்கள். அந்நாட்களில் கணித ஆசிரியர்கள் எங்கும் பற்றாக்குறையாக இருந்தது. சகோ. ஜேக்கப் சாந்தகுமார் அவர்களுக்கு அன்று ஏராளமான அரசு பள்ளிகளிலிருந்து வேலை வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் சகோதரன் அவற்றையெல்லாம் உதறி தள்ளிவிட்டு நாசரேத் ஜெப ஐக்கியத்திலேயே முழு நேரப்பணியாளராகச் சேர்ந்துள்ளார்கள். அவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர். அவர் மூலமாக ஏராளமான சகோதரர்கள், பூலாங்குளம், முதுகுளத்தூர், தொண்டி, இராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளிலிருந்து அநேகர் ஐக்கியத்தோடு இணைந்தார்கள். சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்களின் தேவ செய்திகளும் ஐக்கிய கூடுகைகளின் நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புக்கள் மட்டுமே இந்த மாதாந்தர பத்திரிக்கையில் இடம் பெற்றன. பத்திரிக்கை மற்றும் இதர ஊழியங்கள் மூலமாக கோயம்புத்தூர், ஊட்டி எஸ்டேட் பகுதியில் உள்ள ஏராளமான சகோதர, சகோதரிகள் ஆண்டவரால் சந்திக்கப்பட்டு அவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்காக நாசரேத் ஜெப கூடாரத்திலும் திருமதி. ஜெபக்குமாரி மைக்கேல் அவர்கள் வீட்டினை அடுத்துள்ள பெண்களின் அறைகளிலும் வருடக் கணக்காக தங்கி தேவைப்படும் வீட்டு வேலைகளையும், ஐக்கிய சமையல் வேலைகளையும் செய்து சகோதரிகளுக்கான ஆவிக்குரிய கூடுகைகளிலும் பங்கேற்று ஆவிக்குரிய சத்தியங்களை கற்று ஆவியில் வளர்ந்து வந்த வண்ணம் காணப்பட்டார்கள். இன்னும் பலர் குடும்பமாய் என் தங்கை சுசிலா (Mrs. Prof. Joshua Gnanadurai) அவர்கள் வீட்டிலும் பல நாட்களாக தங்கி சத்தியங்களை கற்று வந்தார்கள். இதனால் என் தங்கைக்கு அதிகமான பொறுப்பு, வேலை பளுக்கள் கூடி அவளும் தன் சரீரத்தில் பலவிதமான பலவீனங்களை அடையப் பெற்றாள். ஆனாலும் என் தங்கையின் சிறந்த உழைப்பினாலும் ஜெப உதவியினாலும் அநேக குடும்பங்களில் நன்மைகள் பல பெற்றிட்டார்கள். அநேக குடும்பங்கள் கட்டப்பட்டன. அநேகருடைய திருமணங்களும் நிறைவேற்றப்பட்டன.
நாட்கள் செல்லச் செல்ல ஐக்கிய சகோதரர்களும் குடும்பஸ்தரர்களாக பெருகலாயினர். சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்களின் இரண்டாம் மகன் சகோ. ஒபேத் எனது மூத்த மகள் எஸ்தரை 08/05/1997 ஆம் நாளில் திருமணம் செய்து கொண்டார். இன்னும் ஜெப ஐக்கியம் விரிவடைந்து பெருகுகையில், ஐக்கியத்திற்காக வாகனங்கள் வாங்கப்பட்டன. ஜெப கூடாரம் தளம் போடப்பட்டு கான்கிரிட் தூண்கள் நாட்டப்பட்டு மேற்கூரை மட்டும் ஓலையினால் மேயப்பட்டது. மெய்விளக்கு ஆசிரியருக்கான தங்கும் அறை அலுவலக அறைகளும் கட்டப்பட்டன. இதற்கான பணத்தேவைகள் மற்றும் ஐக்கியத்தில் தங்கியிருந்த சகோதர, சகோதரிகள் மற்றும் இதர வெளி ஐக்கியத்தின் செலவிற்காக காணிக்கை என்ற முறையில் ஆயிரக்கணக்கான தொகை வரத் தொடங்கியது. அவற்றினை சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்களே நேரடியாக கையாண்டு செலவு செய்து வந்தார்கள். ஆனாலும் ஒரு சில எதிர்பாராத ஐக்கிய செலவு வகைக்காக அறிவிப்பு ஐக்கியத்தில் தெரிவிக்கப்படும்போது சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்கள் முன் வந்து ஏதாவது கடனை பெற்றாவது ஐக்கியத்திற்கும் ஐக்கியத்தின் சில குடும்பத்தினர்களுக்கும் வாரி வழங்கி செலவு செய்தார்கள். அவசர தேவைக்குத் தன் மனைவியின் கையிலுள்ள (என் தங்கை சுசிலா) தங்க நகைகளையும் கழற்றி கொடுக்கவும் தயங்கியதில்லை.
ஆசிரியரின் கல்லூரி பணி :
1970 ஆம் ஆண்டிலே தூத்துக்குடியை விட்டு நாசரேத் வந்தோம். நாசரேத் மர்காஷியஸ் கலைக் கல்லூரியிலே ஆங்கிலத் துறையிலே (Tutor in English) ஆசிரியனாக பணியில் சேர்ந்தேன். 240 மாணவர்கள் கொண்ட இரு விடுதிகளுக்கும் வார்டனாகவும் (Hostels Warden) இரண்டு வருடங்கள் மாத்திரம் பணிபுரியலானேன்.
கல்லூரியில் வேலை பார்க்கின்ற போது இரண்டு வருடகாலமாக பல கிராமங்களில் V.B.S விடுமுறை வேதாகம பள்ளியினை நடப்பித்தேன். மூக்குப்பீறி சர்க்கில் ஒய்யான்குடி ஆலயத்திலே வேதாகமபள்ளி டைரைக்டராக (Director) பணியாற்றி ஆண்டவருக்கு மகிமையாக திறமையாளர் என்ற சான்றிதழினையும் பெற்றுள்ளேன். 1988 ஆம் வருஷத்திலே மூக்குப்பீறி உயர்நிலைப்பள்ளியிலே (VBS inagural function) ஓய்வுநாள் பள்ளி ஆரம்ப விழாவிலும் சிறப்பான, உபகரணங்களோடு விளக்கி சுவிசேஷம் கொடுக்க தேவன் கிருபை செய்தார். அதன் காரணமாக அதன் தலைமை ஆசிரியர் பாராட்டு சான்றிதழினையும் எனக்கு வழங்கினார்.
பின்பு ஆண்டவர் தாமே கல்லூரியிலிருந்து என்னைப் பிரித்து எடுத்து அவருடைய அநாதி தீர்மானத்தின்படிக்கே நடத்த சித்தங்கொண்டு கல்லூரி வாயிலை அடைத்துள்ளார். ஆனால் நான் அந்த கல்லூரியையும் அங்குள்ள சிற்றாலயத்தையும் நேசிக்கின்றவனாய் பின் நாட்களில் அந்த கல்லூரிக்கு பல நன்கொடைகளை வழங்கியும் அக்கல்லூரியின் சிற்றாலயத்தினை புதுப்பித்து சுற்றி மொசேக் நடைபாதை மற்றும் சுற்றி பார்க் (Park) அமைத்துங் கொடுத்துள்ளேன். நான் பொதுவாக சிற்றாலயத்தை நேசிக்கின்றவன். 1962 ஆம் வருஷம் நான் மனந்திரும்பிக் கொண்டிருந்த நாட்களில் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் பீயுசி (Pre-University) படிக்குங்கால் கல்லூரி சிற்றாலயத்திலே அதிகமாய் தனித்து போய் ஜெபித்ததுண்டு. தரையில் புரண்டு ஆலய தூசியை நாவால் நக்கி பாவங்களுக்காய் அழுது ஜெபித்து தேவனோடு அண்டிய அனுபவம் உள்ளதால் எந்த சிற்றாலயத்தைக் கண்டாலும் நேசிக்கின்றவனாகின்றேன். கல்லூரி பணியை விட்டு வெளியே வந்தபின் சில காலம் சகோ. எமில் ஜெபசிங் அவர்கள் (FMPB) விட்டுச் சென்ற அச்சகத்தை நடத்தலானேன்.
ஆசிரியரின் ஆரம்ப வங்கிப் பணி
அவ்வமையம் நான் நாசரேத் ஜெப ஐக்கியத்திலே ஒழுங்காக பங்கு பெற்றும் வருகின்றபோது சகோ. நார்ட்டன் என்ற ஐக்கிய சகோதரன் நாசரேத் கூட்டுறவு வங்கியிலே ஒரு எழுத்தராக பணி புரிந்து வந்தவர் என்னை பலவந்தமாய் கட்டாயப்படுத்தி வங்கியில் கணக்கர் (Accountant) பணியிடம் காலியாக உள்ளது என்று கூறி மனு செய்ய பல நாட்களாய் வற்புறுத்தினார். நானும் அவரிடம் கூட்டுறவு என்றால் என்ன என்பதைக் கேட்டு புரிந்துக்கொண்டேன். கணக்கர் பணியை நான் எங்ஙனம் செய்யக்கூடும். நான் ஆங்கில இலக்கியம் மட்டுமே கற்றுள்ளேனே என்றேன். அதற்கு சகோ. நார்ட்டன் அவர்கள் அதனை அவர்கள் கற்றுத் தருவதாக உறுதி கூறி விண்ணப்பிக்கச் செய்தார். இதுவே தேவனுடைய அநாதி தீர்மானமாயிருந்தது. வங்கியில் கணக்கராக சேர்ந்தேன். பின் சில மாதங்களுக்குப்பின் கூட்டுறவு உயர் பட்டப்படிப்பிற்காக (Higher Diploma in Cooperation) 10 மாத காலம் சென்னைக்கு அனுப்பப்பட்டேன். அதிலே அரசு Group தேர்வில் தேர்வு பெற்றவர்கள் இப் பட்டபடிப்பில் பயிற்சியாளராக அநேகர் சேர்ந்துள்ளார்கள். அக்கூட்டுறவு கல்லூரி பண்டக சாலையில் நடைபெற்ற தேர்தலில் நான் காரியதரிசியாக தேர்வு செய்யப்பட்டேன். எந்த பணியாயிருந்தாலும் ஸ்தாபனமாயிருந்தாலும் அவற்றிலே முழு இருதயமாய் செயலாற்றுவதே என் இயற்கை சுபாவமாகும். பின் இவைகளை விக்கிரமமாக மாற்றி விடுவதும் என் சுவாபமே. ஆகையால் தான் ஆண்டவர் எல்லாவற்றிலும் என்னை அவ்வப்போது மட்டந்தட்டி விடுவது வழக்கமாயிற்று. ஆண்டவரின் அநாதி தீர்மானம் நான் அவரை 100%, 24/7 நேசித்து பின்பற்ற வேண்டும் என்பதே ஆனால் நான் யாவற்றிலும் தவறுகின்றவனாகின்றேன் இக்கூட்டுறவு கல்லூரி பயிற்சி நிறைவு நாளின்போது Doctorate in Cupboard Science என்ற பட்டத்தையும் நான் பெற்று கௌரவிக்கப்பட்டேன். பயிற்சி முடித்து நாசரேத் வங்கியில் உதவி காரியதரிசியாக பணியில் சேர்ந்தேன். பின் சில மாதங்களில் காரியதரிசியாக பதவியில் உயர்த்தப்பட்டேன்.
வங்கியில் 6 கிளைகளை உருவாக்கினேன். வங்கிக்காக இரு கட்டிடங்களை வாங்கினேன். சுமார் 20 பேர்களுக்கு வங்கியில் வேலை வாய்ப்புக்களை அளித்தேன். அரசிடமிருந்து பல பாராட்டுதல்களைப் பெற்றேன். இந்த உயர்வுகளின் மத்தியில் ஆண்டவரோடுள்ள நெருக்கமான ஐக்கியத்திலிருந்து சிறிது சிறிதாக என்னை அறியாதவனாகவே விலகிச்சென்று விட்டேன். அந்த நாட்கள் வரை எனது அன்புத் தாயாரின் ஜெபம் மாத்திரமே என்னை பாதுகாத்து வந்துள்ளது என்பதினையும் அறியாதவனாகவே இருந்துள்ளேன். 13 டிசம்பர் 1980-ல் எனது தாயார் காலமான பின்பு எனக்காக அதுவரையிலும் ஜெபித்து வந்த என் தாயார் இல்லாதபோது என் ஆவிக்குரிய வாழ்க்கை சீர் குலைய ஆரம்பித்தது. என் ஆவிக்குரிய வாழ்வினை தூண் போன்று என்னைத் தாங்கி வந்துள்ளது என் தாயாரின் ஜெபம் மட்டுமே என்பதை நான் அறியாதவனாகவே வாழ்ந்து விட்டேன். நான் வேலை செய்து வந்த வங்கியிலே நிர்வாகஸ்தர் ஒருவர் எனக்கு நேர் எதிரியாக செயல்பட ஆரம்பித்தார். வங்கியில் நடைபெற்ற ஒரு வைபவத்திலே அன்னாருக்கு முக்கிய ஸ்தானம் கொடுக்கவில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி பொது இடத்திலே என்னை மிக அதிகமாய் தூஷித்து விட்டார். இதனால் வங்கி வேலை இனி தேவையில்லை என்று எண்ணினவனாய், எந்த ஐக்கிய சகோதரர்களோடும் கலந்து ஆலோசிக்காமல் தேவசித்தமில்லாமல் சுயசித்தமாய் ஒரு வருடகாலம் (1982) துபாயிக்கு என் மனைவி பிள்ளைகளையும் விட்டு விட்டு சென்று விட்டேன். ஒரு ஏஜண்டை நம்பி, ஒரு சிலருக்கு வேலை பெற்றுத் தருவதாக வாக்குபண்ணிவிட்டு அது கைக்கூடாததினால் நானே நேரில் சென்று விபரம் அறிய துபாய் சென்றேன்.
ஆசிரியரின் திருமணமும் குடும்ப வாழ்வும் :
21/12/1971ஆம் நாளிலே எனக்கு திருமணம் நடைபெற்றது. சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்களே எனது மணமகன் தோழனாக இருந்து ஐக்கிய சகோதரர்கள் யாவரும் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். திருமணத்தின் நிச்சயதார்த்தத்தின் போது ரொக்கம் (Dowry) நகை எதுவும் பற்றி பேசப்படவில்லை . இவைகள் பற்றி பேசப்படக் கூடாது என்பது தான் நாசரேத் ஜெப ஐக்கியத்தின் கோட்பாடாகும். திருமணத்திற்கான நல்ல நாள் அதன் நட்சத்திரம் போன்றவைகளும் கணிக்கப்படலாகாததாகும். எனது திருமணத்தின் நாளும் பெரியோர்களால் பேசப்பட்டபின் சில பேர்களால் பஞ்சாங்கம் எடுத்துப் பார்க்க எண்ணியபோது நான் குறுக்கிட்டு, ஏன் எதற்கு என்று கேட்டேன். அதற்கு பெரியவர்கள் 21/ 12/1971 ஆம் நாள் செவ்வாய் கிழமையில் வருகிறது. அதனை மாற்றினால் நல்லது என்றார்கள். நான் கூறினேன் எல்லா நாட்களையும் தேவன் நல்லவைகளாகவே படைத்துள்ளார். ஆகவே இந்நாளினை மாற்றி பேசலாகாது என்றேன். இதனால் என் மாமனாருக்கு சற்று கோபம் ஏற்பட்டுள்ளது. அதனால் திருமணநாள் செவ்வாய் கிழமை என்று காரணம் காட்டி அன்று சுத்த சைவ விருந்தினையே அளித்துள்ளார். ஜெப ஐக்கிய சகோதரர்கள் சந்தோஷமாய் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால் ஒரு சில கல்லூரி நண்பர்கள் விரும்பியதால் அவர்களுக்கு அசைவ உணவினை ஹோட்டலில் இருந்து அன்று வாங்கி அளித்துள்ளேன்.
அரசு சட்ட திட்டங்களை மீறுவதும் பாவம் என்றும் எங்களது நாசரேத் ஜெப ஐக்கியம் எங்களுக்கு கற்றுக் கொடுத்தது. ஆகவே Dowry Act யின்படிக்கு அரசு நியமித்த உச்சவரம்பினை மீறாதபடிக்கும் ஐக்கிய சகோதரர்கள் மிக கவனமாய் நடந்துக் கொண்டார்கள். நானும் மிக கவனமாகவே நடந்து கொண்டேன்
திருமணத்தின்போது எனக்காகவோ, எனது தம்பிக்காகவோ ரொக்கம் எதுவும் பெறப்படவில்லை, என் தங்கைக்காகவும் ரொக்கம் அளிக்கப்படவும் இல்லை. நகை நிர்ணயமும் செய்யப்படவும் இல்லை.
ஆவிக்குரிய விஷயங்களில் ஞானஸ்நானம் இரட்சிப்பு ஆகாது என அறியப்பட்டிருந்தாலும் குழந்தை ஞானஸ்நானம் ஆவிக்குரிய சபைகளில் விதவிதமாக பேசப்படுவதினால் என் பிள்ளைகளோ, என் பேரப்பிள்ளைகளோ அவர்கள் வாழ்நாட்களில் எந்த குழப்பத்திற்குள்ளும் சென்று விடக் கூடாது என்பதற்காக என் பிள்ளைகள் நான்கு பேர்களும் மனந்திரும்பின பிறகே, பக்தியுள்ள மனந்திரும்பின போதகர் எங்கே உண்டு என்று விசாரித்து அறிந்து, நாகலாபுரத்தில் அன்று இருந்த போதகரிடத்தில் என் பிள்ளைகள் 4 பேர்களையும் மூழ்கி ஞானஸ்நானம் எடுக்கச் செய்தேன். அன்று அங்கு சுவிசேஷவாரம் கொண்டாடப்பட்டது. இறுதி நாள் அன்று அங்கு பலபேர் பருவம் கடந்த ஞானஸ்நானம் பெற்றார்கள். அவர்களோடு சேர்ந்து என் பிள்ளைகள் 4 பேர்களுக்கும் ஞானஸ்நானம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அன்று நாங்கள் நாசரேத்திலிருந்து ஒரு வாகனத்தில் சென்றோம். அன்று அங்கு ஞானஸ்நானம் பெறும் அனைத்து குடும்பத்தினருக்குமாக சேர்த்து விசேஷ விருந்தினை அங்கு நாங்களே செலவு செய்து நடப்பித்தோம். பின் நாட்களில் எனது மூத்த மகளின் பிள்ளைகள், எனது பேரப்பிள்ளைகள் இருவரும் அவர்கள் மனந்திரும்பின பிறகே உடன்குடி, கிறிஸ்டியான் நகர சேகர போதகர் மூலம் மணப்பாடு கடற்கரையில் ஞானஸ்நான ஆராதனை நடப்பித்து கடலிலே இருவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள். எனது நான்கு குழந்தைகளின் திருமண காரியங்களிலும் நகை பேரம் பேசப்படவில்லை. ரொக்கம் கொடுக்கும் வைபவமும் நடைபெறவில்லை
.ஆசிரியரின் இலங்கை ஊழியங்கள் :
நாசரேத் ஜெப ஐக்கியம் வளர்ந்து பெருகியது. இதன் ஊழிய எல்லைகளும் வளர்ந்து பெருகின. ஐக்கிய ஊழியங்கள் இலங்கைக்கும் மும்பைக்குமாக விரிவடைந்தது. மும்பையில் சகோ. டைட்டஸ், மதுரை (Bro. Titus) சகோ. மாதவமேனன், இராமானுஜம்புதூர் (Bro. Madhava Menon) அவர்கள் சகோ.மைக்கேல் செல்லத்துரை அவர்களை மும்பைக்கும் அழைத்து பல கூட்டங்களை அங்கு நடத்தினார்கள்.
இலங்கைக்கு 15 நாட்கள் ஊழியமாக நானும் நாசரேத் ஜெப ஐக்கியம் சார்பில் அனுப்பப்பட்டேன். திருச்சி பேராசிரியர் சகோ. விஜயன் அவர்கள் வீட்டிலிருந்து ஜெபித்துவிட்டு அவர்களே என்னை தன் காரிலே கொண்டு போய் திருச்சி விமான நிலையத்தில் கொண்டு போய் விட்டார்கள். நாசரேத் சகோதரன் சகோ. ஜெயதாஸ் & திருமதி ஜெயதாஸ் சித்ரா (Bro. Jeyadas and Sis. Chitra) அவர்களின் திருமண மறுவீடு உபசரிப்பு (Home Coming Ceremony, On 12th July 1997) இலங்கையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. (The Empire Ballroom, Mount Lavinia Hotel, 100, Hotel Road, Mount Lavinia, Sri Lanka) அதிலே மணமக்களை வாழ்த்தி வரவேற்பு தேவ செய்தியினை ஆங்கிலத்தில் முதல் தடவையாக கொடுக்க தேவன் கிருபை கூர்ந்தார். யாழ்ப்பாணம் ஆயர்கள் பலர் கலந்து கொண்டு என்னைப் பாராட்டினார்கள். என்னையும் ஒரு போதகராக எண்ணியுள்ளார்கள். பின்பு தொடர்ந்து பன்னிரெண்டு நாட்கள் இலங்கையில் தங்கி பல ஊழியங்களை செய்ய தேவன் உதவினார். அவ்வமயம் என்னை அழைத்த மணமகன் சகோ.ஜெயதாஸ் எனக்கு ஒரு ஊழிய அழைப்பை விடுத்தார். அங்கே உள்ள ஒரு சிங்கள வாலிபன் ஒருவன் பெயர் ஜெயசிங்கே. அவன் இலங்கையில் வாலிபர் சங்கத்தின் தலைவனாய் இருந்தான். அவனுக்கு ஆவிக்குரிய விஷயத்தில் பல சந்தேகங்கள் பல வருடங்களாக அதுவரையிலும் ஒரு ஆயராலும், அல்லது ஊழியக்காரர்களாலும் தீர்க்கக்கூடாததாயிருந்தது. இதனை சகோ.ஜெயதாஸ் எனக்கு தெரியப்படுத்தி ஜெப ஆயத்தத்துடன் அந்த வாலிபனை சந்தித்து தனித்து பேச அவனுடைய அறையில் என்னை விட்டுச் சென்றார். சில மணி நேரம் கழித்து வந்து என்னை திரும்ப அழைப்பதாகவும் கூறியிருந்தார். அந்த சகோதரனின் அறை ஆலயத்தில் மூன்றாவது மாடியில் இருந்தது. நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆவியில் நிரப்பப்பட்டவனாய் ஆங்கிலத்தில் என்னுடைய முன்னுரை ஜெபத்தை செய்து முடித்து ஆவியில் நிரப்பப்பட்டவனாய் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டேயிருந்தேன். அந்த சகோதரனின் பிரச்சனை என்ன என்று எனக்கு இன்று வரை தெரியாது. அவனும் என்னோடு எந்த பிரச்சனையும் கூற முடியவில்லை . ஆனால் நான் அவனோடு பேச பேச அவன் மிகவும் அதிகமாய் அழுது கொண்டே கேட்டுக் கொண்டே இருந்தான். பின்பு இருவரும் ஆவியில் நிரப்பப்பட்டோம். சில மணிநேரம் கழித்து நானும் அவனும் மிகுந்த சந்தோஷத்தினால் நிரப்பப்பட்டோம். அவனும் மிகுந்த சமாதானமாய் என்னிடம் விடைபெற்றுச் சென்றான். பின்பு சகோ. ஜெயதாஸிடம் அவன் தன்னிலுள்ள எல்லா சந்தேகங்களும் முற்றிலுமாய் நீங்கிவிட்டது என்று கூறினானாம். ஆமென். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
பின்னும் நான் சகோ. ஜெயதாஸ் அவர்கள் வீட்டில் இலங்கையில் 12 நாட்கள் தங்கியிருந்தேன். ஒவ்வொரு நாள் மாலையிலும் அந்த குடும்பத்தார் யாவரோடும் மாலை ஐக்கிய கூடுகையை நடத்தி தேவசெய்தி கொடுத்து வந்தேன். கூடியிருந்த சுமார் 15 பேர்களும் மணமகள் வீட்டார்களே. அவர்கள் அனைவரும் கோயம்புத்தூர் சகோ. ஜாண் அற்புதராஜ் அவர்களின் இனத்தார்களே. யாவருமாய் ஒரே விமானத்தில் தான் திருச்சியிலிருந்து வந்துள்ளோம். ஆனால் அதுவரையிலும் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தி பேசிக்கொள்ள வாய்ப்பில்லை. இலங்கையில் இறங்கிய பின் ஒரே வாகனத்தில் மணமகன் இல்லம் செல்லும் போது தான் நான் ஒரு ஊழியக்காரனாக அறிமுகப்படுத்தப்பட்டேன். பின் அந்த வைபவத்தில் கொடுத்த செய்திக்கு பின் தான் நான் நாசரேத் ஜெப ஐக்கியத்தை சேர்ந்தவன் என்று அறிந்து கொண்டார்கள். ஒவ்வொரு நாளும் மாலை ஐக்கிய கூடுகையில் என்னோடு பழகவும், பல சந்தேகங்களை கேட்கவும் ஜெபிக்கவும் ஆரம்பித்தார்கள். என்னைக் குறித்து ஒருவித தெய்வீக பயமும் அவர்களுக்குள் காணப்படத் தொடங்கியது. ஒவ்வொரு நாட்கள் பகல் வேளைகளில் இலங்கையை சுற்றிப் பார்க்கவும் Shopping செய்யவும் அவர்கள் அனைவரும் செல்கையில் என்னையும் வற்புறுத்தி அழைத்தார்கள். நான் கூறினேன், நான் ஊழியங்களுக்காக மாத்திரமே நாசரேத் ஜெப ஐக்கியத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளேன். சுற்றுலாவில் எனக்கு விருப்பமில்லை என்று உறுதியாய் கூறிவிட்டேன். எந்த சுற்றுலாவையும் மேற்கொள்ளாமல் பல ஆலயங்களிலும், வீடுகளிலும் அழைக்கப்பட்ட ஊழியங்களை மட்டுமே செய்து முடித்து இந்தியாவிற்கு திரும்பினேன். இறுதி நாளன்று என்னை அழைத்த சகோதரனின் மூத்த அண்ணன் சகோ. ஜார்ஜ் அவர்கள் வீட்டில் ஜெபக்கூடுகை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அங்கே எனக்கு ஒரு சிறப்பு விருந்தும் கொடுக்கப்பட்டது. எனது இறுதி செய்தியை கொடுத்துவிட்டு இறுதி ஜெபம் செய்த பின் அதுவரையிலும் பல வருடங்களாக தன் பெற்றோரையும் உடன் சகோதரர்களையும் விட்டு பிரிந்து பேசக் கூடாமல் விலகி இருந்த அந்த சகோதரன் அன்று முதல் யாவரோடும் நல்மனம் பொருந்தி இணைந்தார்கள். சகோதரன் ஜார்ஜ் அவர்கள் இலங்கை PWD தலைமை பொறியாளர் ஆவர். என்னைக் குறித்ததான ஆண்டவரின் பரிசுத்த சித்தம் திட்டம் பூரணமாய் இலங்கையில் முற்றுபெற்றது. .தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
ஆசிரியரின் துபாய் வாழ்வு :
துபாயில் என்னை அழைத்த ஒரு அரபு வீட்டில் அவரோடு வாசம் செய்கையில் என்னை இரட்சித்த தேவன் என்னை கைவிடவில்லை . அந்த அரபு நாட்டிலே என் தேவன் எகிப்திலே அன்று யோசேப்பை காப்பாற்றினது போன்றே என்னை பாதுகாத்து வந்தார். நான் தேவ சித்தமிலாமல் ஓடி வந்தவன் என்று என்னை விட்டிடாமல் ஆவிக்குரியவனாகவே அவருடைய பிரசன்னத்திற்குள்ளே வைத்து என்னை பாதுகாத்து அற்புதமான வழிகளிலேயே என்னை நடத்தி வந்தார். ஊழியங்கள் பல செய்ய எனக்கு வாய்ப்பு அளித்தார். துபாய் ஆலய ஆராதனையிலே தேவசெய்தி கொடுக்க வாய்ப்பு அளித்தார். ஆலய மாதாந்திர பத்திரிக்கையிலும் மாதந்தோறும் தொடர்ச்சியான செய்தி எழுதவும் தேவன் தாமே கிருபை செய்தார். அவ்வமயம் துபாய் நாட்டிற்கு லோகாஸ் என்ற சுவிசேஷ கப்பல் வந்தது. அதிலிருந்து ஏராளமான அரபி மொழி வேதாகமங்களை கடத்தி கொண்டு வந்து என்னுடைய அறையிலே அதாவது அரபி வீட்டிலேயே வைத்திருந்தேன். பின்பு அந்த அரபி என் குணாதிசயத்தைக் கண்டு என்னை அதிகமாய் நேசிக்க ஆரம்பித்தார். எங்கும் என்னை அழைத்துச் செல்வார். ஒரு முறை என்னை அவருடைய இரண்டாவது மனைவி வீட்டிற்கும் அழைத்துச் சென்று என்னை அறிமுகப்படுத்தவும் செய்தார். இவர் அநேக சமயங்களில் அன்னாரை குடித்துவிட்டு அடிக்கின்றதையும் அறிந்தேன். அடிக்கடி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி பேசுகையில் ஆரம்பத்தில் அதிகமாய் தூஷித்தவர் இயேசுவைக் குறித்து கேட்க விரும்பினார். வேதாகமத்தில் இப்படி இருக்க முடியாது என்ற தர்க்கம் வந்தபோது அவருக்கு அரபி வேதாகமங்களை கொடுக்கவும் தேவனை பற்றிப் பேசவும் தேவனே கிருபை செய்தார். உடன் தானே அவர் ஆச்சரியப்பட்டு அரபு வேதாகமம் என்னிடம் இருப்பதாக வேறு எந்த அரபியிடமும் சொல்லிவிடாதே, என் தலை வெட்டப்பட்டு விடும் என்று பாசத்தோடு என்னை எச்சரித்தார். பின்பும் நான் அவருக்கு JESUS, JESUS OF NAZARETH, BENHAR போன்ற அநேக கிறிஸ்தவ வீடியோ கேசட்டுக்களையும் கொடுத்தேன். தனிமையில் இருக்கும்போது அவர் வேதத்தை வாசிப்பதையும் வீடியோ பார்ப்பதையும் கண்டு ஆண்டவரை ஸ்தோத்தரித்தேன். பின்பு ஒரு நாள் அவருடைய 2வது மனைவி வீட்டிற்கு சென்றிருந்த போது அவர்கள் கூறினார்கள், இப்போதெல்லாம் தன் கணவர் தன்னை அடிப்பதில்லை என்றும், காரணம் பிலிப்பு (நான்) கூறினார் குடிப்பதும் அடிப்பதும் பாவம் என்று. ஆகையினால் நான் இந்தியாவுக்கு திரும்பி போகக்கூடாது என்று என்னைக் கேட்டுக் கொண்டார்கள்.
அந்த அரபி வீட்டு மொட்டை மாடியிலே மாலை முதல் இரவு வரை நான் தனி ஜெபம் செய்வது வழக்கம். ஒரு நாள் அந்த அரபி என்னோடு பேச ஆசைப்பட்டு என்னைத் தேடி 5வது தளம் மொட்டை மாடிக்கே வந்தார். அங்கு மின் விளக்கு கிடையாது. நான் அழுது கொண்டு கண்ணை மூடி ஜெபித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு விரல் என் கண்ணீரை துடைப்பதாக உணர்ந்து கண்ணை திறந்து பார்த்த போது ஏன் அழுகிறாய் என்று அந்த அரபி கேட்டார். நான் ஜெபிக்கிறேன் என்றேன். எனக்கு ஜெபிக்க வசதியாக ஒரு இடம் (ஆலயம்) கட்டித் தர ஏற்பாடு செய்யட்டுமா நீ அழக்கூடாது என்றார். நானோ சுய சித்தத்தின்படிக்கே துபாய் சென்றுள்ள போது எப்படி துபாயில் எனக்கான ஒரு வாசஸ் தலத்தை ஏற்படுத்திக் கொள்ளக்கூடும். கூடாதே, பின்னும் அங்கே சில மாதங்கள் துபாயில் தங்கி ஊழியங்கள் பல செய்ய தேவன் கிருபை செய்தார். அந்த அரபு நண்பரின் சகோதரன் ஒருவரே துபாய் இஸ்லாமிக் வங்கியின் நிர்வாகியாயிருந்தார். ஆகையினால் இந்த அரபு நண்பர் அன்னாரின் வங்கியில் உயர்வான பதவி ஒன்றை எனக்கு அளிக்க முன்வந்தும் தேவசித்தத்தின்படிக்கு எந்த நல்ல பணியிலும் சேராமல் அங்கே அநேக ஆத்துமாக்களை மட்டுமே ஆதாயம் செய்து அநேகரை தேவனிடம் வழி நடத்திடச் செய்யவே தேவன் கிருபை அளித்தார். அந்நாட்களில் துபாயில் ஒரு தலைமை பொறியாளரின் அறிமுகம் கிடைத்தது. அவரோடு சேர்ந்து அநேக ஊழியங்களில் பங்கு பெற்றேன். அவரும் என்னுடைய ஐக்கியத்தின் மூலம் ஆவிக்குரிய பல மேலான அனுபவங்களையும் பெற தேவன் கிருபை செய்தார்.
துபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வந்த நான் எதிர்பார்த்த நாட்களுக்கு மேலாக தங்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் விசா மாற்றத்திற்காக பஹ்ரேன் நாட்டிற்கு ஒரு நாள் பயணமாக சென்றேன். சில மணி நேரம் மட்டுமே பஹ்ரேன் (Bahrain) நாட்டின் விமான நிலையத்தில் நடந்து வருகையில் பாபி என்ற சகோதரனை அவன் கடையில் (Duty Free Shop) சந்தித்து அவனிடம் சாட்சி பகர்கையில் அவன் ஒரு காலத்தில் மனந்திரும்பினவனாக வாழ்ந்து விட்டு தற்போது பின்மாற்றம் அடைந்துள்ளான். அவனை சந்தித்தது அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. உடன் தானே அவன் தன்னை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க முன் வந்தான். ஜெபிப்போமா என்று கேட்ட போது முகமதிய நாட்டிலே அதுவும் விமான நிலைய வீதியிலே எங்கே ஜெபிக்கக் கூடும். ஆனால் அந்த தம்பியோ தன் கடை கதவை (Shutter) மூடச் செய்து கடைக்குள்ளேயே இருவருமாய் ஜெபித்தோம். அவன் தன் குறைகளை அறிக்கை செய்து தன்னை மறுபடியும் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தவனாய் கண்ணீரோடு ஜெபித்தான். அச்சணமே ஆண்டவர் எங்கள் இரு பேரையும் தம் ஆவியினால் நிரப்பினார். கதவு (Shutter) மூடப்பட்ட கடைக்குள்ளே வேர்வை சிந்த ஜெபித்து முடித்தோம். பின் சில மணி நேரம் மாத்திரமே அங்கே இருந்த எனக்கு என்னை எந்தசெலவினத்தையும் செய்ய விடாமல் அவனே என்னோடு கடைசி வரையிலும் இருந்து என்னை துபாய்க்கு அனுப்பி வைத்தான். இத்தகைய கிருபையை தேவன் எனக்கு அளித்தாரே ஏன்? எதற்காக?
ஆசிரியரின் வங்கி பணியின் இறுதி நாட்கள் :
தேவ சித்தத்தின்படிக்கு துபாயிலிருந்து நான் எப்படியாவது திரும்பி வந்துவிட வேண்டும் என்றும், நான் விட்டு வந்த ஜெப ஐக்கியத்துடன் மறுபடியும் சேர்ந்து விட வேண்டும் என்று என் ஜெப ஐக்கிய சகோதர சகோதரிகள் இரவுப் பகலாக எனக்காக அதிக கண்ணீரோடு ஜெபித்து வந்த அவர்களின் ஜெபத்தையும், கேட்டு நான் பின் மாற்றத்தோடு துபாய் சென்றிருந்தாலும் தேவன் என்னைத் தன் அன்பின் கரங்களோடு ஏற்றுக் கொண்டவராக எல்லா சூழ்நிலையினையும் ஆவிக்குரிய பிரகாரமாக என்னை மாற்றி அமைத்து ஆண்டவரின் சித்தமாக ஊழியங்களைச் செய்தும் ஆவிக்குரிய அநேக அனுபவங்களை பெற்றிடவும் கிருபை செய்தார். நான் மறுபடியும் விடுப்பில் வந்த வங்கி பணியில் சேர்ந்தேன். என் மூலமாக என்னுடைய ஏஜெண்டை நம்பி பணம் கொடுத்தவர்களுக்கு நான் நாசரேத் வந்ததும் என்னுடைய மனைவியின் நகை, வயல் என் தகப்பனாரின் பெயரிலுள்ள வீடு, ஆகியவற்றை விற்று எவ்வித பாக்கியும் இல்லாமல் ஈடு செய்ய தேவன் கிருபை செய்தார்.
துபாயிலிருந்து வந்து நான் நாசரேத் வங்கியில் சேர்ந்ததுமே துபாய்க்கு செல்ல காரணமாயிருந்த அரசியல் வாதியான வங்கியின் நிர்வாகஸ்தர் அவரே மறுபடியும் எனக்கு பல வகைகளில் இடையூறுகள் செய்ய ஆரம்பித்தார். நான் வங்கியில் இல்லாத ஒரு வருட காலத்தில் சுதந்தரமாக வங்கியினை அனுபவித்து விட்டு இப்போது எதனையினையும் என்னைக் கேட்டுச் செய்ய வேண்டியதுள்ளதால் என்னை வங்கியை விட்டு நிரந்தரமாய் நீக்கிவிட பலவகைகளில் போராடி வந்தார். இதற்கிடையில் வங்கி ஊழியர் ஒருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வங்கி ஊழியரின் தகப்பனார் என் மீது எண்ணற்ற பொய் வழக்குகளை பல நீதி மன்றங்களில் தொடுத்தார். இந்த வழக்குகளின் நிலுவையை சுட்டிக்காட்டி பல தடவைகளில் வங்கி பணியிலிருந்து அரசு என்னை தற்காலிக பணிநீக்கம் செய்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் பல தடை உத்தரவு பெறவும் நேரிட்டது. எனினும் வங்கி பணியில் அநேக மாதங்களாக இல்லாதவனாக இருந்தேன். அந்நாட்களில் ஆண்டவர் என்னை ஒருபோதும் பசியால் வருந்தவிடவில்லை . எதிர்பாராத இடங்களிலிருந்து பல உதவிகளை கிடைக்கச் செய்தார்.
வங்கியிலிருந்து தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கையில், வீட்டில் போதிய வருமானம் இல்லாதபோது திடீரென்று ஒரு வண்டியிலிருந்து ஒரு மூடை அரிசி என் வீட்டில் இறக்கப்பட்டது. அது விஷயமாய் விசாரித்தபோது என்னை அதிகமாய் நேசித்த மார்டன் அரிசி ஆலை உரிமையாளர் இந்த அரிசி மூடையை அனுப்பியுள்ளார். கேட்டதற்கு சந்தோஷமாய் சாப்பிடுங்கள், பணம் எதுவும் வேண்டாம், உங்ளுக்குத் தான் வங்கியில் வேலை இல்லையே என்றார். சுமார் 2 மாதங்கள் கழித்து மறுபடியும் ஒரு மூடை அரிசி வந்தது, கேட்டதற்கு, கொடுக்கப்பட்ட அரிசி அந்த நாளில் முடிந்திருக்க வேண்டுமே என்றார். இப்படி பல மாதங்கள் தொடர்ச்சியாய் உதவி செய்தார். ஆண்டவரிடம் கண்ணீரோடு நன்றியை மட்டுமே செலுத்தினேன். இன்னும் என் 4 குழந்தைகளுக்குமாக சாயங்கால வேளையில் ஏதாவது வாங்கிக் கொடுக்க எனது கடைசி மகள் மூலம் கொஞ்சம் பணம் கொடுத்து, ஹோட்டலுக்கு அனுப்பினேன். ஹோட்டல் உரிமயாளர், கேட்டதும் கேட்காததுமான ஏராளமான தின்பண்டங்களை கொடுத்து அனுப்பினதோடு கொண்டு போன பணத்தையும் திரும்ப அனுப்பியுள்ளார். இப்படி பல நாட்கள் நடைபெற்றன. ஆண்டவர் இவ்விதமாய் என்னை போஷித்தாரே. இதற்கு நான் எவ்விதத்திலும் தகுதியற்றவன் என்றே உணருகின்றவனாயிருந்தேன்.
வங்கி பணியின் தற்காலிக பணிநீக்கத்தை எதிர்த்து பல தடவைகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்தேன். அதற்காக சென்னைக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருக்கையில் பல தடவைகளில் அதே ஹோட்டல் உரிமையாளர் தன் பிள்ளைகளுக்கும் தெரியாமல் என்னை விசாரிப்பது போல் பேசி என் கையிலே ஆயிரக்கணக்கான பணத்தை திணித்து நீதிமன்ற செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றார். இப்படியெல்லாம் நான் போஷிக்கப்பட்டேனே. நான் அந்த அளவுக்கு தேவனுக்கு உகந்தவனா? தேவன் மாத்திரமே என் இருதயத்தை அறிவார்.
நாசரேத் ஜெப ஐக்கியத்தின் வருடாந்தர இறுதி தியானக் கூடுகையை நான் ஒருபோதும் உதாசினப்படுத்தியதே கிடையாது. 3 முதல் 5 நாட்கள் வரை நடக்கும் தியான கூடுகை நாட்களில் நான் அதிகமாக உபவாசத்திலேயே அந்த நாட்களை கழிப்பேன். யாரும் வற்புறுத்துவதில்லை. யாரும் அறியவும் மாட்டார்கள். என் தம்பி குணசிங் தான் இடைப்பட்ட நேரங்களில் நான் பட்டினியாய் இருக்கின்றேனே என்று எண்ணினவனாய் காபி, டி கொண்டு வந்து கொடுப்பான்.
இவ்விதமாய் நான் ஆண்டவரை நேசிக்கப் பழகினேன். 1984 ஆம் வருடத்திலே அரசு என்மீது போட்ட பொய் வழக்கு ஒன்றிலே நான் வங்கி கிளைக்கு ஆய்வுக்காக செல்லாமலே சென்றதாகவும் அதற்கு பயணப்படியாக பெற்ற ரூ 15/- யினை களவாக பாவித்து வழக்கு எனக்கு எதிராக தொடரப்பட்டது இதனை அந்த வங்கி நிர்வாகஸ்தரே பொறுப்பேற்று எனக்கு எதிராக செயல்பட்டு வந்தார். இதனை எதிர்த்து நான் வழக்கு தொடுத்தேன். இது டிசம்பர் மாதம் 21ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் (quashing) விசாரணைக்கு வந்தது. அன்று நீதிமன்றத்திற்கு வருட கடைசி நாளாகும். ஆகவே நீதிபதி அவர்கள் (திருமதி. பத்மினி ஜேசுதுரை) அன்று மதியம் 1:30 மணி வரை வழக்குகளை விசாரித்து விட்டு இனியும் உள்ள சுமார் வழக்குகளை மறுவருடம் (ஜனவரியில்) எடுத்துக் கொள்வதாக கூறிவிட்டு அன்று மாலைப் பகுதியில் ஒரு சில முக்கிய வழக்குகளை மட்டுமே எடுத்துக் கொள்வதாக கூறி அதனுடைய எண்களை (Cause list Nos) கேட்டார். ஒரு சில சீனியர் வழக்கறிஞர்கள் தங்கள் எண்களை குறிப்பிடுகையில் எனது வழக்கின் எண்ணையும் தவறுதலாக ஒருவர் கூறிவிட்டார். மாலை பகுதி நேரம் வந்ததும் எனது வழக்கு எண் அழைக்கப்பட்டபோது என்னுடைய வழக்கறிஞரும் சேர்த்து இருவர் எழுந்து நின்றனர். நீதிபதி அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டவராக எனது வழக்கின் ஆவணங்களை திறந்து கூட பார்க்காமல், எனது வழக்கறிஞர் கேட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் அனுமதி வழங்கினார். மறுநாள் காலையில் நான் நாசரேத் வீட்டில் இருக்கையில் போலீஸ் ஜீப்பில் என் வீட்டிற்கு வந்து என்னைக் கைது செய்ய வந்தார்கள். நான் எழுந்து வெளியே வந்து பெயில் உத்தரவினை காண்பித்தேன். போலீஸுக்கு தகவல் எதுவும் இல்லாமல், அனுமதி சான்று பெறாமல் எப்படி வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று போலீஸ் அதிகாரி ஆச்சரியப்பட்டுச் சென்றார். அன்று மட்டும் எனக்கு பெயில் கிடைக்காவிட்டால் கிறிஸ்மஸ் புத்தாண்டு விடுமுறை நாட்களில் என் குடும்பத்தைவிட்டு தலைமறைவாயிருக்க வேண்டிய திருந்திருக்குமே. மேலும் அவ்வாண்டு இறுதி தியானக் கூடுகையிலும் நான் கலந்திருக்கக்கூடாதே என்று அதிகமாய் கவலைப்பட்டேன். ஆனால் ஆண்டவர்தாமே ஐக்கிய சகோதரர்களின் கண்ணீர் ஜெபத்தைக் கேட்டு இவ்வண்ணமாய் அற்புதம் செய்தார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
ஆசிரியரின் இடைப்பட்ட காலத்து ரியல் எஸ்டேட் பணி :
வங்கிக்குச் செல்லாத நாட்களில் சுதந்தரமாய் கேரளா வரை சென்றேன். ஆண்டவர் தாமே ஏராளமான நண்பர்களை ஒரு MLA மூலமாக கொடுத்தார். அவர்களுள் முக்கியமானவர்கள், செம்மனூர் ஜூவல்லாஸ், பீமா ஜூவல்லாஸ் ஆவர். அவர்களுக்கு தேவையான ஆயிரக்கணக்கான நிலங்களை வாங்கி கொடுக்க ஆண்டவர் தாமே கிருபை செய்தார். வெளிப்படையாய் சிறிய கமிஷன் மாத்திரம் நிர்ணயம் செய்தவர்களாக, ஆயிரக்கணக்கான நிலங்களை பெற்றுக் கொடுத்தோம். இதனையே பின் நாட்களில் Real Estate Business என்று அழைக்கப்பட்டது. இது வரையிலும் கண்டிராத அளவிற்கு பணங்கள் என்கைகளில் புரண்டன. ஆனால் நான் பணத்திற்கு அடிமையாகாதபடிக்கு தேவன் என்னை பாதுகாத்துக் கொண்டார். நானும் பணத்திற்கு மதிப்பு கொடுத்ததே கிடையாது. நூற்றுக்கணக்கானோர் என் மூலம் பொருளாதாரத்தில் உயர்த்தப்பட்டார்கள். தேவன் என் குடும்பத்துக்கு தேவையானவற்றை சம்பாதிக்கச் செய்தார். தேவனே என்னை உலக ஐசுவரியத்தின் பாதையில் நடத்தினார். நான் இழந்த அனைத்து ஆஸ்திகளையும், சொத்துக்களையும் இரண்டத்தனையாய் திரும்ப பெற தேவன் கிருபை செய்தார். அதோடு நான் நிறுத்திக் கொண்டேன். பின் வந்த வாய்ப்புக்களை வேண்டாம் என்றே உதறி விட்டு விட்டேன். வங்கியில் பிரச்சனை ஓரளவுக்கு சாதகம் ஆனதும் அதனையும் ஒரு அளவோடு ஓய்வு பெறும் வரை தக்கவைத்துக் கொண்டேன். ஆவிக்குரிய வாசலாகிய நாசரேத் ஜெப ஐக்கியத்தின் பொறுப்பினை தேவன் தாமே திறந்து காண்பித்த போது அதனை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொண்டேன். பின் நோக்கேன் என்று தீர்மானித்தேன். இதற்கான உள்ளத்தையும் பெலத்தையும் தேவன் மாத்திரமே எனக்கு அளித்தார். இப்போது திறக்கப்பட்ட ஊழியப்பாதையிலே தேவன் வழி நடத்துகின்றபடிக்கே அவரையே பின்பற்றி நாசரேத் ஜெப ஐக்கியத்தின் பொறுப்பாளராக இருந்து ஐக்கியத்தின் சகல ஊழியங்களையும் நடப்பித்து வருகின்றேன். இதுவரையிலும் அடைந்த நஷ்டங்களுக்காக நான் வருந்துவதும் இல்லை. பெற்ற நன்மைகளுக்காக பெருமையடைந்திடுவதும் இல்லை. என் மீது பல பொய்யான வழக்குகளைத் தொடுத்த அந்த வங்கி ஊழியரின் தகப்பனாரை மன்னித்ததோடு அன்னாருக்கு பண்டிகை காலங்களில் பல நிதி உதவிகளையினையும் செய்து வந்துள்ளேன். அந்த வங்கி நிர்வாகஸ்தரையும் நான் எக்காலத்திலும் பகைத்ததே இல்லாததினால், அவர் என்னை நேசிக்காதவராய் காணப்பட்டாலும் நான் அவரை காண்கின்ற போதெல்லாம் நானே அருகில் சென்று அன்னாரின் முதுகை தட்டிக்கொடுத்து வணக்கம் சொல்வதையும் இன்று வரை வழக்கமாக கொண்டுள்ளேன்.
நாசரேத் ஜெப ஐக்கியத்தின் மந்த காலம் :
சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்களின் இரண்டாம் மகன் (எனது மருமகன்) ஓபேத் சென்னையில் ஒரு வாகன விபத்தில் 22/07/2002-யில் இறந்து விட்டார். இது சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்களை பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டதோடு, அவருடைய சரீரத்திலும் பல பெலவீனங்களை ஏற்படுத்தி விட்டன. நாளடைவில் அவர்களின் மனைவி, இதர பிள்ளைகளும் யாவரும் குடும்பமாய் தன் சொந்த மகனும் சகோதரனுமான காலஞ்சென்ற சகோ. ஓபேத் அவர்களின் குடும்பத்தினரை அதாவது (எனது மகள்), அவர்களின் மருமகளின் குடும்பத்தினரை நிரந்தரமாய் ஒதுக்கியும் வைத்து விட்டார்கள். இன்று வரை அவர்களின் மருமகளையும் அவர்களின் பிள்ளைகளையும் விசாரிப்பதும் கிடையாது. நாசரேத் ஜெப ஐக்கியம் ஒரு ஸ்தம்பிக்கும் நிலமைக்குள் தள்ளப்பட்டு விட்டது. ஐக்கிய மூத்த சகோதரர்கள் சிலர் இந்த ஜெப ஐக்கியத்தைக் கைப்பற்ற முயற்சி செய்துள்ளார்கள். ஆனால் தேவன் இதனை அனுமதிக்காததினால் தோல்வி கண்டார்கள்.
சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்களும் பெலவீனப்பட்டதால் நாசரேத் ஜெப ஐக்கியத்தின் அன்றாட காரியங்களையும் அன்னாராலும் கவனிக்கக் கூடாமற் போயிற்று. இதனை மிகவும் அதிகமாய் கண்காணித்து வந்த நான் அன்பின் சகோதரனையும் அழைத்துக் கொண்டு வேலூர் சென்று அங்குள்ள CMC ஆஸ்பத்திரியில் தக்க சரீர பரிசோதனை செய்து வியாதி நீங்க மருத்துவம் பெறச் செய்தேன். இதனை ஆண்டவர் மாத்திரமே செய்யப் பண்ணினார். பின்பு தானே அன்னாரின் பிள்ளைகள் வேலூர் மருத்துவக் கல்லூரியினை அறிந்து அதிலே சேர்ந்து கல்வி கற்கலானார்கள். சில ஆண்டுகளுக்கு பின்பு சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்கள் மறுபடியும் சுகவீனமடைந்தார்கள். அதனால் நாசரேத் ஜெப ஐக்கியத்திற்கு வந்து போகவும், கவனிக்கவும் கூடாத நிலைமைக்குள் தள்ளப்பட்டார்கள்.
சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்களும் தன் கண் பார்வையை இழந்தும் தனது சிறுநீரகமும் செயலற்றதுமான நிலமைக்குள் தள்ளப்பட்டார்கள். வேலூர் சி.எம்.ஸி. மருத்துவமனையில் சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்களும் சேர்க்கப்பட்டார்கள். அன்னாருக்கு மருத்துவமனையில் வேண்டிய அனைத்து உதவிகளையும் சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்களின் மகன் டாக்டர். ஜாண் பிளச்சர் (Dr. John Fletcher) அவர்களே நேரடியாக கவனித்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்களுக்கு அவசரமாய் இரத்தம் கொடுக்க வேண்டிய நிலமையும் நேரிட்டது. அச்சமயம் சகோ. மைக்கேல் அவர்களின் மனைவி திருமதி. ஜெபக்குமாரி மைக்கேல் மற்றும் அன்னார்களின் பிள்ளைகள் ஒட்டு மொத்தமாய் இரத்தம் கொடுக்க மறுத்து விட்டார்கள். இறுதியாக டாக்டர். ஜாண் பிளச்சர் அவர்களே முன் வந்து தன் இரத்தத்தை கொடுத்தார்கள். சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்களின் நிலமை இன்னும் மோசமாகி கோமாவுக்குள்ளும் பலமுறை தள்ளப்பட்டார்கள். அவ்வமயம் அவர் மனக்குழப்பத்திற்குள்ளாக்கப்பட்டு உளரவும் தொடங்கினார்கள்.
பின்பு சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்களின் சுகவீனம் இன்னும் அதிகப்பட்டதால் மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களாக நாசரேத்துக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் மரணப்படுக்கையில் சற்று சுயநினைவோடு இருக்கையில் அன்னார் அறிய மாதத்தின் கடைசி ஞாயிறு ஊழியமாக தொண்டிக்கு செல்லும் முன்பாக நான் சகோ. மைக்கேல் அவர்கள் முன்பாக வந்து, சார் என்று அழைத்து இன்று தொண்டிக்கு போகும் நாள், நான் யாவரையும் அழைத்துக் கொண்டு செல்லுகின்றேன் என்று கூறி ஜெபிக்கையில் சகோ. மைக்கேல் அவர்களின் தலையின்மீது என்னை அறியாதவனாய் தேவனால் தைரியமாக்கப்பட்டவனாய் நான் கைவைத்து ஜெபித்து அன்னாரை ஆண்டவரிடம் முழுவதுமாய் ஒப்புவித்தவனாய் தொண்டிக்குப் புறப்பட்டோம். இதுவரையிலும் ஐக்கியத்திலுள்ள எவர்களும் சகோ. மைக்கேல் அவர்களின் தலையில் கை வைத்து ஜெபித்தது கிடையாது. அன்னார்தான் யாவருடைய தலையிலும் கைவைத்து ஜெபிப்பது வழக்கம். ஆனால் அன்று நான் ஜெபித்து சென்றது எலியாவின் ஆவி எலிசாவின் மீது வந்து இரட்டிப்பான பெலத்தோடு அவன் தன் வழியே சென்றது போன்று நானும் மிக தைரியத்தையும் பெலத்தையும் தேவனிடமிருந்து பெற்றவனாய் யாவரையும் சேர்த்துக்கொண்டு என் காரிலே அதனை நானே ஓட்டிக்கொண்டு தொண்டிக்கு ஊழியமாய் பயணித்தோம். இதுவே நானும் சகோ. மைக்கேல் அவர்களும் சந்தித்த கடைசி சந்திப்பாகும். இதுவரையிலும் நாசரேத் ஜெப ஐக்கியத்தோடு இருந்த நாட்களிலெல்லாம் நான் இது போன்று செயல்பட்டது கிடையாது. ஆனால் அன்று தேவன் விசேஷமாய் என் மீது பொழியப்பண்ணி அளித்த அதே தேவ தைரியமும் தேவ பெலனுமே இன்று வரை என்னைத் தாங்கி இந்த ஜெப ஐக்கியத்தின் எல்லா ஊழியங்களையும் நடத்திடச் செய்து வருகின்றது என்பதே உண்மையிலும் உண்மையாகும். தேவன் ஒருவருக்கே கனமும் மகிமையும் உண்டாவதாக.
சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்கள் என்னுடைய சம்மந்தராக, இனத்தவராக இருந்திருந்தாலும் நான் அவர்களை இனத்தவராக ஒருபோதும் எண்ணியதும் கிடையாது. எண்ணினவனாய் நானோ என் மனைவி பிள்ளைகளோ ஒரு நாள் கூட அவர்கள் வீடு சென்று விருந்துண்டதும் கிடையாது. ஐக்கியத்தின் அனைத்து சகோதரர்களும் விசேஷமாக அனைத்து மூத்த சகோதரர்களும் சகோ. மைக்கேல் அவர்களின் வீட்டின் எல்லா அறைகளுக்குள்ளும் சென்று வருவதுமாயிருந்தார்கள். ஆனால் நானோ வீட்டின் முன் விராண்டாவைத் தவிர எதனையும் அறியேன். நான் மனந்திரும்பின நாள் முதல் கடைசி வரையிலும் சார் (Sir) என்று மாத்திரமே அவர்களை அழைத்துள்ளேன். ஆவிக்குரிய சிந்தையோடு மாத்திரமே அவர்களோடு கடைசி வரையிலும் பழகியும் உள்ளேன்.
சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்கள் கண்பார்வை இழந்து அதிக பெலவீனப்பட்டு படுக்கையில் இருந்தபோது ஐக்கியத்தில் அதிக வருட காலமாக நிரந்தரமாய் பணிபுரிந்து வந்த சகோதர, சகோதரிகள் தங்களுக்கு நியாயப்படி வரக்கூடிய தொகைகளையும் தங்கள் பங்காக செலுத்தப்பட்ட சில ஐக்கிய ஆஸ்திகளையும் கேட்டு சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்களோடு போராடவும் ஆரம்பித்தார்கள். இதன் காரணமாக சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்கள் நாசரேத் ஜெப ஐக்கியம் மூடப்பட்டு விட்டது என்று தம் வாயினாலேயே தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட பல நெருக்கங்களின் காரணமாக அறிக்கையும் வெளியிட்டார்கள். ஆனால் தேவனுடைய சித்தத்தின்படிக்கு நாசரேத் ஜெப ஐக்கியம் மூடப்படவில்லை . தேவனுடைய அநாதி தீர்மானத்தின்படிக்கும் எனது தாயாராகிய சகோதரி. ஜெமி ஜேக்கப் அவர்களிடம் ஆண்டவர் தாமே ஏற்கனவே கூறிய வாக்குப்படிக்கும் “இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது; உன்னையும் உன் வீட்டாரையும் அல்லவா" என்ற வேதவாக்குப்படிக்கு நாசரேத் ஜெப ஐக்கியத்தின் பொறுப்பு என் மீது சுமத்தப்பட்டது. என்னுடைய பொறுப்பில் ஐக்கியத்தின் எல்லா ஊழியங்களும் ஒரு நாள் கூட தடைபடாமல் நடத்தப்பட்டன.
சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்களின் அந்திய காலத்தில் கண் பார்வை இழக்கப்பட்ட நேரத்தில் அன்னாரின் குடும்பத்தினர்கள் யாவருமாய் ஐக்கியத்தின் சகல நிதி நிலுவைகளையும், சொத்துக்களையும் ( 9 வீடுகள், 3 காலிமனைகள்) கையகப்படுத்தும் எண்ணத்தோடு 3 முறையாக மரண உயிலை மாற்றி மாற்றி எழுதியுள்ளார்கள். இரண்டை நாசரேத்திலும், ஒன்றை பாளையங்கோட்டையிலுமாக பதிவு செய்துள்ளார்கள். யாவற்றிலும் சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்களின் கைவிரல் ரேகை அடையாளமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலுள்ள ஷரத்துக்களை சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்கள் அறியவில்லை என்று தான் எண்ணுகின்றேன். தேவன் மாத்திரமே அவற்றினை அறிவார்.
பின் அவர் தன் சுய நினைவினை இழந்தவராக சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்கள் 16/09/2003 ஆம் நாள் அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள்.
ஐக்கியத்தின் பணிகளில் தங்களை நிரந்தரமாய் ஈடு செய்து வந்தவர்களுக்கு சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்களின் திடீர் மரணம் யாவரையும் கைவிடப்பட்டவர்களாக்கிவிட்டது. ஆனாலும் அன்னார்களின் உண்மையான உழைப்பையும் தியாகத்தையும் கண்ட தேவன் அன்னார்களை கைவிடாது அன்னார்களையும் அன்னார்களின் மனைவி பிள்ளைகளையும் ஆசீர்வதித்து, இன்று வரை யாவரும் ஆசீர்வாதமான பாதைகளில் செழிப்புடன் நடத்தப்பட்டு வருகின்றார்கள் என்பதே உண்மையாகும். அவர்கள் அனைவருமே இந்நாட்களில் அவரவர் சொந்த இடங்களில் ஆண்டவருக்காக நல்ல நல்ல பொறுப்பான ஊழியங்களைச் செய்து வருகின்றார்கள்.
சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்கள் காலத்திற்கு பின்பாக சகோ. ஜாசுவா ஞானதுரை அவர்களும் அதிகமாய் சுகவீனம் அடைந்து விட்டார்கள். இவர்கள் என் தங்கை சுசிலாவை திருமணம் செய்திருந்தாலும் நான் இந்த ஜெப ஐக்கியத்தோடு இருந்த காலங்களிலெல்லாம் நான் இவர்களை என்னுடைய ஆவிக்குரிய மூத்த சகோதரனாக சொந்த அண்ணனாகவே கருதி ஐக்கியம் கொண்டிருந்தேன். இவர்களே என்னை முதல் முதலாவதாக ஆண்டவருக்குள் வழி நடத்தினவர்களாவார். இவர்களை அண்ணன் என்று மட்டுமே அழைத்து வந்தேன். அவர்களும் பிற சகோதரர்களைப் போன்றே என்னை பலமுறை கண்டித்ததுமுண்டு. நாசரேத் ஜெப ஐக்கியத்தின் தூணாக இருந்து அதனைத் தாங்கி வளர்த்து வந்த அன்பின் மூத்த சகோதரனான சகோ. ஜாசுவாஞானதுரை அவர்களும் 3/01/2005 ஆம் நாளிலே காலமானார்கள்.
நாசரேத் ஜெப ஐக்கியத்தின் மறுமலர்ச்சி :
சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்களின் மறைவுக்கு பின்பு தான் அவர்கள் எழுதி வைத்துள்ள 3வது உயில் தெரிய வந்துள்ளது. அதன்படிக்கு அன்னார்களுக்கு வீடுகள் ஆஸ்திகள் அதிகமாய் காணப்பட்டாலும் 10 சென்ட் காலியிடம் ஒன்று மட்டுமே சகோ. ஓபேத் அவர்களின் மகனுக்கும் (என் பேரனுக்கும்), காணிக்கை பணத்தினால் வாங்கப்பட்டு ஜெப ஐக்கிய கூடாரமாக அமைத்து பேணி வந்த 10 சென்ட் இடத்தை ஜெப கூடாரத்தின் ஊழியங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட ஸ்தலமாக கருதி அந்த கூடாரத்தை சகோ. ஓபேத் அவர்களின் மகளுக்குமாக (என் பேத்திக்கு) உயில் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 1963 ஆண்டு முதலாய் தேவ சித்தத்தின்படிக்கு ஊழியங்கள் நடைபெற்று வருகின்ற ஒரு ஜெபக்கூடாரம் எங்ஙனம் ஒரு பிள்ளைக்கு தானமாக அளிக்கக்கூடும்? தேவன் அதற்கு அனுமதி கொடுக்கக்கூடுமோ? எனினும் தேவனின் அநாதி தீர்மானத்தின்படிக்கே ஜெபக்கூடாரம் என் மைனர் பேத்தி பெயருக்கு அளிக்கப்பட்டதாலும், என் ஆயுள்வரை அதிலே நடைபெற்று வந்த ஊழியங்களை நானே பொறுப்பேற்று தொடர்ந்து நடத்துவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது என்று தானே கருதி நாசரேத் ஜெப ஐக்கியத்தின் சகல ஊழியங்களையும் அன்று முதல் நாளது வரையிலும் அவற்றினை நடப்பிக்க தேவனே எனக்கு கிருபை அளித்து வருகின்றார். ஆகவே தேவன் தாமே தமக்கு வாசஸ்தலமாக விரும்பி வாக்குப் பண்ணின ஜெபக்கூடாரமே இதர எல்லா ஆஸ்திகளை காட்டிலும் விலையேறப் பெற்றது என கருதுகின்றேன். ஆனாலும் நாசரேத் ஜெப ஐக்கியக் கூடாரம் என் பொறுப்புக்கு வருவதற்கு என் மகளின் குடும்பம் அநேக இழப்புக்களையும் சந்திக்க நேரிட்டது. இதுவே தேவ சித்தமும் ஆயிற்று.
நாசரேத் ஜெப ஐக்கியம் பெயரளவில் மூடப்பட்டது என்று அறிவிக்கப்பட்டதால் நாசரேத்திலுள்ள பெரும்பான்மையான சகோதரர்கள் ஐக்கியத்தை விட்டு விலகி தங்கள் தங்கள் வசதிக்கேற்ப தங்கள் தங்கள் பெயரில் ஆங்காங்கே தமிழகமெங்கிலும் இதர மாநிலத்திலும் ஊழியங்களை தொடங்க ஆரம்பித்தார்கள். ஆனால் நாசரேத் ஜெப ஐக்கிய கூடாரத்திலே நடைபெற்று வந்த ஊழியங்கள் 1963 ஆம் ஆண்டு முதலாய் இன்று வரை ஒரு நாளிலாவது நிறுத்தப்படாமல் நடைபெற தேவனே சித்தங்கொண்டு அதை நடத்தி வருகின்றார்.
நாசரேத் ஜெப ஐக்கியத்தின் பொறுப்பினை ஏற்று நடத்திய முதல் ஆண்டிலேயே ஐக்கியத்தின் சார்பாக ஒரு பேரின்ப பெருவிழாவினை நாசரேத்பேராலய வளாகத்திலே நடத்த ஏற்பாடு செய்தேன். சேலம் Dr. புஷ்பராஜ் அவர்களை தேவ செய்தி கொடுக்க அழைத்திருந்தேன். அக்கூடுகைக்காக நாசரேத் ஏஞ்சல் பாடகர் குழு என்று ஒன்றினை உருவாக்கி அவ்விழாவிலே பங்கு பெறச் செய்தேன். கூடுகையில் இரண்டு மேடைகளை அமைத்தேன். பாடகர் குழுவிற்கு ஒரு பெரிய மேடை, செய்தியாளருக்காக அலங்கரிக்கப்பட்ட ஒரு சிறு மேடை. இவ்வகை அமைப்பே பின் நாட்களில் நாசரேத்தில் நடைபெற்று வரும் எல்லா பேரின்ப பெருவிழாக்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இக்கூடுகையின் போது Dr. புஷ்பராஜ் அவர்களின் செய்திகள் மிகவும் அதிகமாய் பிரயோஜனமாயிருந்தது. நானும் அக்கூடுகையில் எனது சாட்சியினையும் கொடுத்தேன்.
நாசரேத் ஜெப ஐக்கியம் பல பிரிவுகளாக பிரிவதற்கு முன்பாகவே தேவ நடத்துதலின்படிக்கே சகோ. ஜாண் கோயில் பிச்சை அவர்கள் நாசரேத் ஜெப ஐக்கியத்தை விட்டு விலகி நாசரேத்திலேயே தனித்து ஜெப அறையை கட்டி நாசரேத் உயிர் மீட்சி ஜெபக்குழு என்ற பெயரில் ஊழியங்களைச் செய்யத் தொடங்கினார்கள். இன்று அவர்களின் ஊழியங்கள் வளர்ந்து பெருகி வருகின்றன. வருடம் ஒரு முறை பல ஊழியர்களை அழைத்து பேரின்ப பெருவிழாக்களை நாசரேத்தில் நடத்தி வருகின்றார்கள். அவர்களின் ஊழியங்களில் அநேகர் தேவனால் சந்திக்கப்பட்டு வருகிறார்கள். அநேக அற்புத அடையாளங்களும் அவர்கள் ஊழியங்களில் காணப்பட்டு வருகின்றன. நாசரேத் ஜெப ஐக்கிய கூடாரத்திலும் சில முக்கிய நாட்களில் அழைப்புக்கு இணங்கி வந்து தேவ செய்தி கொடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள். நானும் தனிப்பட்ட முறையில் சில இக்கட்டான வேளைகளில் சகோதரனிடம் வந்து ஜெப உதவி கேட்டு ஆவியில் பெலப்பட்டு வருவதையும் இன்று வரை வழக்கமாக கொண்டுள்ளேன்.
சகோ. தானியேல் ஜெ. ஜெசுதாஸ், நீலகிரி மாவட்டம் அவர்களும் நாசரேத் ஜெப ஐக்கியத்தை விட்டு விலகி பெங்களூரில் பரிசுத்த சுவிஷேச திருச்சபை என்ற தனி சபையை ஆரம்பித்து ஆண்டவருடைய ஊழியங்களை நல்ல முறையில் செய்து வருகின்றார்கள். அன்னாரின் பிள்ளைகளும் உதவி போதகர்களாக ஊழியங்களைச் செய்து கொண்டு வருகின்றார்கள்.
சகோ. ஆசீர்வாதம், தம்மநாயக்கன்பட்டி அவர்களும் நாசரேத் ஜெப ஐக்கியத்தை விட்டு பிரிந்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஒரு ஆலயத்தை கட்டி தனிச் சபையை வளர்த்து பல ஊழியங்களைச் செய்து வருகின்றார்கள்.
சகோ. R. ஸ்டேன்லி, நாசரேத் அவர்களும் நாசரேத் ஜெப ஐக்கியத்தை விட்டு பிரிந்து வேலூரில் பிளஸ்ஸோ என்ற மிஷனெரி இயக்கத்தை ஆரம்பித்துள்ளார்கள். அது இன்று உலகளவில் ஒரு பெரிய மிஷனெரி ஸ்தாபனமாக இயங்கி வருகின்றது. தற்போது சகோதரன் அந்த ஸ்தாபனத்திலிருந்து ஓய்வு பெற்று கௌரவ ஆலோசகராக பணிபுரிந்து வருகின்றார். சகோ. ஸ்டேன்லி அவர்களின் தகப்பனார் சுபேதார் ராஜமணி அவர்கள் நாசரேத்திலேயே, அவர்களுடைய வீட்டில் தனித்து இருந்து ஒரு சில ஊழியங்களை செய்து கொண்டு வந்தார்கள். திடீரென்று அவர்கள் சுகவீனமடைந்து மயங்கிவிட்டார்கள். உடன் தானே நானும் சில பேராக சேர்ந்து அவர்களை ஒரு கட்டிலில் கிடத்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கையில் வழியிலே மரித்து விட்டார்கள். அன்னாரின் சரீரம் நாசரேத்திலே அடக்கம் செய்யப்பட்டது. அதன் பின்பு சகோ. ஸ்டேன்லி அவர்களும் நாசரேத்திலுள்ள தன் வீட்டை விற்று விட்டு நிரந்தரமாய் வேலூரில் குடியேறிவிட்டார்கள்.
இவ்விதமாய் பலர் நாசரேத் ஜெப ஐக்கியத்திற்கு வந்து மனந்திரும்பி சத்தியங்களை கற்று, பின் ஐக்கியத்தை விட்டு விலகி தனித்து பெரிய பெரிய ஊழியங்களை செய்து சபை போதகர்களாக ஆவிக்குரிய மூத்த சகோதரர்களாக ஆங்காங்கே உலகமெங்கிலும் தேவனுக்காய் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் மூலமாய் ஆங்காங்கே தேவனுடைய நாமம் அதிகமாய் மகிமைப்பட்டுக் கொண்டே வருகின்றன.
நாசரேத்திலும் நாசரேத் ஜெப ஐக்கியத்திலிருந்து விலகிச்சென்ற சகோதரர்கள் நீங்கலாக மிச்சமுள்ள எஞ்சிய சகோதரர்களாக சிறு குழுவாக மட்டுமே நாசரேத் ஜெப ஐக்கிய கூடாரத்திலே நாசரேத் ஜெப ஐக்கியமாக தொடர்ந்து கூடி இன்றைய நாட்களில் நாசரேத் ஜெப ஐக்கியத்தினைப் பற்றி குறித்துள்ள தேவ திட்டங்களையும் ஆண்டவர் தாமே நடத்த விரும்புகின்ற ஊழியங்களை மட்டுமே இன்றைக்கு நாங்கள் செய்து வருகின்றோம். ஆதார ரீதியாக நாசரேத் ஜெப ஐக்கிய கூடாரம் என் மைனர் பேத்தி பெயருக்கு தானமாக உயிர் மூலம் அளிக்கப்பட்டிருந்தாலும் அவளுக்கு கார்டியனாகவுமுள்ள என் மகள் எஸ்தர் ஓபேத் அவர்களின் அனுமதியோடு நாசரேத் ஜெப ஐக்கியத்தின் ஊழியங்களை தேவசித்தத்தின்படிக்கே நானே பொறுப்புடன், உண்மையும் உத்தமுமாய் நடத்திவருகின்றேன். ஒரு சில சகோதரர்கள் உங்கள் பேத்தியின் பெயரிலுள்ள சொத்தில் (கூடாரத்தில்) நாசரேத் ஜெப ஐக்கியத்தின் ஊழியங்களை எங்ஙனம் தொடரக் கூடும் என்று வினாவினவர்களாக பிரிந்து சென்றும் விட்டார்கள். சாதாரணமான ஒரு உலக மனிதனாயிருந்தால் நான் இந்த ஜெப கூடாரத்தை மாற்றி விட்டு சிறு சிறு வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தால் என் பேத்திக்கும் மகளுக்குமாக ஓரளவு வருமானம் வரச் செய்திருக்கக் கூடும். ஆனால் தேவனுடைய அநாதி தீர்மானத்திற்கும் தேவ சித்தத்திற்கும் எதிராக எங்ஙனம் செயல்படுத்தக்கூடும்? கூடாதே.
எப்படியாயினும் உண்மை நிலைவரப்படிக்கு சகோ. மைக்கேல் செல்லத்துரை அவர்கள் கூறியபடிக்கு ஐக்கியத்தோடுள்ள அன்னாரின் தலைமை மட்டுமே முடிவுக்குள் வந்துள்ளது. ஆனால் நாசரேத் ஜெப ஐக்கியம் அவர் தலைமையில் மட்டுமே தொடங்கப்பட வில்லையே. தேவன் தாமே இந்த ஐக்கியத்தை அவருடைய அநாதி தீர்மானத்தின்படிக்கே அதற்கான பல பேர்களை முன் அறிந்து ஆரம்பிக்கச் செய்திருக்கையில் யாரால் இதனை மூடச் செய்திடக்கூடும். கூடாதே. ஆகவே தேவன் தாமே ஆரம்பித்து வைத்துள்ள நாசரேத் ஜெப ஐக்கியத்தின் ஊழியங்களின் தொடர்ச்சியினையே தேவ சித்தத்தின்படிக்கே நான் இன்றுவரை செய்து வருகின்றேன் என்ற உண்மையை யாவருக்கும் அறிவிக்கின்றேன். இந்த உண்மை நாசரேத் ஜெப ஐக்கியத்தில் இன்றைக்கும் இதன் பலனான கனிகளினாலே உலகமெங்கிலும் அங்கிகரிக்கப்பட்டும் அறியப்பட்டும் வருகின்றன.
நாசரேத் ஜெப ஐக்கியத்தில் தேவனே விளைவித்த கனிகளில் சில :-
மாதத்தின் முதல் ஞாயிறு அன்று சாத்தூர் பகுதியிலுள்ள ஆலயங்களில் ஊழியங்கள் செய்து வரும் வழக்கத்தின்படிக்கு ஒரு ஞாயிறு தம்மநாயக்கன்பட்டி ஆலயத்தில் தேவசெய்தி கொடுத்தேன். ஆராதனையை முடித்து வெளியே வரும்போது பெருங்கூட்டம் ஒன்று எங்களை சந்திக்க காத்திருந்தது. விசாரிக்கையில் ஒரு 8 வயது சிறுவன் ஒருவன் மருத்துவரால் கைவிடப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளான். வீட்டிலே அவனைக் கிடத்தியிருந்தார்கள். மரித்துக் கொண்டிருந்தான். அவனுக்காக ஜெபிக்க அழைத்தார்கள். கிராமம் முழுவதுமாய் கூடிவிட்டது. இதுவரையிலும் இதுபோன்ற நிலமையில் நான் ஜெபித்தது கிடையாது. எனக்கு விசுவாசமே இல்லை. ஆனால் ஜெபித்தேன். ஆண்டவரே நீர்தாமே இன்று இங்கிருந்திருந்தால் உம்மால் யாவும் கூடும். ஆனால் நானோ யாதும் அறியாதவனாய் இருக்கின்றேன். உதவி செய்யும், வெட்கமடையச் செய்திடாதீரும் என்று மட்டுமே ஜெபித்து வீட்டிற்குள் சென்றோம். யாவரும் எங்கள் முகத்தையே நோக்கிப் பார்த்தார்கள். ஆரம்பமாக என் தம்பி குணசிங்கை ஜெபிக்கக் கூறினேன். அவனோ சில தேவவசனங்களை கூறி விசுவாசத்தோடு ஜெபித்தபின்பு தான் எனக்குள்ளும் விசுவாசம் வந்தது. நானும் விசுவாசமுள்ளவனாய் மரணத்தை கண்டித்து ஜெபித்து முடித்து வீடு திரும்பினோம். மறுமாதம் முதல் ஞாயிறு அந்த ஆலயத்திற்கு செய்திகொடுக்க வந்தேன். அந்தபையனைக் குறித்து விசாரிக்க பயமாயிருந்தது. மரித்துப் போயிருப்பானோ, ஜெபம் என்னவானது என்ற கலக்கத்துடன் செய்தியை முடித்து ஆலயத்தை விட்டு வெளியே வருகையில் அச்சிறுவனும் அவன் தாத்தாவும் பலருடன் சேர்ந்து எங்களை வரவேற்றார்கள். மிகவும் ஆச்சரியப்பட்டோம். மறுமாதத்தில் அவனே காணிக்கை பையை சுமந்து யாவரிடமும் காணிக்கை பெறுகிறவனாயும் ஆலயத்திலே காணப்பட்டான். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. இதுபோன்று சென்ற இடங்களிலெல்லாம், அருப்புக்கோட்டை பகுதிகளிலும், தொண்டியிலும், நான்சச் எஸ்டேட்டிலும் தேவன் ஆயிரமாயிரம் அற்புதங்களை செய்து கொண்டே வருகின்றார். எதனையுமே நாங்கள் விளம்பரம் செய்வதே கிடையாது. தேவன் எங்களோடு இருக்கிறார் என்ற சந்தோஷம் மட்டுமே போதுமானதாயிருக்கிறது ஆமென்.
நாசரேத் ஜெப ஐக்கியத்தின் (மறுமலர்ச்சியின்) கனியாகிய சத்திய வெளிச்சம் :
இந்நிலமையில் சகோ. ஜாண் கோயில் பிச்சை அவர்கள் என்னை ஒரு மாதாந்திர பத்திரிக்கையைப் நாசரேத் ஜெப ஐக்கியத்தின் சார்பில் ஆரம்பிக்க நிர்பந்தித்தார்கள். அன்னாரின் ஆலோசனைப்படிக்கே ஆரம்ப நாட்களில் ஐக்கியத்தின் சார்பில் பிரசுரிக்க விரும்பப்பட்ட மாதாந்தர பத்திரிக்கை சத்திய வெளிச்சம் என்ற பெயர் அன்றைக்கு பதிவு செய்யக்கூடாமல் நிராகரிக்கப்பட்டாலும் இன்று அந்த பெயர் சத்திய வெளிச்சம் என்று பதிவு செய்யப்பட்ட நிலைமையில் 3000 பிரதிகளுக்கு மேலாக தமிழ் மொழியிலும் பின்பு சில வருடங்கள் கழித்து 1000 பிரதிகள் மலையாள மொழியிலும் ஒவ்வொரு மாதங்களிலும் சத்தியமே வெளிச்சமாக பிரசுரிக்கப்பட தேவாதி தேவனே கிருபை கூர்ந்து வருகின்றார்.
மலையாளத்தில் சத்திய வெளிச்சம் பிரசுரிக்கப்பட ஆண்டவரே வழிவகுத்து கொடுத்தார். எப்படியெனில் கிழக்கு கேரளா சி.எஸ்.ஐ திருமண்டல பேராயரும், சி.எஸ்.ஐ. முன்னாள் சினாடு மாடரேட்டருமான Rt.Rev.Dr. K.J. சாமுவேல் அவர்களின் உதவியினால் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் புதிதாக உருவாகியபோது நான் அதற்கு முக்கிய காரணமாக அதிகமாக பிரயாசப்பட்டவன். அதனால் மாடரேட்டர் அவர்கள் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் அடிக்கடி சென்று வந்துள்ளேன். இதனால் எங்களுக்குள் ஆன்மீக நட்பு உறவு ஏற்பட்டது. நாசரேத் ஜெப ஐக்கியத்தினை பொறுப்பேற்ற முதல் வருடத்தின் இறுதி தியானக் கூடுகையின் போது கனம் பேராயர் அவர்களை ஜெப கூடாரத்திற்கு அழைப்பித்து ஆரம்ப ஜெபம் செய்யவும், ஆரம்ப செய்தியையும் கொடுக்கச் செய்ததினால் அவர்கள் நான் செய்துவரும் ஊழியங்களைப்பற்றியும் என்னையும் நன்கு அறிந்திருந்தார்கள். அதோடு பேராயர் அவர்களின் சொந்த மாவட்டமான கேரளா இடுக்கி மாவட்டத்திலுள்ள எல்லா ஆலயங்களிலும் என்னை ஊழியங்களில் பயன்படுத்தவும் அனுமதி வழங்கியிருந்தார்கள். அதன்படிக்கு ஒரு மாதத்தில் பேராயர் அவர்களின் சொந்த கிராம ஆலயத்தின் விசேஷ வைபவத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் உபவாச கூடுகையில் செய்தி கொடுக்க நான் அழைக்கப்பட்டேன். நாசரேத் ஜெப ஐக்கியத்திலிருந்து ஐந்து பேர்கள் கேரளாவிற்கு சென்றோம். அந்த கூடுகை வேளையில் அநேக தமிழ் மக்கள் பங்கு பெற்றார்கள். அநேகர் மனந்திரும்பி தங்களை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார்கள் சனிக்கிழமையோடு உபவாச கூடுகை முடிந்தது. இரவில் யாவரும் உணவு சாப்பிட்டோம். அன்று இரவு வீடு திரும்பும் வேளையில் ஆலயப் போதகர் மறுநாள் காலை ஞாயிறு ஆராதனையிலும் செய்தி கொடுக்க என்னை கட்டாயப்படுத்தினார்கள். ஞாயிறு இரவு பண்டிகை ஆராதனையில் பேராயர் அவர்கள் கலந்து கொள்ளுகிறார்கள் என்றும் கூறினார்கள். நானும் காலை ஆராதனையில் செய்தி கொடுக்க சம்மதித்து ஆயத்தமானேன். ஞாயிறு காலை ஆலயம் நிரம்பிவிட்டது. பாடகர் குழு வரிசையில் நின்றார்கள். கடந்த மூன்று நாட்கள் உபவாச கூடுகையில் இவர்களில் பெரும்பாலோர் பங்கு பெறவில்லை. எனக்கும் ஆலயத்தில் இத்தனை பேர்கள் உண்டா என்றும் ஆச்சரியமாயிருந்தது. ஆராதனை மலையாளத்தில் தொடங்கியது. ஆராதனை முறைமைகள் யாவும் மலையாளத்தில் இருந்தது. செய்தி வேளைக்கு முன்பாக என்னை போதகர் அறிமுகப்படுத்தி செய்தி கொடுக்க அழைத்தார்கள். தேவ செய்திக்கான வசனத்தை தமிழில் வாசித்தேன். மலையாளத்திலும் வாசிக்கவும் கூறினேன். சிறு ஜெபத்திற்கு பின் செய்தியினை தொடர்ந்தேன். தேவ ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தேன். ஓரளவு சிறு சிறு மலையாளம் தெரிந்ததினால் ஆவியானவர் சுமார் ஒரு மணி நேரம் மலையாள மொழியிலேயே கண்ணீரோடு தேவ செய்தி கொடுக்கச் செய்தார். இதுவே என் வாழ்நாளில் முதல் மலையாள செய்தியாகும். செய்தி நிறைவு பெற்றதும் என் களைப்பின் காரணமாக முடிவு ஜெபத்தை போதகர் அவர்களை நடத்த கேட்டுக் கொண்டேன். அவர் சுமார் 20 நிமிடம் சத்தமாய் அழுது ஜெபித்து நிறைவு செய்தார். ஆலயத்தில் அநேகர் அழுது ஜெபித்தார்கள். ஆண்டவரின் அசைவு ஆலயத்தை நிரப்பிற்று.
அதனைத் தொடர்ந்து பின்நாட்களில் கேரளா இடுக்கி மாவட்டத்தில் சில கிராமங்களின் ஆலயங்களில் செய்தி கொடுக்க அழைக்கப்பட்டிருந்தேன். ஒரு நாள் ஆலயத்தில் மூன்று நாட்கள் கூடுகையில் என் சாட்சியோடு கூட தேவசெய்தி கொடுத்தேன். அன்று முன் வரிசையில் ஒரு குடும்பம் இருந்தது. ஒழுங்காக எல்லா நாட்களிலும் கூடுகைக்கு வந்திருந்தார்கள். இறுதி நாளில் அவர்கள் குடும்பமாக மனம் திரும்பி ஆண்டவருக்கு முன் வந்து ஒப்புக் கொடுத்தார்கள். அவர் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் ஆவார். குடும்பத்தில் அதிக பிரச்சனை, வேலையில் சில காரணங்களுகாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்கள். குடும்பத்தில் வருமானம் இல்லை. தற்கொலை வரைக்கும் முடிவு செய்திருந்த நாட்களில் அவர்கள் குடும்பமாக ஆண்டவரை ஏற்றுக் கொண்டார்கள். இவர் கேரளா இடுக்கி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் வேலை செய்கிறவராக இருந்தாலும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவர். இவர் பெயர் சகோ. ஷீன் சைரஸ், மலையாள ஆசிரியர், இவருடைய மனைவி சகோதரி. ஹெலன் ஷீன் தமிழ் ஆசிரியை. இவர்கள் கூட்டத்தின் நிறைவு நாளில் குடும்பமாய் முன் வந்து ஜெபித்த வேளையில் அவர்களாகவே நாசரேத் ஜெப ஐக்கியத்தின் சார்பில் வெளியிடப்பட்டு வரும் சத்திய வெளிச்சம் என்ற தமிழ் பத்திரிக்கையின் மலையாள ஆக்கத்தை அவர்களே செய்து தர விரும்புவதாக தெரிவித்தார்கள். இதுவரையிலும் எங்களுக்கு இந்த விதமான மலையாள பதிப்பின் எண்ணம் எங்கள் உள்ளத்தில் தோன்றியதே இல்லை. அவ்வேளையில் தானே தேவனே அதற்கு ஒப்புதல் அளிக்கச் செய்தார். அன்று முதல் இன்று வரை சகோதரன், சகோதரி இருவருமாய் ஐக்கியத்தின் பத்திரிக்கையின் மலையாள பதிப்பு ஊழியத்தை இலவசமாக செய்தும் அவற்றிலே தங்களுடைய தேவ செய்திகளையும் இன்று வரை அளித்தும் வருகிறார்கள். இதனை தேவன் மாத்திரமே ஏற்பாடு செய்து ஆரம்பிக்கச் செய்துள்ளார். அவர் ஒருவருக்கே கனமும் மகிமையும் உண்டாவதாக, பின்பு எங்களுடைய அதிகமான ஜெபத்தினாலும், பிரயாசத்தினாலும் சகோதரர் சைரஸ் அவர்களுக்கு திரும்பவும் ஆசிரியர் பணி கிடைக்க தேவனே கிருபை செய்தார். இதனால் இடுக்கி மாவட்டத்திலே அநேக ஆலயங்களில் உபவாச கூடுகைகள் தியானக்கூடுகை, பெரிய வார ஊழியங்கள் நடைபெறலாயிற்று. அநேகர் ஆண்டவரை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். கேரளா இடுக்கி மாவட்டத்தில் மட்டும் சுமார் 500 மாதாந்திர பத்திரிக்கை பிரசுரிக்கப்படலாயிற்று. கடந்த 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெருமழை பேரழிவில் இடுக்கி மாவட்டம் அதிகமாய் பாதிக்கப்பட்டதை யாவரும் அறிவர். ஆனால் நாங்கள் இதுவரையில் ஊழியம் செய்து வந்த பகுதிகள் இப்பேரழிவில் இருந்து காக்கப்பட்டுள்ளன என்று அறிந்து தேவனை ஸ்தோத்தரிக்கின்றோம். தற்போது ஷீன் குடும்பத்தினர் இடுக்கி மாவட்டத்திலிருந்து பணிமாற்றம் கிடைக்கப்பெற்று திருவனந்தபுரம் மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் மலையாள ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தன் சொந்த வீட்டுக்கு அருகாமையிலே குடியேற்றப்பட்டுள்ளார். ஆண்டவர் ஒருவருக்கே துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக. இதுவும் ஜெப ஐக்கியத்தின் மறுமலர்ச்சியில் விளைந்த பிரதான கனியாகும்.
பத்திரிக்கை ஊழியத்தின் வரவு செலவு கணக்குகள் வருடம் ஒருமுறை வெளியிடப்பட்டும் வருகின்றன. இதில் வரும் செய்திகளையும் இதர செய்திகளையும் மாதம் இருமுறையாகவோ அல்லது மூன்று முறையாகவோ கூகுளில் (on line) sathiyavelicham.page என்ற இணையதளம் வாயிலாக கம்யூட்டர் (Desk-top) அல்லது மொபைல் மூலம் உலகமெங்கிலும் உள்ள சகோதரர்கள் மற்றும் தமிழர்கள் கண்டு வாசித்தறிகின்றார்கள். இதனால் அநேகர் ஆவிக்குரிய விழிப்புணர்வு பெற்றவர்களாக சாட்சிகள் பல அறிவித்தும் வருகின்றார்கள். இந்த இணையதள பதிவேற்றம் பற்றி எனக்கு எந்த எண்ணமும் விருப்பமும் இல்லாத நாட்களில் டெல்லியிலிருந்து அறியப்படாத எண்ணிலிருந்து பல முறையாக கைப்பேசி அழைப்பு வந்த வண்ணம் இருந்தது. பின்பு பல மாதங்கள் கழித்து தொடர்ந்து அந்த அழைப்பிலிருந்து இணையதளம் பதிவேற்றம் பற்றி ஆலோசனை அளிக்கப்பட்டது. தற்போது இணையதளத்தில் ஐக்கியத்தின் சத்திய வெளிச்சம் என்ற தமிழ் மாதாந்தர பத்திரிக்கையானது தொடர்ந்து இலவசமாய் பதிவேற்றம் செய்யப்பட்டு ஊழியங்களாய் நடைபெற்று வருகிறது. இதுவும் தேவனுடைய கிருபை மாத்திரமே ஆகும். இதுவும் நாசரேத் ஜெப ஐக்கியத்தின் மறுமலர்ச்சியில் விளைந்த மற்றொரு கனியாகும்.
புத்துணர்ச்சியடைந்த நாசரேத் ஜெப ஐக்கியம் :
நாசரேத் ஜெப ஐக்கிய கூடாரத்திலே வெள்ளிக்கிழமை தோறும் அன்று முதலாய் நடைபெற்று வந்துள்ள விடுதலைக்கூடுகைகள் மாலை 8 மணி அளவில் இன்றுவரை நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை இரவு தோறும் ஆண்களுக்கான உபவாச கூடுகைகள் ஜெப கூடாரத்தில் நடைபெற்று வருகின்றன. வாராந்தர ஊழியங்களாக அன்றைய நாட்களில் நடைபெற்ற இடங்களுக்கெல்லாம் எங்களால் செல்லக் கூடாதமையினால் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சாத்தூர் பகுதியிலுள்ள ஐக்கிய சகோதரர்களை சந்தித்து ஊழியங்களை செய்து வருகின்றோம். மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் அருப்புக்கோட்டை பகுதியிலுள்ள சகோதரர்களை சந்தித்து ஊழியங்களை செய்து வருகின்றோம். சில வாரங்களில் ஊட்டி பகுதிக்கும் சென்று ஊழியங்களை செய்து வருகின்றோம்.
வேலூர் மாவட்டத்திலே நாசரேத்தை அடுத்துள்ள நாலுமாடியைச் சார்ந்த சகோ. வசந்த் ராஜ் என்பவர்கள் நாசரேத் ஐக்கியத்திலே மனந்திரும்பினவர். இவர் வேலூர் மாவட்டத்திலே குடியிருந்து வருவதினால் நாசரேத் ஜெப ஐக்கியத்தினரை வேலூர் மாவட்டத்திற்கு அழைத்து அநேக இடங்களிலே கூடுகைகளை நடத்தி வருகின்றார். தற்சமயம் சகோ. வசந்த் அவர்களே ஆசிரியரான என்னோடு பக்கத்துணையாயிருந்து ஆண்டவரின் நடத்துதலாய் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்படுகின்ற வெளியிடத்து விசேஷ ஊழியங்களில் வேலூரிலிருந்து அவ்வப்போது வந்து ஊழியங்களைத் தாங்கியும் துணையாயும் இருந்து வருகின்றார். ஆண்டவர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக.
சத்திய வெளிச்சம் என்ற பத்திரிக்கை வாயிலாகவே ஆயிரக்கணக்கானோர்களுக்கு நாசரேத் ஜெப ஐக்கிய தொடர்புகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. நாசரேத் ஜெப ஐக்கியம் இன்று அரசினரால் பதிவு செய்யப்பட்ட ஸ்தாபனமாக ஊழியங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனுடைய வரவு செலவு கணக்குகளும் வருடம் ஒருமுறை பத்திரிக்கை வாயிலாக உலகுக்கு வெளிப்படையாய் அறிவிக்கப்பட்டும் வருகின்றன.
எனினும், நாசரேத் ஜெ ஐக்கியத்தின் ஆரம்ப நாட்களில் நாசரேத் ஜெப ஐக்கியத்தின் கூடாரத்தினை குறித்ததான தேவனுடைய வார்த்தைகள் அன்றைய ஐக்கிய ஸ்தாபர்களிடையே முன்னறிவிக்கப்பட்டதாவது, " கர்த்தர் சீயோனை தெரிந்துக் கொண்டு தனக்கு வாசஸ் தலமாகும்படி விரும்பினார். இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம். இதை நான் விரும்பினபடியால் இங்கே வாசம் பண்ணுவேன்” என்பதாகும். (சங்கீதம் 133:13,14) ஆகையினால் ஐக்கியம் மூடப்பட்டுள்ளது என்று அறிவிக்கலாகாதே. தேவனே யாவற்றிற்கும் ஆதியும் அந்தமுமாய் இருக்கின்றார். ஆகையினால் 50 ஆண்டுகளாக சிறப்பாய் நடைபெற்று வந்த நாசரேத் ஜெப ஐக்கியம் மந்த நிலை அடையப் பெறுகையில் தேவனே ஐக்கியத்தினை மறுமலர்ச்சி அடையச் செய்கின்றவராக "யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர் பற்றி மேலே கனிகொடுப்பார்கள். அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்” என்ற வாக்கின்படிக்கு இன்றைக்கு நாசரேத் ஜெப ஐக்கியத்தினை தேவனே தலைமையேற்று நடத்தி வருகின்றார். இதற்கு எவரும் தலைவர் என்பது கிடையாது. இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட மந்த நிலைக்கான காரணங்களே இன்றைய நாட்களுக்கு எச்சரிப்புக்களாக விளங்கி வருகின்றன என்பதே உண்மையாகும். நாசரேத் ஜெப ஐக்கியத்தினை உண்மையாக நேசித்து ஜெபித்து வரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கு எங்களது அன்பின் நன்றியையும் வாழ்த்து தலையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அறிவித்துக் கொள்கின்றேன். இன்றைய நாட்களில் எங்களது ஊழியங்களை ஆதரித்தும், ஊழியங்களில் கலந்து கொள்ளும் அனைத்து சகோதர சகோதரிகள் தங்கள் தங்கள் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டவர்களாகவும் ஆவிக்குரிய மேன்மையான அரிய சத்திய உண்மைகளை கேட்டு வாழ்வில் வளர்ந்து வருவதைக் கண்டு மிகவும் அதிகமாய் சந்தோஷம் அடைகின்றோம். அவர்கள் அனைவருமே நாள்தோறும் அற்புத அடையாளங்களையும் நன்மைகளையும் ஏராளமாய் தங்கள் தங்கள் குடும்பங்களில், சரீரங்களில் அனுபவித்தும் வருகின்றார்கள். இத்தகையான அனைத்து தேவகிருபைகளையும் தேவன் தாமே அநாதி நாட்களுக்கு முன்பே ஆயத்தப்படுத்தி என்மீது சுமத்த சித்தங் கொண்டுள்ளார் என்பதை இன்று தானே அறிய முடிந்ததே தவிர கடந்த 50 ஆண்டுகளாக இதனை அறியாதவனாகவே ஒரு எடுபடியாகவே நாசரேத் ஜெப ஐக்கியத்தில் ஐக்கியம் கொண்டு வந்துள்ளேன் என்பதும் உண்மையே ஆகும்.
நாசரேத் ஜெப ஐக்கியத்தின் 50 ஆண்டு காலத்தினுள் முதற்பகுதி காலத்தில் தானே ஐக்கியம் ஒரே ஐக்கியமாக வளர்ந்து பெருகியதோடு எங்கும் எழுப்புதலைக் காண முடிந்தது. அதுபோன்று எழுப்புதல் இன்றுவரை எங்குமே காணமுடியவில்லை. அந்நாட்களில் ஐக்கியத்தலைவர்கள் மிகவும் அதிகமாக கனப்படுத்தப்பட்டார்கள். ஆனால் பின்நாட்களில் இந்த ஐக்கியத் தலைவர்கள் பேரிலான பக்தி சகோதரர்களிடையே தனிநபர் பேர்களினான பக்தியாக (Hero Worship) கடைசி நாட்களில் மாறிவிட்டதோ என்றும் சிந்திக்கத் தோன்றுகின்றது. ஏனெனில் அன்னார் இருவரும் மரித்த பின்பு தாங்களும் ஐக்கியத்தின் மூத்த சகோதரர்களே என்ற எண்ணத்தோடு இருந்த ஒரு சில சகோதரர்கள் நாசரேத் ஜெப ஐக்கியத்தை விட்டு பிரிந்து தனித்து தங்கள் தங்கள் பாணியிலே சொந்தமாய் தங்களுக்கான ஊழியங்களை செய்ய ஆரம்பித்தவர்கள் யாவருமே ஒட்டுமொத்தமாய், நாசரேத் ஜெப ஐக்கியம் என்ற ஒன்று இருந்தது என்ற எண்ணத்தினைக் கூடக் கொண்டிடாமல் அது அன்றே மூடப்பட்டு அழிந்துவிட்டது என்ற எண்ணத்திலேயே உறுதியாய் இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இதர சகோதரர்கள் எப்பொழுதும் போலவே இருந்து வருகின்ற சகோதர சகோதரிகளாக நாசரேத் ஜெப ஐக்கியத்தினை எப்பொழுதுமே நினைவு கூர்ந்தவர்களாக சமயம் / வாய்ப்பு கிடைத்தால் நாசரேத் ஜெப ஐக்கிய கூடாரத்தினை வந்து காணவும் அதிலே தற்போது நடைபெற்று வருகின்ற ஊழியங்களைப் பற்றி அவ்வப்போது விசாரிக்கவும், ஜெபிக்கவும், நேசிக்கவும் மறப்பதே இல்லை என்பதே உண்மையாகும், மேலும் தனித்து ஊழியங்களை செய்து கொண்டிருக்கும் மூத்த சகோதரர்களுக்குள்ளும், ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொள்ளக்கூடாமலும், விரும்பாமலும் தனித்தே ஊழியங்களை செய்து வருகின்றார்கள் என்பதும் உண்மையே. ஆனால் நாசரேத்திலுள்ள நாசரேத் ஜெப ஐக்கியமோ,எஞ்சிய சகோதரர்களாக சிறு குழுவினாராக காணப்பட்டாலும், ஆவிக்குரிய உயர்வான வாழ்வினை மட்டுமே அடைந்தாக வேண்டும், நாசரேத் ஜெப ஐக்கியத்தின் ஆரம்ப கால ஆவிக்குறிய சத்தியங்களில் தங்கள் அஸ்திபாரங்களை போட்டவர்களாக அதாவது ஆண்டவரோடு சஞ்சரித்தல் என்பது கூடுமா? ஆண்டவர் தாமே நாசரேத் ஜெப ஐக்கியத்தின் மீது கொண்டுள்ள தம் சித்தத்தை 100% பூரணமாய் அறிந்து அதிலே 100 % பூரணமாய் நடந்து கொண்டு நிறைவேற்றுவது எங்ஙனம் என்பதினை மட்டுமே அறிந்து அதனிலே வாழ்ந்து நிலைத்திட விரும்பி வருகின்றார்கள். மேலும் எவ்வகையிலும் ஆண்டவரின் நாமம் மகிமைப்பட்டாலே போதுமானது என்ற எண்ணமுடையவர்கள் மட்டுமே தற்போது, நாசரேத் ஜெப ஐக்கியம் என்பதில் நிலைத்தும் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மையிலே உண்மையும் ஆகும்.
கடந்த என்னுடைய 75 ஆண்டுகளின் வாழ்நாட்களில் எல்லாம் தேவனே என்னைத் தம் கரம் பிடித்து நடத்தி வந்திருக்கின்றாரே என்று இன்று தானே அதனை முழுமையாய் அறிகின்றேன். எத்தனையோ வீழ்ச்சிகளை என் வாழ்நாட்களில் சந்தித்துள்ளேன். ஆனால் தேவனோ எந்த வீழ்ச்சிகளிலும் என்னைக் கடைசி வரையிலும் கைவிடவே இல்லையே.
என் வாழ்வினை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம். (Four areas in my life) அவற்றின் நான்கு வாயிலினையும் திறந்தவர் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே. அவற்றின் மூன்று பகுதியின் வாயிலினையும் அடைத்தவர் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே. நான்காவதின் வாயில் இன்னும் அடைபடவில்லை. அதனை அடைக்கின்ற கோல் அதனை திறந்து விட்டவராகிய கர்த்தரின் கரத்திலேயே இருக்கின்றது. ஆமென். அன்று கர்த்தரே நோவாவை தம் சித்தத்தின்படிக்கே அவனுக்கான பேழையை உண்டாக்கச் செய்து அதன் வாயிலை அடைத்தவரும் திறந்தவரும் கர்த்தரே ஆவார். அதனைப் போன்றே என் மனந்திரும்புதலுக்கு பின்பாக என் வாழ்வினை 4 பகுதிகளாக பிரிக்கலாம். 1). 5 ஆண்டுகள் கேராளாவில் எஸ்டேட் பணி, அதனை நிரந்தரமாக்கிக் கொள்ளவில்லை. 2). பின்பாக கல்லூரியில் 2 ஆண்டுகள் மாத்திரமே ஆசிரியர் பணி, பின்பாக வங்கியில் 30 ஆண்டுகள் மற்றும் கைத்தொழில் பாடசாலையில் 2 ஆண்டுகள் அதன் தாளாளராக கௌரவ பணி (Service In Institutions). 3). வெளி நாட்டில் ஒரு ஆண்டு சேவை (My Service in Dubai). அதனையும் ஆண்டவர் தாமே உதறி போட்டிடவும் செய்தார். பணி எதுவும் இல்லாத இரு வருட நாட்களில் ரியல் எஸ்டேட் பணி (Real Estate Business) அதனையும் ஒரு பொருட்டாய் எடுத்துக் கொள்ளவில்லை. 4). இப்போது 2003 ஆண்டு முதலாய் நான் பொறுப்பேற்று (Charge De' Affairs) நடப்பித்து வருகின்ற இறை பணி. இதனையே தலைமையாய் கொண்டு ஆண்டவருக்காய் அர்ப்பணித்து வருகின்றேன். கடந்த காலங்களில் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக சென்று இழந்த வருஷங்களின் ஆவிக்குரிய பெலன்களை திரும்பப் பெற்று அதனை என் ஆயிளுக்குள்ளாகவே ஈடு செய்து முடித்திடவே பிரயாசப்படுகின்றேன். எந்த சூழ்நிலையிலும் ஆண்டவர் தாமே எனக்குத் தந்த வாழ்வுக்காக அவர் ஒருவருக்கே என் இருதய பூர்வமான நன்றியையும் ஸ்தோத்திரங்களையும் அவருடைய திருப்பாதங்களிலே சமாப்பிக்கின்றேன். ஆமென்.
இந்நாட்களில் தேவனுடைய அநாதி தீர்மானத்தின் படிக்கே நான் பொறுப்பேற்று நடத்தி வரும் எல்லா ஊழியங்களிலும் தேவனுடைய பிரசன்னத்தையும் தேவன் அளிக்கும் கிருபையையும் சத்தியத்தையும் அதிகமதிகமாய் கண்டு கேட்டு உணர முடிகின்றது. பங்கு பெற்று வருபவர்கள் அனைவருமே தேவன் தங்களோடு இடைப்பட்டார் என்றும், ஆசீர்வதிக்கப்பட்டோம் என்றும் தவறாது கூறி வருகின்றார்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஜெப ஐக்கிய கூடாரத்திலே சனிக்கிழமை இரவுதோறும் நடைபெற்று வரும் ஆண்களுக்கான உபவாச ஜெப கூடுகையிலும் கொடுக்கப்படும் தேவ செய்தியானது குறைந்த நேர செய்தியாயிருந்தாலும் அனைவரையும் உயிர்ப்பிக்கும் தியான செய்திகளாயும், எச்சரிப்பின் செய்திகளாயும் காணப்படுகின்றபடியினால் பங்கு பெறுகின்றவர்களுக்கு அவைகளை வாராந்தர தியானக் கூடுகை செய்திகளாகவே தேவன் தாமே நடப்பித்து வருகின்றார். ஆகையினால் பங்கு பெறுகின்றவர்கள் வாரந்தோறும் தங்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்விலே புதுப்பிக்கப்பட்டும் வாராந்தர படிக்கட்டிலே ஆவிக்குரிய ஜீவியத்திலே உயர ஏறுகின்றவர்களாய் காணப்படுகின்றவர்களான படியினால் அன்னார்களுக்கு இதுவரையிலுமாக நடைபெற்று வந்த வருடாந்தர தியானக்கூடுகை அவசியமில்லாததாயிற்று என்பதே உண்மையாகும். மேலும் மாதந்தோறும் வெளியாகி வரும் சத்திய வெளிச்சம் என்ற மாதாந்தர பத்திரிக்கையிலும் ஒவ்வொரு மாதங்களிலும் அவ்வப்போது தேவ செய்திகளை, சத்தியங்களை புதுமையாக தேவன் தாமே அளிக்காதபட்சம் அம்மாதம் பத்திரிக்கை பிரசுரிக்கப்படுவதில்லை என்று ஜெபித்து வரும் என் விண்ணப்பங்களை தேவன் தாமே கேட்டு ஒவ்வொரு மாதங்களிலும் தேவன் தாமே புதுப் புது கனிகளாக அளித்து வரும் தேவ செய்திகளையே பிரசுரிக்க கிருபை செய்து வருகின்றார். எங்களது ஊழியங்களினால் பயனடைந்தவர்களும், என்னை அறிந்து உண்மையாய் நாசரேத் ஜெப ஐக்கியத்தை நேசித்து வரும் சகோதர சகோதரிகளும் தேவனை மகிமைப்படுத்துகின்றவர்களாகவே இருக்கின்றார்கள். (கலா. 1:24), விசேஷமாக சகோ. பிச்சையா அவர்கள். இவர் விருதுநகர் அடுத்துள்ள சங்கரலிங்கபுரம் பகுதிக்கு எங்களை அழைத்து மாதாந்தர ஊழியங்களை நடப்பித்து வருகின்றார், அவர்களை அன்போடு வாழ்த்துகின்றோம். மேலும் அடுத்துள்ள கட்டனார்பட்டிக்கு எங்களை அழைத்து ஊழியங்களை நடப்பித்துவரும் சகோ கிறிஸ்டோபரையும் அன்புடன் வாழ்த்துகின்றோம். ஓ கோயில்பட்டியைச் சார்ந்த சகோ. அந்தோணியினையும் வாழ்த்துகின்றோம். அருப்புக்கோட்டையில் சகோ. அழகிரிசாமி அவர்களின் காலத்திற்கு பின்பும் அன்னாரின் மனைவி, பிள்ளைகள், மருமக்கள்மார்கள் யாவரும் ஒருமித்து மாதந்தோறும் எங்களை அழைத்து ஊழியங்களை நடப்பித்து வரும் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகின்றோம். அடுத்துள்ள கலியாணசுந்தரபுரத்திலும் சகோ. மைக்கேல் அவர்களின் காலத்திற்கு பின்பும் அன்னாரின் மகன், Ph.D. (Chemistry) படித்துக்கொண்டிருக்கும் சகோ. சாமுவேல், அன்னாரின் தாயார் சகோ.ரெஜினா அம்மையார், மாமி சகோ. வசந்தா தேவி, அம்மையார், அன்னாரின் உடன் பிறந்தவர்கள் மற்றும் சகோ. மாணிக்கராஜ், ஆலடிபட்டி சகோ. தாவிது யாவருமாய் ஒருமிக்க மாதந்தோரும் எங்களை அழைத்து உபசரித்து ஊழியங்களை நடத்த உதவிவரும் யாவரையும் அன்புடன் வாழ்த்துகின்றோம்.
இன்று நாசரேத் ஜெப ஐக்கியம் மறுமலர்ச்சி, புத்துணர்ச்சி அடையப் பெற்ற ஜெப ஐக்கியமாக தேவனே இதனை நடப்பித்தும் வருகிறார். இன்று இது அரசு பதிவு பெற்ற ஐக்கியமாகவும், ஐக்கியத்தில் எவ்வகையான பற்றாக்குறைவுகளும் நிலுவைகளும் இல்லாமலும் தேவன் தாமே நாசரேத் ஜெப ஐக்கியத்தை குறித்ததான ஆதிகாலமாய் தீர்மானித்திருந்த தம்முடைய முன் குறித்த தெய்வீக திட்டங்களை எங்கள் மூலம் நாசரேத் ஜெப ஐக்கியத்தினாலே செய்து கொண்டு வருவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். தேவன் தாமே முற்றும் முடிய ஆண்டவரின் வருகை மட்டுமாக ஆண்டரின் திரு சித்தத்தின் படிக்கே அவரின் மகிமைக்காகவே என்னைக் காத்திடுவாராக. நாசரேத் ஜெப ஐக்கியத்தினையையும் ஆண்டவரின் அநாதி தீர்மானத்தின்படிக்கே அவரே நடத்திச் சென்றிடுவாராக. ஆமென்.
என் வாழ் நாட்களிலெல்லாம் தேவனுடைய கரம் என்னோடிருந்து தேவன் தாமே செய்து வந்துள்ள சகல நன்மைகளுக்காகவும், அற்புதங்களுக்காகவும், நடத்துதலுக்காகவும் எங்கள் நன்றியையும் ஸ்தோத்திரங்களையும் ஆண்டவர் ஒருவருக்கே அவருடைய திருப்பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம். ஆமென். மாரநாதா.
Publisher & Editor Dr. Philip Jeyasingh, M.A., Ph.D. "Sathiya Velicham" Charge De' Affairs, Nazareth Prayer Fellowship Nazareth - 628 617 Tuticorin Dist. Mob: 9487547633, Email: philipjeyasingh@gmail.com